என் மலர்
காஞ்சிபுரம்
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது.
இதனால் காலை சென்னை விமான நிலையத்துக்கு கோலாலம்பூர், அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய இடங்களில் இருந்து வரும் வெளிநாட்டு விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்னையில் தரை இறங்க அனுமதிக்கவில்லை. இதுபோல் திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த விமானங்கள் உள்பட மொத்தம் 10 சென்னை விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னை விமான நிலைய ஓடுபாதையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் இன்று காலை சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, மலேசியா, சிங்கப்பூர், டெல்லி, ஐதராபாத், மும்பை, திருவனந்தபுரம் செல்ல வேண்டிய 23 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணிவரை சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வழக்கம் போல் விமானங்கள் வந்து சென்றன.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பிறந்து 2 மாதமே ஆன ஆண் குழந்தை ஒன்று அனாதையாக சாலையோரம் வீசப்பட்டிருந்தது. அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் சாலையோரம் கிடந்த குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையை மீட்டு சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியானந்தன் ஒத்துழைப்புடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த குழந்தை சைல்டு ஹெல்ப் லைன் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? என்ற கோணத்தில் சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிட்லபாக்கம் கணபதிபுரம் நாகாத்தம்மன் கோவில் தெருவில் வாலிபர்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து வாலிபர்கள் சண்டையிடும் சத்தம் அதிக அளவு கேட்டது, இது பற்றி அக்கம் பக்கத்தினர் சிட்லபாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு தங்கி இருந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் யஷ்வந்த்ராஜா, ஸ்ரீகாந்த், சதீஷ்குமார், அரவிந்த் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களில் ஒருவர் பிரபல சினிமா பாடகர் ஒருவரின் பேரன் என்பது தெரிய வந்தது.
கைதானவர்கள் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்று வந்துள்ளனர். அவர்களுக்கு கஞ்சா கிடைத்தது எப்படி? கூட்டாளிகள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தனியார் நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள், வீடுகளில் சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் மண்டல நல அலுவலர் மல்லிகா, சுகாதார அலுவலர் கண்ணன், ஆய்வாளர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள், குப்பை களில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தன. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம்:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சென்னை பெசன்ட் நகரில் நேற்று காலை குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தங்களது வீட்டு முன்பு கோலமிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதேபோல் தி.மு.க. எம்.பி. கனிமொழி வீட்டு முன்பும் கோலம் வரையப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வினரும் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் வீட்டு முன்பு “சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.” வேண்டாம் என்று பெரிய அளவில் கோலம் போடப்பட்டு இருந்தது.
இதே போல் காஞ்சீபுரம் நகரம் முழுவதும் தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர் தங்களது வீட்டு முன்பு கோலமிட்டு இருந்தனர். சாலவாக்கத்தில் உள்ள மாவட்ட செயலாளர் க.சுந்தர் வீட்டு முன்பும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போடப்பட்டு இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அருகே உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு விசாரணைக்காக அழைத்து வரப்படும் பெண்களின் குழந்தைகள் ஓய்வு எடுக்கவும், விளையாடவும், தாய்மார்கள் பாலூட்டும் வகையிலும் குழந்தைகள் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வழக்கு விசாரணைக்காக அழைத்துவரப்படும் பெண்களில் சிலர் குழந்தைகளுடனும், தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுடனும் வருகின்றனர்.
அவர்களை விசாரிக்கும் போது குழந்தைகளின் மனநிலை பாதிப்படையும்.
இதனை தவிர்க்கும் நோக்கத்திலேயே அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு அறை ஒதுக்கி குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் வாங்கி வைத்துள்ளோம். மேலும் சுவர்களில் பறவைகள், விலங்குகள் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளோம்.
இந்த அறையில் உள்ள பிரத்யேக அறை பாலூட்டும் தாய்மார்களுக்கு வசதியாக இருக்கும். இதற்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தில் வசித்து வருபவர் ஜெயராஜ். கட்டிட மேஸ்திரியான இவர், கட்டிட வேலைக்கு ஆட்களை அனுப்பியும் வந்தார்.
இவரது மகள் லாவண்யா (வயது 17) பிளஸ்-2 முடித்துள்ள இவர் மேல்படிப்பு படிக்காமல் பெற்றோருடன் தங்கி இருந்தார்.
ஜெயராஜ் வேலை செய்யும் பட்டிபுலத்தில் உள்ள கட்டிடத்தில் ஆந்திர மாநிலம் விஜயநகரை சேர்ந்த துர்க்காராவ் (21) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்தார்.
அப்போது துர்க்காராவ், லாவண்யாவுடன் பழகி காதலை ஏற்குமாறு வற்புறுத்தினார். ஆனால் லாவண்யா காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை காதலை ஏற்க மறுத்த லாவண்யாவை கத்தியால் குத்தி துர்க்காராவ் கொலை செய்தார். அவரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர்.
துர்க்காராவ் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது:-
லாவண்யாவின் தந்தை கட்டிட வேலைகளுக்கு கூலி ஆட்கள் அனுப்பும் காண்ட்ராக்டராக இருந்தார். அவரிடம் தான் நான் வேலை பார்த்து வந்தேன்.
அப்போது தான் நானும் லாவண்யாவும் நண்பர்களாக பழகி வந்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன் நான் லாவண்யாவை தொட்டு பேசியதை அவரது தந்தை பார்த்து விட்டார்.
இதனால் என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டு நான் தங்கியிருந்த செட்டையும் காலி செய்ய சொல்லிவிட்டார்.
இதையடுத்து நான் அங்கிருந்து காலி செய்து விட்டு வேளச்சேரியில் தங்கி வேலை செய்து வந்தேன். எனினும் லாவண்யாவுடன் சிரித்து பேசி தொட்டு விளையாடிய நாட்கள் என் கண்முன் வந்து சென்றது.
எனவே அவளிடம் சென்று காதலை உறுதிப்படுத்த நேற்று காலை லாவண்யா குளிக்க வரும் குளியல் அறை அருகே காத்திருந்தேன். அவள் குளியல் அறைக்குள் சென்றதும் நானும் உள்ளே நுழைந்து என் காதலை சொன்னேன். ஆனால் அவள் 17 வயது மைனர் பருவத்தை காரணம் காட்டி காதலை ஏற்க மறுத்து வெளியே போகும்படி கூறினாள். நான் காலை பிடித்து கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்து கூச்சலிட்டார்.
இதையடுத்து எனக்கு கிடைக்காத லாவண்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்று நான் தற்காப்புக்காக கொண்டு சென்ற கத்தியால் அவளது வயிறு மற்றும் மார்பில் குத்தி கொன்றேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஒருதலை காதலில் இளம்பெண்ணை வாலிபர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றி சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
சில நேரங்களில் சீமானுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் வீடியோ காட்சிகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தாம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மத்தியில் செல்போனில் டிக்டாக் வீடியோ ஒன்று வைரலாக பரவியது.
சுமார் 15 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் 5 வாலிபர்கள் கையில் கத்தியுடன் கானா பாடல் ஒன்றை பாடுவது போல காட்சி இடம் பெற்றுள்ளது. எதுகை மோனையுடன் கூடிய அந்த வீடியோ காட்சியில் சீமானை அவதூறாக பேசி மிரட்டுவது போன்ற வசனங்கள் இருந்தன.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அஜித், கிஷோர், நிஷாந்த், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 5 பேர் அந்த டிக்டாக் வீடியோவை வெளியிட்டது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கையில் ஆயுதங்களுடன் கும்பலாக சுற்றியதாக இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 4 பேர் மீது ஏற்கனவே வழக்கு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 16-ந் தேதி வரை நடைபெற்றது.

48 நாட்கள் நடைபெற்ற விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் சயன கோலத்திலும், மீதி நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார். அத்திவரதர் சிலைக்கு தினமும் வண்ண வண்ண பட்டாடைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். விழா நடைபெற்ற ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 3.59 கோடி பக்தர்கள் காஞ்சிபுரம் நகருக்கு வந்து உள்ளனர்.
ஆகஸ்டு 16-ந் தேதி தரிசனம் முடிந்ததும் அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தபடி உள்ளது.
அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் அவர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் குளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.
இதன் காரணமாக வழக்கத்தை விட காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் தற்போது காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.
இதற்கு அத்திவரதர் தரிசனமே காரணம் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு வரை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 5.82 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு 4.19 கோடி பேர் வருகை தந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அருகருகே இருக்கும் சென்னையும், காஞ்சிபுரமும் தமிழகத்துக்கு வந்த மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதத்தை ஈர்த்துள்ளதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அத்திவரதர் தரிசனம் மவுசால் சுற்றுலா இடத்தில் காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது, சென்னை 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 2.75 கோடி சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் கோவில் தலைமை பட்டர் கிட்டு கூறும்போது, ‘அத்திவரதர் தரிசனத்துக்கு பின்னர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவர்கள் தரிசனம் நடந்த மண்டபம் மற்றும் அத்திவரதர் வீற்றிருக்கும் குளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள். தரிசனம் நடந்த வசந்த மண்டபத்தில் அத்திவரதர் உருவ படத்தை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
8 அடி உயரம், 4 அடி அகலத்தில் அத்திவரதர் உருவப்படம் வைக்கப்படுகிறது. ஜனவரி முதல் பக்தர்கள் இதனை தரிசிக்கலாம்’ என்றார்.
புத்தாண்டு, பொங்கல் விழா தொடர் விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வெளிமாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதனால் பஸ், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஆரம்பித்த முதல் நாளே முடிந்து விட்டன. ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிக அளவில் உள்ளது.
எனவே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே பஸ், ரெயில்களுக்கு போட்டியாக தற்போது விமான பயணமும் உள்ளது. சொகுசு பயணம், பயண நேரம் குறைவு, பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது, விமான சேவையை பலரும் விரும்பத் தொடங்கி உள்ளனர்.
இதன் காரணமாக விமான டிக்கெட் எடுப்பதிலும் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதனால் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
புத்தாண்டையொட்டி 30,31-ந்தேதிகளில் பல விமானங்களில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று விட்டன.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.16 ஆயிரம், மதுரை-ரூ.9700-18,000, கோயமுத்தூர்-ரூ.3,700- 6,000, கொச்சி-ரூ.10,000- 16,500, திருவனந்தபுரம்-ரூ.9,000- 13,000, ஹுப்ளி-ரூ.9000, பெங்களூர்-ரூ.3,400- 6,000க்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
இதேபோல் பொங்கலையொட்டியும் இந்த விமான டிக்கெட் உயர்வு உள்ளது.
சாதாரண மற்ற நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்துக்கு- ரூ.4000 -8000, மதுரை- ரூ.3,400-6000, பெங்களூரு- ரூ.3,400-5,000, கோவை-ரூ. 2,300-4,300க்கு விற்கப்பட்டது.
பொங்கலுக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் விமான கட்டணம் மதுரைக்கு ரூ.5,500, தூத்துக்குடிக்கு ரூ.4,700யை நெருங்கி உள்ளது.
பண்டிகை காலங்களிலும், தேவை அதிகரிப்பின் போதும் உள்ளூர் விமானங்களின் டிக்கெட்டுகள் விலை ரூ.10 ஆயிரத்தை தாண்டக்கூடாது என்று விமான நிறுவன ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இண்டிகோ, ஏர் ஆசியா நிறுவனங்கள் ஜனவரி 15-ந் தேதிக்கு பிறகு உள்ளூர் பயணம் செய்ய ரூ.899 கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவை அறிமுகப்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். சிலர் நந்தீஸ்வரர் சிலை முன்பு உள்ள நெய்விளக்கு ஏற்றும் அண்டாவில் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது எல்லா விளக்குகளும் சேர்ந்து மொத்தமாக பந்தம் போல் பற்றி எரிந்தன. இதனால் அங்கு கரும்புகை ஏற்பட்டது. பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
உடனே கோவில் நிர்வாகி தியாகு தலைமையில், கோவில் ஊழியர்கள் அங்குள்ள தீயணைப்பு கருவிகள் மூலம் 15 நிமிடங்களில் தீயை அணைத்தனர். அதன்பிறகு பதட்டம் தணிந்தது.






