என் மலர்tooltip icon

    ஈரோடு

    சத்தியமங்கலம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்று வந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, அவரது அறையில் இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை முடித்து ஐஏஎஸ் ஆக வேண்டுமென்ற கனவுடன் டெல்லிக்கு சென்ற மாணவி ஸ்ரீமதி. தன்னம்பிக்கையுள்ள, படிப்பில் ஆர்வமுள்ள, சாதிக்க துடிக்கும் மாணவர்கள் தான் தொலை தூரமென்றாலும் மற்ற மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் கல்வி கற்க விரும்பி செல்கிறார்கள்.

    ஆனால் அப்படி மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. டெல்லியில் பயிலும் தமிழக மாணவர்கள் இறப்பதும் தொடர்கதையாகிவிட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவகல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை பயின்று வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவன் 2016-ம் ஆண்டு ஜூலை மாதமும், டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரத்பிரபு என்ற மாணவன் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதமும் மர்மமான முறையில் இறந்து சடலமாக மீட்கப்பட்டதை நாம் அறிவோம்.

    டெல்லியில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பும், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல்தான் நிலவி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு பயில செல்லும் தமிழக மாணவர்கள் இறப்பதற்கான காரணங்களை கண்டறிந்து களையாமல் இத்தகைய உயரிழப்புகளை தடுக்க முடியாது.

    தமிழக அரசு எப்போதும் போல ஸ்ரீமதி இறப்பையும் கடந்து செல்லாமல் உரிய விசாரணையை நடத்தி இறப்பிற்கான காரணத்தை வெளிக்கொணர வேண்டும். மற்ற மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Student #commitsuicide
    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடு-வீடாகபுகுந்து ஆய்வு செய்கிறார். வீடுகளில் தேங்கி உள்ள தண்ணீரில் ஆய்வு செய்து டெங்குவை பரப்பும் கொசுவை கண்டறிந்து அதை ஒழிக்க உத்தரவிட்டு வருகிறார்.

    மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்களின் தீவிர நடவடிக்கையால் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    எனினும் பொதுமக்களில் பலர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி, இருமல் மற்றும் வி‌ஷக்காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் 50க்கும் மேற்பட்ட மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியில் புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அப்போதைய கலெக்டர் பிரபாகரிடமும் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு திடீரென அந்த டாஸ்மாக்கடை திறக் கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதையடுத்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

    அதன்படி மணலி கந்தசாமி வீதியில் இன்று 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது,

    எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஏற்கனவே 500 மீட்டர் தொலைவில் மதுக்கடை உள்ளது.

    இந்நிலையில் திடீரென இங்கு மதுக்கடையைதிறந்துள்ளனர் இந்த மதுக்கடை ஒட்டியே குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

    இந்த மதுக்கடை திறந்ததால் இரவில்இப்பகுதியில் பெண்கள் நடந்து செல்வதற்கும் பயப்படுகிறார்கள். மேலும் 200 மீட்டர் தொலைவில் ஒரு கோயில் உள்ளது. இதனால் கோவில் செல்வதற்கும் பயப்படுகிறார்கள் எனவே எங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துகிறோம்.

    தொடர்ந்து இன்று மதியம் 2 மணியளவில் எங்கள் பகுதி சேர்ந்த மக்கள் கலெக்டர் கதிரவனை சந்தித்து வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவர் அவர்கள் கூறினர்.

    டெல்லியில் தற்கொலை செய்த ஐ.ஏ.எஸ். மாணவியின் உடல் இன்று அதிகாலை சத்தியமங்கலம் ஆலாம்பாளையத்துக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. #Student #commitsuicide

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளைத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவரது மகள் ஸ்ரீமதி (20).

    கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முடித்த மாணவி ஸ்ரீமதிக்கு கலெக்டர் ஆக விருப்பம் ஏற்பட்டது. மகளின் ஆசையை நிறைவேற்ற அவரது தந்தையும் அவரை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார்.

    டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் ஸ்ரீமதி ஐ.ஏ.எஸ். படித்து வந்தார். அருகே உள்ள விடுதியில் தங்கி இருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த ஒரு மாணவியும் தங்கி இருந்தார்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதி தனது அறையில் தூக்குப்போட்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். உடன் இருந்த நெல்லை மாணவி தன் தோழி தற்கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.


    போலீசார் மாணவி ஸ்ரீமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவியின் தற்கொலை செய்தி சத்தியமங்கலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிககப்பட்டது. கதறி அழுதபடி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    அங்குள்ள மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பெற்றோர் மற்றும் தனது தம்பி வருண்ஸ்ரீ மீது அதிக பாசம் கொண்ட ஸ்ரீமதிக்கு அவர்களை பிரிந்து தனியாக இருக்க முடியவில்லை. மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் படிப்பிலும் அவரால் அதிக ஆர்வம் காட்ட முடியவில்லை.

    இந்த நிலையில்தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மாணவியின் உடல் சத்தியமங்கலம் ஆலாம்பாளையத்துக்கு வந்தது. அவரது உடலை பார்த்து உறவினர்களும் ஊர்மக்களும் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

    ஸ்ரீமதி தற்கொலை செய்வதற்கு முன் பெற்றோருக்கு போன் செய்து உள்ளார். ‘‘தீபாவளிக்கு ஊருக்கு வருகிறேன்’’ என்று கூறினார்.

    அவரது உயிரற்ற உடலைப்பார்த்த உறவினர்கள் ‘‘தீபாவளிக்கு வருவேன் என்று சொன்னீயே இப்போது பிணமாக வந்துள்ளாயே’’ என்று கூறி கதறி அழுதனர். அவரது தந்தை ‘‘நீ ஆசைப்பட்டபடிதானே அம்மா ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தேன். இப்படி பார்க்கவா டெல்லிக்கு அனுப்பினேன்’’ என்று கதறி துடித்தார்.

    இந்த உருக்கமான காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமக்கியது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அப்பகுதியில் மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட்டது. #Student #commitsuicide

    டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Student #commitsuicide
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ வியாபாரியாக உள்ளார்.

    இவரது ஒரே மகள் ஸ்ரீமதி. கலெக்டர் ஆக வேண்டும் என விருப்பப்பட்ட மகளை அவரது தந்தை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார். ஸ்ரீமதி டெல்லியில் தங்கி ஐ.ஏ.எஸ் படித்து வந்தார். அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஸ்ரீமதி தங்கி உள்ள விடுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

    ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோருக்கு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் இன்று காலை கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    ஐ.ஏ.எஸ் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் உயிரிழந்த ஸ்ரீமதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளானவர்போல் காணப்பட்டதாக டெல்லி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



    பிரேத பரிசோதனை முடிந்து ஸ்ரீமதியின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து பதப்படுத்துவதற்காக (எம்பால்மிங்) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

    எம்பால்மிங் முடிந்த பின்னர் ஸ்ரீமதியின் உடல் தமிழ்நாட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு இன்றிரவுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Student #commitsuicide
    தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் ஆடிட்டர் படிப்பிற்கு 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    கோபி:

    கோபியில் கீரிப்பள்ள ஓடை, ஈரோடை அமைப்பு சார்பில் தூர்வாரப்பட உள்ளது. இன்று காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியைத் துவக்கி வைத்தார்.

    தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு தமிழகத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    பின்னர், அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும்.



    தமிழகத்தில் 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் துவக்கப்பட உள்ளன. இதற்கு தாய்மொழிதான் முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில் வழியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினால் ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படும். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படும் இந்த அரசு இருமொழி கொள்கையைப் பின்பற்றும்.

    பள்ளிகளில் மாணவிகள் பாலியில் தொந்தரவுக்கு ஆளானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பழைய வரலாறு மாறாத வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். கோபியை குப்பையில்லாத நகரமாக மாற்ற ரூ.3 கோடியே 86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கீரிப்பள்ள ஓடையை கான்கிரீட் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterSengottaiyan

    ஈரோட்டில் நிதி நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கீழ் திண்டல் நல்லியம்பாளையம், பாலாஜி ஆர்கேட் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 51).

    சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று வழக்கம் போல் ரவி வேலைக்கு சென்றுவிட்டார்.

    அவரது மனைவியும் 2 மகள்களும் ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர். நேற்று இரவு ரவி வேலை முடிந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ள 2 பீரோக்கள் கதவு திறந்து துணிகள் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு ரவி அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ரவி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

    கொள்ளை நடந்த வீட்டிலும் அந்த பகுதியிலும் சி.சி.டி.வி. கேமிரா இருக்கிறதா? என்று போலீசார் பார்த்தனர். ஆனால் கேமிரா பொருத்தப்படவில்லை.

    இதனால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு தாலுகா போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திண்டல் அடுக்குமாடி குடியிருப்பில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் அடுத்த காரபாறைப் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் திண்டல் கே.எஸ் நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சுதாகர் (வயது 19).

    சண்முகம் தான் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் ரூம் எடுத்து தங்கி வந்தார். தந்தையை பார்க்க சுதாகர் அடிக்கடி ரூமிற்கு வருவது வழக்கம்.

    சண்முகத்திடம் அடுக்கு மாடியில் வசித்து வருபவர்களின் வீட்டு சாவி இருந்தது. சம்பவத்தன்று சண்முகம் சாவியை ரூமில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.

    அப்போது அங்கு வந்த சுதாகர் அந்த சாவியை எடுத்து அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவை திறந்தார். பிறகு அங்கு இருந்த 3 பவுன் நகையை திருடி சென்று விட்டார்.

    இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுதாகர் தான் அந்த வீட்டில் கொள்ளையடித்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டார்.

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த மற்றொருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஈரோடு:

    காங்கயம் அருகே உள்ள வீராணம்பாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ்(வயது 25) பட்டதாரி. இவரது நண்பர் செந்தில்குமார்(26) இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இவர்களது 2 பேரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் காங்கயத்துக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    நல்லிபாளையம் பிரிவில் வந்த போது நிலைத்தடுமாறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதில் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். சுபாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே வாழ்க்கையில் விரக்தி அடைத்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள சாவடிபாளையம், பெரியாக்கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60).

    இவரது மனைவி சுசீலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது.

    அருணாச்சலம் தனது மனைவி சுசீலாவுடன் தோட்டத்து வீட்டில் வசித்து விவசாயத்தை கவனித்து வந்தார்.

    இந்த நிலையில் அருணாச்சலம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார்.

    இந்த நோய் காரணமாக அருணாச்சலம் மன வேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அவர் வீட்டின் விட்டத்தில் கயிறால் தூக்கு போட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் இதை பார்த்தனர்.

    அவர்கள் அருணாச்சலத்தை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அருணாச்சலம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளதாக அமைச்சர் கருப்பணன் கூறினார். #ADMK #KCKaruppannan
    அம்மாபேட்டை:

    உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பில் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதை கொண்டாடும் வகையில் அம்மாபேட்டை ஒன்றியம் சித்தாரில் ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சரவணபவா தலைமையில் இனிப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    இதில் கலந்து கொண்டு அமைச்சர் கே.சி.கருப்பணன் சித்தார் மற்றும் செம்படாபளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சில புல்லுருவிகள் அதிமுகவை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டார்கள் ஆனால் அவர்களது கனவு பலிக்கவில்லை.

    சபாயநாகரின் 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சம்பந்தமான விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் தர்மம் வென்றுள்ளது. வரும் காலங்களில் ஜெயலலிதா ஆசியோடு அண்ணன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KCKaruppannan
    ஈரோட்டில், செல்போன் திருடிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சுப்பிரமணியசிவா வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 29). ஜவுளிக்கடை உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு சென்று, ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள புதிய ஸ்மார்ட் போன் வாங்கி உள்ளார். பின்னர் அவர் அந்த செல்போனை அங்குள்ள ஒரு மேஜையில் வைத்துவிட்டு, கடை ஊழியரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அவரது பக்கத்தில் நின்று கொண்டு இருந்த ஒருவர் அந்த செல்போனை எடுத்து அருகில் நின்று கொண்டு இருந்த மற்றொருவரிடம் நைசாக கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றனர். இதை கவனித்த கடை ஊழியர் “திருடன், திருடன்” என கூச்சலிட்டார்.

    அவரது சத்தம் கேட்டு, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் துரத்திச்சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள், பெரியசடையம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடபதி (55), ராஜ்குமார் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் தந்தை, மகன் என்பதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடபதி, ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
    ×