என் மலர்tooltip icon

    ஈரோடு

    அறச்சலூர் அருகே பேராசிரியர் மனைவி விபத்தில் பரிதாபமாக இறந்தார்.
    அறச்சலூர்:

    அறச்சலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (27). இவர்களுக்கு திபித் என்ற 4 வயது மகன் உள்ளான். இவன் கள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தான். நேற்று காலை சுரேஷ்குமாரின் தந்தையான ஈஸ்வரமூர்த்தி தன்னுடைய பேரனை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றார்.

    அப்போது அவருடன் கலைவாணியும் சென்றார். பின்னர் சிறுவன் திபித்தை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு மீண்டும் அவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது அறச்சலூர் அருகே உள்ள கொடுமுடி கைகாட்டி பிரிவு பகுதியில் சென்ற போது எதிரே தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்துகொண்டு இருந்தது. அந்த சரக்கு வேன் மீது மோதாமல் இருக்க ஈஸ்வரமூர்த்தி பிரேக் போட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    அப்போது அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் கலைவாணி மீது மோதியதோடு, அவரின் தலையின் மீது சரக்கு வேனின் முன்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

    இதனால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கலைவாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஈஸ்வரமூர்த்தி காயத்துடன் உயிர்தப்பினார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டம் கோபி அருகே வீட்டுக்கு மனைவி வர மறுத்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    கோபியை அடுத்த அத்தாணி, பெருமாள் பாளையம், சில்லாங்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி(வயது60). விவசாயி. இவரது மனைவி முருகாய்யாள். இவரது மகள் தமிழரசி. திருமணமாகி கணவருடன்ஈரோடு, சூளையில் வசித்து வருகிறார்.

    முருகாய்யாள் உடல்நலம் குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சூளையில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி குருசாமி சூளையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்து மனைவி முருகாய்யாளை நமது வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார். அதற்கு முருகாய்யாள் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் குருசாமி அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் மது வாங்கி அதில் வி‌ஷம் கலந்து குடித்து வீட்டு மீண்டும் சூளையில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து தான் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முருகாய்யாள் தனது உறவினர்களுடன் குருசாமியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால ஓட்டல் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    மொடக்குறிச்சி:

    ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பஸ்நிறுத்தம் பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் சந்திரசேகர் (வயது 49).

    இவர் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு கடை வைத்து நடத்தி வந்தார்.

    கடந்த சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த வி‌ஷத்தை (எலி மருந்து) எடுத்து சந்திரசேகர் குடித்துவிட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்து உயிருக்காக போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பெருந்துறை அடுத்த எல்லைமேடு பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நூல் மற்றும் பஞ்சு பேல்கள் எரிந்து போனது.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சென்னிமலை ரோடு எல்லைமேடு பகுதியில் ஈரோடு வீரப்பன் சத்திரம், பெரிய வலசு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் மணிகண்டன் ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த மில்லில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை இந்த ஸ்பின்னிங் மில்லின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மின் கசிவினால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அருகில் இருந்த நூல் மற்றம் பஞ்சு பேல்களில் பற்றிய தீ மளமளவென்று அருகில் பரவியது. இதனைக்கண்ட தொழிலாளர்கள் தப்பி ஓடி வந்தனர். மேலும் உடனடியாக தீயை அணைக்க முயன்று முடியாமல் போகவே பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

    எனினும் ஏராளமான பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து போனது. 

    மொடக்குறிச்சி அருகே விஷம் குடித்து கூட்டுறவு சங்க பெண் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). இவர் பேரூராட்சி செயல் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். இவருடைய மனைவி சாந்தி (54). இவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர்களுக்கு விஜயசத்யராஜ் (34) என்கிற மகன் உள்ளார். இவர் திருமணமாகி குடும்பத்துடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக சாந்திக்கு உடல் நலம் சரியில்லை என கூறப்படுகிறது. இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லை. இதனால் சாந்தி மனமுடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் சண்முகம் நேற்று முன்தினம் காலை தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் சாந்தி மட்டும் தனியாக இருந்தார். ஏற்கனவே உடல் நலம் சரியில்லாததால் மனம் உடைந்து காணப்பட்ட சாந்தி ‘இனி வாழ்வதை விட சாவதே மேல்’ என்ற முடிவுக்கு வந்தார். இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் செல்போன் மூலம் சண்முகத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சண்முகம் பதற்றத்துடன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி சாந்தி இறந்து கிடந்ததை கண்டு அவர் கதறி அழுதார்.

    இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போனஸ் அறிவிப்பு வெளியிடப்படாததால் தீபாவளி அன்று 108 ஆம்புலன்சுகளை இயக்க மாட்டோம் என்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். #diwali
    ஈரோடு:

    108 இலவச ஆம்புலன்சுகள் மூலம் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களையும், கர்ப்பிணி பெண்களையும் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவார்கள்.

    பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு இந்த இலவச ஆம்புலன்சு சேவை மிக உபயோகமாக உள்ளது.

    இந்த நிலையில் 108 ஆம்புலன்சு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தங்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    போனஸ் அறிவிப்பு வெளியிடப்படாததால் அவர்கள் தீபாவளி அன்று 108 ஆம்புலன்சுகளை இயக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

    வரும் 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ந் தேதி இரவு 8 மணி வரை மொத்தம் 24 மணி நேரம் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, ‘‘எங்கள் சங்கத்தை பொறுத்த வரையில் சேவையை நிறுத்தி பொதுமக்களை அவதிக்குள்ளாக்க ஒரு போதும் விரும்பவில்லை. ஆனால் எங்களை நிர்வாகம் போராட்டத்தில் தள்ளுகிறது என்பதை மறுக்க முடியாத உண்மையாகும்’’ என்று கூறினர்.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 108 ஆம்புலன்சுகள் 35 உள்ளன. இதில் 140 பேர் பணியாற்றுகிறார்கள். 70 டிரைவர்கள், 80 மருத்துவ உதவியாளர்கள் உள்ளனர்.

    தீபாவளி அன்று இவர்கள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். #diwali
    பெண்களை பாலுணர்வுடன் பார்த்தால், அவர்கள் உள்ளுணர்வு இரும்பாக மாறும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #MeToo
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மத்திய அரசின் நலத்திட்டம் குறித்த விளக்கம் கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு மத்திய அரசின் எரிவாயு, சாலை, வங்கி கடன் உள்பட பல திட்டங்களை விளக்கி பேசினார்.

    பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



    பிரதமர் மோடி மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

    சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் செல்லக்கூடாது என்று போராடி வரும் சபரிமலை பக்தர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள்.

    பெண்களை கரும்பு மாதிரி நினைப்பவர்களுக்கு எதிராக தான் மீடூ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பெண்களை பாலுணர்வுடன் பார்த்தால், அவர்கள் உள்ளுணர்வு இரும்பாக மாறும். இரும்பு கரம் கொண்டு அடக்குவார்கள்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரதிய ஜனதா மகளிரணி துணை நிற்கும். மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீது எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. மீனவர்கள் விவகாரத்தில் குற்றம்சாட்டி வரும் எதிர்கட்சியினர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆனால் இலங்கை தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்டத்தை சட்டத்தின் வழியாக எதிர்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கண்டிப்பாக பாரதிய ஜனதா கட்சி காலூன்றும்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #MeToo
    சீன பட்டாசுகளை விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    அந்தியூர்:

    தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் அந்தியூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க பெருவாரியான இடத்தில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் செயல்படுவது எப்படி என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை புகையில்லா தீபாவளியாக கொண்டாட அனைத்து நடவடிக்கைகளும் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. சீன பட்டாசுகளை அரசு கட்டுப்படுத்தியிருக்கிறது. தெரியாமல் யாரும் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னையை பொருத்தவரை நடமாடும் காற்று கண்காணிப்பு மையம் உள்ளது. இதன் மூலம் மாசு மற்றும் புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும், அரசு சார்பில் விபத்தில்லா தீபாவளிக்காக கொடுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களுக்கு இது குறித்து தொடர்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #ChinaCrackers
    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குடும்ப தகராறு காரணமாக மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர்புரம், தமிழ் நகரை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி திலகவதி. இவர்களது மகள் சுரக்ஷா (7), மகன் பிரவேஷ்குமார் (7).

    ராபர்ட் பெருந்துறை அருகே தனியார் பால் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிகிறார். திலகவதி அதே பகுதியில் சுரேஷ்குமார் என்பவரின் துணிக்கடையில் டெய்லராக வேலை பார்த்தார்.

    திலகவதிக்கும், ராபர்ட்டுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் திலகவதி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். வாழப்பிடிக்கவில்லை என்று அவர் கூறி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி ராபர்ட் வேலைக்கு சென்றார். திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்கு மார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

    மன விரக்தியில் இருந்த திலகவதி எலி மருந்தை (வி‌ஷம்) சாப்பிட்டார். இதை சுரக்ஷா, பிரவேஷ்குமாரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

    தான் இறந்துவிட்டால் குழந்தைகள் கதி என்னாகுமோ? என்று திலகவதி நினைத்தார். எனவே அவர் சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகியோருக்கும் வி‌ஷம் கொடுத்தார்.

    இதனால் 3 பேரும் மயங்கினர். அவர்களது நடமாட்டம் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். எனவே அவர்கள் ராபர்ட்டின் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

    திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகிய 3 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திலகவதி வேலை பார்த்த துணிக்கடையை சேர்ந்த சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் சம்பவ இடத்துக்கு வந்து திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரக்ஷா பரிதாபமாக இறந்தார்.

    திலகவதி, பிரவேஷ்கு மார் ஆகிய 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகர் ரஜினியால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்று தனியரசு எம்.எல்.ஏ கூறியுள்ளார். #Rajinikanth

    ஈரோடு:

    ஈரோட்டில் ஆதி தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்எல்ஏவுமான தனியரசு கலந்து கொண்டார்.

    பின்னர் தனியரசு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சிக்குள்ளேயே மாறுபட்ட சூழல் நிலவிவருகிறது. தற்போது டிடிவி தினகரன் குறிப்பிட்ட எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அரசுக்கு நெருக்கடியையும் ,சங்கடத்தையும், தடுமாற்றத்தையும் கொடுத்து வருகிறார். இதை டிடிவி தினகரன் தவிர்க்க வேண்டும். ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்ததுபோல் டிடிவியும் இணைய வேண்டும்.


    சபரிமலை விவகாரத்தை வைத்து கொண்டு அதில் கட்சியை உருவாக்கி மாநில முதல்வராக ஆசைப்படுகிறார் நடிகர் ரஜினிகாந்த் இதில் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனுமதிப்பதாகவும் அதே சமயத்தில் ஐதீகம் மத சடங்குகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார் .

    இந்த கருத்து முரண்பட்டதாக உள்ளது இதன் மூலம் ரஜினி ஒரு குழப்பமான மனநிலையில் உள்ளார் என்பது தெளிவாகிறது. ரஜினியை அரசியலிலிருந்து தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். அவரை ஏற்க மாட்டார்கள். ரஜினி கட்சி தொடங்கினாலும் தொடங்காவிட்டாலும் அவரை ஒரு அரசியல் தலைவராக மக்கள் ஏற்க மாட்டார்கள். நடிகர் ரஜினியால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது.

    இவர் அவர் கூறினார். #Rajinikanth

    பெருந்துறையில் உள்ள ஒரு லாட்ஜில் 4 லட்சம் ரூபாய் கையாடல் செய்த கேசியர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை, ஈரோடு ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஜோதிக்குமார் என்பவர் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் லாட்ஜில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு தனது நிறுவனத்திற்கு தெரியாமல் அதிகமாக பில் போட்டு கொடுத்து குறைவாக கணக்கு காண்பித்து வந்துள்ளார். கடந்த வாரத்தில் இந்த சம்பவம் லாட்ஜின் மேனேஜருக்கு தெரியவந்தது.

    அவர் உடனடியாக உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக ஜோதிக்குமாரிடம் விசாரித்ததில் அவர் ரூபாய் 4 லட்சம் வரை கையாடல் செய்துள்ளது தெரிய வந்தது. இதன் பேரில் பெருந்துறை போலீசில் மேனேஜர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி நடப்பதால்தான் தினமும் மழை பெய்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ADMK #MinisterSengottaiyan

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி பெரியார்திடலில் அதிமுக வின் 47-வது ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசியதாவது:-

    பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான் சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    அதைத் தொடர்ந்து ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், லேப்டாப் வழங்கும் திட்டம், உள்ளிட்ட பல என்னற்ற திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கினார்.

    அவர் மறைந்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த ஆட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றி வருகிறது. அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கும் வரை இக்கட்சியை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.


    அதிமுகவில் சாதாரண தொண்டர்கள் கூட மிகப்பெரிய பதவிக்கு வரலாம் என்ற நிலை உள்ளது. திமுக போல குடும்ப அரசியல் அதிமுகவில் இல்லை. திமுக ஆட்சி காலத்தில் தமிழகம் மின்வெட்டால் இருண்டு கிடந்தது. மின்வெட்டை கண்டு பிடித்தவர் அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆவார். இந்த ஆட்சியில் அனைவருக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு, மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. திருப்பரங்குன்றம், திருவாரூர் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெறும். துணிச்சல் இருந்தால் தி.மு.க. தனியாக போட்டியிட தயாரா?

    தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான நல்ல ஆட்சி நடைபெறுவதால் தான் தினமும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதத்திற்குள் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. மேலும், 3ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்கப்படும். பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய கல்வி வழங்கப்படும்.

    1 முதல் 8 வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் சீருடைகள் மாற்றம் செய்யப்படும். கோபியில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற உள்ளது. மேலும், அத்தாணி-சத்தி சாலை, ஈரோடு -நீலகிரி சாலை, கோபி -பெருமாநல்லூர் சாலை ஆகியவை 4 வழிச்சாலைகளாக மாற்றப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #ADMK #MinisterSengottaiyan

    ×