search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுவீரப்பட்டு ஏரிக்கரை உடைந்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது- பொது மக்கள் தவிப்பு
    X

    நடுவீரப்பட்டு ஏரிக்கரை உடைந்து கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது- பொது மக்கள் தவிப்பு

    • ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
    • ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன.

    ஸ்ரீபெரும்புதூர்:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள ஏரியும் முழு அளவில் நிரம்பி காணப்பட்டது.

    இந்த ஏரியின் மதகு பகுதி சேதம் அடைந்து இருந்ததால் பாதுகாப்புக்காக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏரியின் மதகு அருகே கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. இந்த தண்ணீர் நடுவீரப்பட்டு, திருவஞ்சேரி கிராமங்களுக்குள் பாய்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த பின்னரே வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர். அப்போது கிராமம் முழுவதும் ஏரி தண்ணீர் புகுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 கிராமங்களில் இருந்தவர்களும் பாதுகாப்பாக வெளியேறினர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். திடீரென ஏரி நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். உடனடியாக ஏரியின் உடைந்த கரையில் மணல் மூட்டைகள் அடுக்கி சரிசெய்யப்பட்டது. எனினும் ஏரியில் இருந்த சுமார் 50 சதவீத தண்ணீர் வெளியேறி விட்டது. இந்த ஏரி சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. சுற்றி உள்ள கிராமங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக நடுவீரப்பட்டு ஏரி இருந்தது. இந்த நிலையில் ஏரிக்கரை உடைந்து தண்ணீர் வெளியேறியதால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏரிக்கரை தானாக உடைந்ததா? அல்லது வேறு யாரேனும் உடைத்து விட்டனரா?என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடுவீரப்பட்டு ஏரியில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தண்ணீர்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஏரிக்கரை உடைந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    Next Story
    ×