என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் உயிர் இழந்தவர்களுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத மனிதாபிமானம் அற்றவர் மோடி.
மேலும் மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்தவர். காவிரியில் பாசனம் செய்ய முடியாத அளவுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கொடுத்தவர்.
இப்படி தமிழகத்திற்கு மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம் செய்த பச்சை துரோகி மோடி. ஒரு மாநிலத்துக்கு இவ்வளவு துரோகம் செய்த ஒரு பிரதமர் அந்த மாநிலத்துக்கு வரும்போது மக்கள் கொந்தளிக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.
தமிழகத்தில் இந்துத்துவா செய்பவர்கள் வாலாட்ட முடியாது. கடந்த 25 வருடத்துக்கு முன்பு இவர்கள் யாரும் இங்கு இல்லை.
இப்போது இங்கே அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால் மத்திய அரசு கொடுக்கும் தைரியம் மற்றும் மாநில அரசு கொடுக்கும் இடமும் ஆகும்.
நான் கருப்புக்கொடி காட்டும்போது பா.ஜனதாவினர் ஒரு பெண்ணை தயார் செய்து எங்களது கூட்டத்தில் பிரச்சினை செய்தார்கள். எங்களது கூட்டத்தில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. பா.ஜனதாவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
வன்முறையை வைத்து என்னை யாரும் பயமுறுத்த முடியாது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற இந்துத்துவாவின் கொள்கை. நாட்டை அழிக்கின்ற செயல்.
நான் துப்பாக்கிக்கு உரிமம் கேட்டு காவல் துறையில் விண்ணப்பித்தேன். ஆனால் என் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறி காவல் ஆணையர் விஸ்வநாதன் உரிமம் தர மறுத்து விட்டார். எனக்கு மனதில் துளி அளவும் பயம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko
ஆலந்தூர்:
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தபோது எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மட்டும் கறுப்புக்கொடி காட்டி இருக்கிறார். பா.ஜனதா பெண் தொண்டரை தாக்கி இருக்கிறார்கள்.
கறுப்பு கொடி காட்டும் வைகோவின் வெற்று அரசியல் தமிழகத்தில் எடுபடாது. எங்களுக்கும் கறுப்புக் கொடி காட்டத் தெரியும். அது வேண்டாம் என்று நினைக்கிறோம்.
தி.மு.க. ஆட்சியில் தான் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று கூறிய 3 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விவசாயிகளை கொன்றது தி.மு.க. தற்போது பா.ஜனதாவை ஸ்டாலின் விமர்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம் (34). இவர் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தான்.
எனவே இவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அதைஅறிந்த அவன் திருப்பூரில் பதுங்கி இருந்தான். கடந்த 1-ந்தேதி மடிப்பாக்கம் டான்சி நகரில் கொள்ளையடிக்க வந்த அவன் அங்கு சுற்றித் திரிந்தான்.
அப்போது அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து விட்டு தப்பி ஓட முயன்றான். அவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவனிடம் விசாரித்த போது கொள்ளையடித்த நகைகளை கோவையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதாக தெரிவித்தான். உடனே அங்கு சென்ற போலீசார் 87 பவுன் நகைகளை மீட்டனர்.
மேலும் ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு லேப்- டாப், காமிரா, செல்போன் மற்றும் ஒரு விலை உயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த காரில் சென்று தான் கொள்ளையில் இவன் ஈடுபட்டு வந்தான். கைது செய்யப்பட்ட இவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். #tamilnews
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் திரவஞ்சேரி ஸ்ரீரடி சாய்நகரில் வசிப்பவர் மனோஜ். ஓய்வு பெற்ற விமான படை ஊழியர்.
இவர் நேற்று காலை குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவின் லாக்கர் உடைக்கப் பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்தார்.
ஆலந்தூர், பிப். 8-
சென்னை சர்வதேச விமான நிலைய முனையத்தில் இன்று காலை துப்புரவு பணியாளர்கள் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கழிவறை தண்ணீர் தொட்டியின் மீது கருப்பு நிற பார்சல் ஒன்று இருந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு துப்புரவு பணியாளர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள்.
அந்த பார்சலில் 1 கிலோ தங்க கட்டி இருந்தது. இதன் மதிப்பு ரூ.34 லட்சம் ஆகும். விசாரணையில் அந்த தங்க கட்டிகள் துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சி.சி.டி.வி.கேமரா காட்சி களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இந்தர்பால் என்பவர் தங்க கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகளின் கண்காணிப்பு தீவிரமாக இருந்ததால் அதை கழிவறை யில் மறைத்து வைத்தது தெரிய வந்தது. இது தொடர் பாக இந்தர்பாலை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் 40 இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி பற்றி எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு செய்யவும், தேர்தல் அறிக்கையும் பிரசாரம் செய்யவும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
அந்தந்த குழுக்கள் பணிகளை செய்துக் கொண்டு இருக்கின்றன. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது. கட்சியில் தேர்தல் பொறுப்பு ஏற்றுள்ளவர்கள் அனைவரும் எது நல்லது என்று தேர்ந்து எடுத்து அதற்கு ஏற்ப செயல்படுவார்கள்.
யார்? யாருடன்? கூட்டணி என்பதை அ.தி.மு.க. தலைமை கழகம் இன்னும் முடிவு எடுக்க வில்லை. ஜெயலலிதா எப்படி செயல்பட்டாரோ அந்த வழியிலேயே நாங்கள் செயல்படுகிறோம். இன்றைய சூழ்நிலை பற்றி கட்சியை வழி நடத்துபவர்களுக்கு நன்றாக தெரியும். எப்படி செயல்பட்டால் நல்லது என்பதை தெரிந்து செயல் படுவார்கள்.
கூட்டணி தேவையா? இல்லையா? என்று அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.
மத்தியமாநில அரசுகள் நட்புடன் தான் இருக்கிறது. அ.தி.மு.க. இதுவரை தனித்து செயல்படுகிறது. மத்திய அரசிடம் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 15 ஆயிரம் கோடியை கேட்டபோது வழங்கவில்லை. எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கு வரவேண்டிய தொகையை கேட்டபோது அதுவும் வரவில்லை. கஜா புயல் பாதிப்புக்கு கேட்ட தொகையும் வரவில்லை. காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது என்றோம். தமிழகத்திற்கு மத்திய அரசு செய்த பாதகங்களை தான் வெளிப்படுத்தி வருகிறேன்.
ஸ்டாலின் நீட் தேர்வு பற்றி பேசுகிறார். 2012-ம் ஆண்டு தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி அரசு தான் கொண்டு வந்தது. தமிழகத்தை பாதிக்கின்ற எந்தவொரு நிலையை மத்திய அரசு எடுத்தாலும் அ.தி.மு.க. எதிர்க்கும்.
தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று முதல்- அமைச்சர் சொல்லி இருக்கிறார்.
அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு தருவதில் என்ன தவறு இருக்கிறது. யாருக்கு சீட் தருகிறார்கள் என்பதை பின்னால் பார்ப்போம்.
தலைவர்களின் வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. பதவிகள் என்று வரும்போது தான் குறைபாடா நிறைபாடா என்பதை சொல்லமுடியும். குடும்ப அரசியல் என்பது தொடர்ந்து கட்சியிலும் ஆட்சியிலும் ஒரு குடும்பமே இருப்பது தான். தி.மு.க.வில் அப்படி தான் உள்ளது. அ.தி.மு.க.வில் யாரும் இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை தொடர்ந்து ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். வந்து உள்ளனர்.
மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டில் சொன்னது எல்லாம் முன்பே சொல்லியிருக்க வேண்டும். அப்போது கோட்டை விட்டுவிட்டு இப்போது சொல்கிறார்க்ள். அ.தி.மு.க.வின் கருத்துக்களை பாராளுமன்றத்தில் சொல்லுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai
செங்கல்பட்டு:
நந்திவரம், கூடுவாஞ்சேரி, காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை அவர் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்து விட்டு நண்பர்களுடன் வெளியே வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார். உடனே கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடிக்கும் போது கண்ணனுக்கும், உடன் இருந்த கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கண்ணனின் நண்பர்கள் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட கண்ணனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
காஞ்சிபுரம் மடத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் காஞ்சிபுரம் நடுத்தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு அவர்வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் வேல்முருகன் வீட்டுக்கு வந்தனர்.
அவர்கள் வேல்முருகனை திடீரென குண்டுகட்டாக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். 4 பேரும் வழியில் வேல்முருகனை சரமாரியாக தாக்கினர்.
வீட்டில் இருந்த வேல்முருகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டது பற்றி அறிந்ததும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரை அருகே வேல் முருகனை திடீரென இறக்கி விட்டு மர்ம கும்பல் தப்பிசென்று விட்டது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர் அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். இதுபற்றி விஷ்ணுகாஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேல்முருகனை கடத்தி சென்ற கும்பல் யார்? அவரை திடீரென விடுவித்தது ஏன்? என்பது தெரியவில்லை. இச்சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருங்குடி, திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் ஹரி. தனியார் ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை சப்ளை செய்ய சென்ற போது தி.நகரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அடிக்கடி அவரது வீட்டுக்கு பொருட்கள் கொடுக்க சென்றதால் ஹரிக்கும், அந்த பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதனை அறிந்த பெண்ணின் கணவர், மனைவியையும், ஹரியையும் கண்டித்தார்.
இந்த நிலையில் ஹரியை மர்ம கும்பல் ஆட்டோவில் செங்கல்பட்டு அருகே கடத்தி சென்றனர். பழவேலி அருகே சென்றபோது ஹரியை அவர்கள் அரிவாளால் வெட்டினர்.
பலத்த காயம் அடைந்த ஹரி அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். அந்த நேரத்தில் ரோந்து வந்த போலீசார் அவரை மீட்டனர்.
மேலும் ஒருவரை கைது செய்தனர். 4 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பலத்த காயம் அடைந்த ஹரி சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கானத்தூரை அடுத்த உத்தண்டி காட்டகிரண்ட் பகுதியில் வசித்து வருபவர் சுனில். இவர் தரமணியில் உள்ளவர் உலக வங்கி அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை திரும்பி வந்த போது வீட்டின் பின் பக்க கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 90 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயிருந்தன.
இது குறித்து கானத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டனர்.
எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகின்றனர். #tamilnews
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் ஊழல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சி.பி.ஐ. முயற்சியை முதல்-மந்திரி மம்தாபானர்ஜி நேரடியாக தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது இந்திய ஜனநாயகத்தின் மீது சம்மட்டியால் அடித்தது போல் இருக்கிறது.
மம்தாபானர்ஜி நடத்திய பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தார். 1972-ம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு இன்னலுக்கு ஆளானார்கள். பல கஷ்டங்கள் பட்டோம் என்று அவர்களே கூறியுள்ளனர். இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசோடு சேர்ந்து தி.மு.க. கருத்து சொல்லி வருகிறது.
பிரதமர் மோடி மாநிலங்களுக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளார். மத்திய அரசுக்கு எதிராக பல மாநில அரசுகள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் செயல் கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் நலன், ஓய்வூதிய திட்டம், வரிவிலக்கு, ஊரக வேலை வாய்ப்பு, வளர்ச்சி என்ற ஒரு பட்ஜெட். இதை யாரும் குறை சொல்ல முடியாது.
காங்கிரசில் வறுமை ஒழிப்பு திட்டம் என்று சொல்லி வருகிறார்கள். வறுமை ஒழிப்பு என்பது அவர்களுக்குத்தான். அவர்களுடைய வறுமையை ஒழிக்கத்தான் பல ஊழல்கள் செய்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #MamtaBanerjee






