search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்: கலெக்டர் தகவல்
    X

    காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்: கலெக்டர் தகவல்

    • பள்ளி அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-23 -ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் 'மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதன் தொடர்ச்சியாக 2022-23-ம் ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கலையரசன், கலையரசி விருதுகளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது.

    பள்ளி அளவில் 6 லட்சம் மாணவர்களும், மாவட்ட அளவில் 1.9 லட்சம் மாணவர்களும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும் கலை அரங்கம் செயல்பாடுகள் மூலம் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் அனைத்து வகை அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    கலைத்திருவிழா போட்டிகள் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. போட்டிகளில் தனி நபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு: கவின்கலை / நுண்கலை,

    இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழும், 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை - தோற் கருவி, 4. கருவி இசை துளை காற்றுக்கருவிகள், கருவி இசை தந்திக் கருவிகள் 6. இசைச் சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழ் போட்டி நடைபெறும்.

    11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை / நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, தோற் கருவி, கருவி இசை துளை / காற்றுக்கருவி, கருவி இசை தந்திக் கருவிகள், இசைச்சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்பின் கீழும் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

    போட்டிகள் தனி நபராக அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம் ஒரு மாணவர் ஏதேனும் 3 தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிகபட்சமாக பங்கு பெற முடியும்.

    பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை (முதலிடம்) வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் (முதலிடம் மற்றும் இரண்டாமிடம்) மாவட்ட அளவிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் (முதலிடம்) மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    மாநில அளவிலான கலைத்திருவிழா இறுதி போட்டிகள் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.

    மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்காணும் அட்டவணையின்படி கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.

    பள்ளி அளவில் வருகிற 14-ந்தேதிக்குள், வட்டார அளவில் 18-ந்தேதி முதல் 21-ந்தேதிக்குள், மாவட்ட அளவில் 26-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள், வட்டார மற்றும் மாவட்ட அளவில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இந்த கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×