என் மலர்
உள்ளூர் செய்திகள்

காஞ்சிரத்தில் மழையால் குண்டும் குழியுமாக மாறிய சாலை
- தரமாக அமைக்காததால் 2 நாள் மழைக்கே பெயர்ந்து உள்ளன.
- சாலை சீரமைப்புக்கு குறைந்த அளவு தான் நிதி ஒதுக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இவை 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வாரத்தில் சேதம் அடைந்த முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு அவை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விட்டு, விட்டு பலத்த மழை கொட்டிவருகிறது. கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரம் பகுதியில் கன மழை கொட்டியது.
இதில் 19 -வது வார்டுக்கு உட்பட்ட சங்குசா பேட்டை பகுதியில் போடப்பட்ட பேட்ச் ஒர்க் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளன.
இந்த சாலை முன்பை விட தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பின்னரே மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
குண்டும் குழியுமான சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அதில் தேங்கி உள்ள தண்ணீரில் விழுந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்த சாலை அமைக்கும் முன்பே ஓரளவு போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வகையில் இருந்தது. ஆனால் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பின்னர் தற்போது பெய்த மழையில் முன்பைவிட மிகவும் மோசமாக மாறிவிட்டது. தரமாக அமைக்காததால் 2 நாள் மழைக்கே பெயர்ந்து உள்ளன. இதுபற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சாலை சீரமைப்புக்கு குறைந்த அளவு தான் நிதி ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் ஒப்பந்ததாரர்கள் முழுமையாக தரமாக சாலையை சீரமைத்திருக்க வேண்டும். சாலை சேதம் அடைந்த இடத்தில் ஆய்வு செய்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






