search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே வி‌ஷம் கொடுத்து மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி
    X

    பெருந்துறை அருகே வி‌ஷம் கொடுத்து மகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குடும்ப தகராறு காரணமாக மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சிலேட்டர்புரம், தமிழ் நகரை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி திலகவதி. இவர்களது மகள் சுரக்ஷா (7), மகன் பிரவேஷ்குமார் (7).

    ராபர்ட் பெருந்துறை அருகே தனியார் பால் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிகிறார். திலகவதி அதே பகுதியில் சுரேஷ்குமார் என்பவரின் துணிக்கடையில் டெய்லராக வேலை பார்த்தார்.

    திலகவதிக்கும், ராபர்ட்டுக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் திலகவதி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். வாழப்பிடிக்கவில்லை என்று அவர் கூறி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி ராபர்ட் வேலைக்கு சென்றார். திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்கு மார் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.

    மன விரக்தியில் இருந்த திலகவதி எலி மருந்தை (வி‌ஷம்) சாப்பிட்டார். இதை சுரக்ஷா, பிரவேஷ்குமாரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

    தான் இறந்துவிட்டால் குழந்தைகள் கதி என்னாகுமோ? என்று திலகவதி நினைத்தார். எனவே அவர் சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகியோருக்கும் வி‌ஷம் கொடுத்தார்.

    இதனால் 3 பேரும் மயங்கினர். அவர்களது நடமாட்டம் இல்லாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். எனவே அவர்கள் ராபர்ட்டின் வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

    திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகிய 3 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக திலகவதி வேலை பார்த்த துணிக்கடையை சேர்ந்த சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர் சம்பவ இடத்துக்கு வந்து திலகவதி, சுரக்ஷா, பிரவேஷ்குமார் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரக்ஷா பரிதாபமாக இறந்தார்.

    திலகவதி, பிரவேஷ்கு மார் ஆகிய 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×