search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    புத்தாண்டு, பொங்கல் விடுமுறையையொட்டி விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு

    புத்தாண்டு, பொங்கல் விடுமுறையையொட்டி வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    ஆலந்தூர்:

    புத்தாண்டு, பொங்கல் விழா தொடர் விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வெளிமாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

    இதனால் பஸ், ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஆரம்பித்த முதல் நாளே முடிந்து விட்டன. ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிக அளவில் உள்ளது.

    எனவே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    இதற்கிடையே பஸ், ரெயில்களுக்கு போட்டியாக தற்போது விமான பயணமும் உள்ளது. சொகுசு பயணம், பயண நேரம் குறைவு, பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது, விமான சேவையை பலரும் விரும்பத் தொடங்கி உள்ளனர்.

    இதன் காரணமாக விமான டிக்கெட் எடுப்பதிலும் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதனால் வழக்கமான கட்டணத்தை விட பல மடங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன. இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    புத்தாண்டையொட்டி 30,31-ந்தேதிகளில் பல விமானங்களில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று விட்டன.

    சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.16 ஆயிரம், மதுரை-ரூ.9700-18,000, கோயமுத்தூர்-ரூ.3,700- 6,000, கொச்சி-ரூ.10,000- 16,500, திருவனந்தபுரம்-ரூ.9,000- 13,000, ஹுப்ளி-ரூ.9000, பெங்களூர்-ரூ.3,400- 6,000க்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.

    இதேபோல் பொங்கலையொட்டியும் இந்த விமான டிக்கெட் உயர்வு உள்ளது.

    சாதாரண மற்ற நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்துக்கு- ரூ.4000 -8000, மதுரை- ரூ.3,400-6000, பெங்களூரு- ரூ.3,400-5,000, கோவை-ரூ. 2,300-4,300க்கு விற்கப்பட்டது.

    பொங்கலுக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் விமான கட்டணம் மதுரைக்கு ரூ.5,500, தூத்துக்குடிக்கு ரூ.4,700யை நெருங்கி உள்ளது.

    பண்டிகை காலங்களிலும், தேவை அதிகரிப்பின் போதும் உள்ளூர் விமானங்களின் டிக்கெட்டுகள் விலை ரூ.10 ஆயிரத்தை தாண்டக்கூடாது என்று விமான நிறுவன ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே இண்டிகோ, ஏர் ஆசியா நிறுவனங்கள் ஜனவரி 15-ந் தேதிக்கு பிறகு உள்ளூர் பயணம் செய்ய ரூ.899 கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவை அறிமுகப்படுத்தி உள்ளது.
    Next Story
    ×