என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் தலைவர் அழகிரி படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கடந்த சில தினங்களுக்கு முன்பு த.மா.கா, பாரதிய ஜனதாவுடன் இணைப்பது தற்கொலைக்கு சமம். அதற்கு பதிலாக த.மா.கா.வினர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள ரவுண்டானாவில் ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமையில் த.மா.கா.வினர் திரண்டனர். பின்னர் அவர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினர். அப்போது திடீரென அழகிரி உருவப்படத்தை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பெருந்துறை அருகே இன்று மோட்டார் சைக்கிள்-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பெருந்துறை:

    நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது33). தனசேகர் தற்போது வெள்ளோடு அருகே உள்ள குட்டபாளையத்தில் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    தனசேகர் தினமும் குட்ட பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறையில் தான் வேலை செய்யும் பனியன் கம்பெனியில் கிளை அலுவலகம் செயல்படுகிறது. அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பெருந்துறையில் இருந்து திருப்பூருக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.

    அதே போன்று இன்றும் குட்ட பாளையத்திலிருந்து தனசேகர் தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறை நோக்கி வந்து கொண்டிருந்தார். குனம்பட்டி பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு வேனும், தனசேகர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தனசேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ள பர்கூர் வனப்பகுதியில் குடற்புண் நோய் தாக்கி பெண் யானை பலியானது.

    அந்தியூர்:

    அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ள பர்கூர் வனப்பகுதியில் நேற்று பர்கூர் வன ரேஞ்சர் மற்றும் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது ஒரு பெண் யானை இறந்து கிடப்பதை கண்டனர். இது பற்றிய தகவல் கால்நடை மருத்துவர் அசோகனுக்கு தெரிவிக்கப்பட்டது.

    கால்நடை டாக்டர் அந்த யானை உடலை பரிசோதித்த போது அந்த யானை குடற்புண் நோய் தாக்கி இறந்தது தெரியவந்தது. மேலும் அந்த யானை தண்ணீர் மட்டும் அதிகம் உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    வனப்பகுதியில் தற்போது வறட்சி நிலவுவதால் தண்ணீர் இல்லாமல் சில இடங்களில் மட்டும் சேறும்-சகதியும் புழுக்கள் நிறைந்த தண்ணீரை அந்த யானை குடித்துள்ளது. இதனால் அந்த பெண் யானை புழுக்களால் தாக்கப்பட்டு பலியானது தெரியவந்தது. அந்த பெண் யானையின் வயது 24 ஆகும். 

    ஈரோடு மேட்டூர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புதிய மேம்பாலம் கட்டப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய சாலைகளில் ஒன்றாக மேட்டூர் ரோடு திகழ்கிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூர், கோவை, ஊட்டி, பழனி, மதுரை, கரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வரும் பஸ்கள் மேட்டூர் ரோடு வழியாக சென்று பஸ் நிலையத்துக்குள் சென்று வந்தன. ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டிய பஸ்கள் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வாசுகி வீதி வழியாக திருப்பி விடப்பட்டன.

    பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டாலும், மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. சுவஸ்திக் கார்னர் சிக்னலில் இருந்து முனிசிபல் காலனி வரை வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், பகலில் மேட்டூர் ரோடு வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடிதான் செல்ல வேண்டியுள்ளது.

    இந்த நிலையில் வாசுகிவீதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் அனைத்து பஸ்களும் மேட்டூர் ரோடு வழியாக செல்கிறது. இதனால் நேற்று முன்தினம் மேட்டூர் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய மேம்பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, “ஈரோட்டில் உள்ள முக்கிய சாலைகளில் மேட்டூர் ரோட்டில்தான் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அங்கு பாலம் கட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரப்ரோடு, ஈ.வி.என்.ரோடு, பெருந்துறை ரோட்டை இணைத்து புதிய மேம்பாலம் கட்டப்படும்போதே மேட்டூர் ரோட்டிலும் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது மேம்பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனையும் செய்யப்பட்டது. ஆனால் மேம்பாலம் கட்டப்படவில்லை. எனவே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.
    பாலியல் பலாத்காரம் செய்ததாக ஈரோடு தொழில் அதிபர் மீது மேலும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37) என்பவரை ஈரோடு மகளிர் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    தற்போது அவர் கோர்ட் உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ராதாகிருஷ்ணனால் ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போலீசார் ஒரே ஒரு பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை மட்டும் பதிவு செய்து கைது செய்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட மேலும் பெண்கள் புகார் அளித்தால், ராதாகிருஷ்ணனை காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர்.

    இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆன 26 வயது இளம்பெண் ஒருவர், ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு எஸ்பி அலுவலகத்தில், எஸ்.பி சக்தி கணேசனிடம் புகார் அளித்தார்.

    புகாரில் எனக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு திருமணம் ஆனது. எங்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அப்போது நான் குடும்ப வறுமையின் காரணமாக கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்கு சென்று வந்தேன். என் கணவர் மதுப்பழக்கம் அடிமையானவர். இதனால் டாஸ்மாக் பாரில் தினந்தோறும் சென்று வருவார். அப்போது, ராதாகிருஷ்ணன் என் கணவரிடம் பழகி, அவருக்கு மது வாங்கி கொடுத்து அடிமையாக்கினார். பிறகு வீட்டுக்கு அடிக்கடி வந்து நல்லது செய்வதுபோல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் கைதான விவகாரம் தொடர்பாக செய்தி வந்ததால் புகார் செய்துள்ளேன் என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து எஸ்.பி சக்தி கணேசன் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார் மீது ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை எடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது இன்று மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
    ஈரோடு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வடமாநில வாலிபர் ரெயில் மோதி பலியானார். இந்த சம்பவத்தை பார்த்த பயணிகள் அலறினர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது 1-வது நடை மேடையில் ரெயிலுக்காக நூற்றுக்கணக்கானோர் காத்து கொண்டு இருந்தனர்.

    அப்போது 1-வது நடை மேடையில் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வாலிபர் மீது கண் இமைக்கும் நேரத்தில் ரெயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் இறந்தார். ரெயிலுக்காக காத்து நின்ற பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்து அலறினர்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த வட மாநில வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் சிகப்பு நீளக்கோடு போட்ட சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தார்.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    ஈரோடு அருகே கூடுதல் பணம் கேட்டு மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
    ஈரோடு:

    ஈரோடு பழைய பாளையம் சுத்தானந்தன் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். ஜவுளிக்கடையில் மடிக்காரராக வேலை பார்த்து வந்தார். குடும்ப செலவிற்காக குமலன்குட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 40 ஆயிரம் கடன் வாங்கினார்.

    வாங்கிய கடனில் ரூ.30 ஆயிரத்தை திரும்ப செலுத்தி விட்டார். எனினும் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மேலும் ரூ.30 ஆயிரம் தர வேண்டும் என்று ஸ்ரீதரிடம் அழுத்தம் கொடுத்தனர். இதன் காரணமாக கடந்த வாரம் ஸ்ரீதர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த உரிமையாளர் மற்றும் ஊழியர் என இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். உரிமையாளரும், ஊழியரும் தலைமறைவாகிவிட்டனர்.

    இந்நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். ஆனால் உரிமையாளர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உரிமையாளரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் சூறைகாற்றுடன் மழை பெய்ததால் 1500 வாழை மரங்கள் நாசமாகின. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் முறிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை 4 மணியளவில் சாரல் மழையாக ஆரம்பித்து பின் சூறைகாற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    தாளவாடி இக்களூர் சிக்கள்ளி, தொட்ட காஜனூர், சூசைபுரம், பாரதிபுரம், ஒசூர் ஆகிய பகுதியில் சுமார் 20 நிமிடம் மிதமான மழை பெய்தது. தாளவாடி அருகே ஓசூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் 3 ஏக்கர் நேந்திரம் வாழை பயிர் செய்து இருந்தார். சூறைகாற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 1500 வாழை மரங்களும் முறிந்து நாசம் ஆனது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழைகள் முறிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    அதேபோல் கும்டாபுரம் அரசு தொடக்கபள்ளி வளாகத்தில் இருந்த கருவேலமரம் முறிந்து தடுப்பு சுவர் மீது விழுந்தது தாளவாடி பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் சூறைக்காற்று வாழைகளை நாசப்படுத்தி வருவதால் தாளவாடி வட்டார விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    கொடுமுடி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 11 கொத்தடிமைகள் மீட்ட போலீசார், 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள மலையம்பாளையம் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்ட ஈஞ்சம் பள்ளியில் தனியாருக்கு சொந்தமான “பேப்பர் கோன்” தயார் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 11 பேரை திருச்செங்கோடு அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஏஜெண்டாக இருந்து பேப்பர் கோன் நிறுவனத்தில் சேர்த்து விட்டாராம்.

    இப்படி அந்த நிறுவனத்தில் சேர்க்கப்பட்ட 11 பேரையும் வெளியே விடாமல் சம்பளமும் சரியாக கொடுக்காமல் இருந்ததாக மொடக்குறிச்சி தாசில்தார் அரபுனிஷாவுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது தலைமையில் ஊழியர்கள் அந்த தனியார் நிறுவனத்துக்கு சென்று விசாரித்து அங்கு கொத்தடிமைகளாக இருந்த 11 பேரையும் மீட்டனர்.

    பிறகு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிய மொடக்குறிச்சி தாசில்தார் அவர்களை அவர்களின் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மொடக்குறிச்சி தாசில்தார் அரபுனிசா இது குறித்து கொடுமுடி போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் தனியார் நிறுவன உரிமையாளர் ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த பிரசாத் சிவசேனன் ஏஜெண்டு சரவணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் ஆசை வார்த்தை கூறி 8-ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு:


    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). ஆட்டோ டிரைவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ராமு ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு சென்று வந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராமு அந்த மாணவிடம் பழகி வந்தார்.

    மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் இந்த சிறுமி வீட்டில் இருந்தார். நேற்று ராமு மாணவி வீட்டிற்கு சென்று சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ராமு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ராமு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து ஈரோடு மகளிர் போலீசார் ராமு மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

    இளம்பெண்ணை காதல் கணவருடன் சேர்த்து வைக்க போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கார்த்திகேயன் தனது மனைவியுடன் உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து வாழப்போவதாக தெரிவித்தார்.


    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 28). இவரது கணவர் பெயர் கார்த்திகேயன் (28).

    இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போது, பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது.

    காதல் தம்பதியினர் அந்தியூர் அருகே உள்ள பூலாப்பாளையத்தில் தனியாக வாடகை வீடு எடுத்து அதில் வசித்து வந்தனர். கார்த்திகேயன் கோவை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இதற்கிடையே கடந்த 6 மாதத்துக்கு முன் காதல் தம்பதியினரிடையே திடீர் தகராறு ஏற்பட்டு அவர்களது வாழ்விலும் விரிசல் ஏற்பட்டது.

    கணவருடன் தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் ஹேமலதா அவரிடம் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு போய்விட்டார். எனினும் அவரால் காதல் கணவரை மறக்க முடியவில்லை.

    இதனால் ஹேமலதா பவானி போலீசில் புகார் செய்தார். தனது “கணவரை அழைத்து பேசி என்னுடன் சேர்த்து வையுங்கள்” என்று புகாரில் கூறினார்.

    இதையொட்டி போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கடந்த 1-ந்தேதி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வைத்து பேசினார். பிறகு ஹேமலதா கணவன் சென்று விட்டார்.

    இந்த பேச்சுவார்த்தை சரியாக நடக்கவில்லை சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஹேமலதா அந்தியூர் பர்கூர் ரோட்டின் மத்தியில் தனியாக உட்கார்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை சமரசம் செய்தனர். கோரிக்கையை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று கூறினர்.

    இதையடுத்து 20 நிமிடத்துக்குப்பிறகு ஹேமலதா சாலை மறியலை கைவிட்டார்.

    இந்த நிலையில் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு மீண்டும் கணவரும் மனைவியும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் வருண்யா ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வெற்றி பெற்றது. கார்த்திகேயன் தனது மனைவியுடன் உள்ள கருத்து வேறுபாட்டை மறந்து சேர்ந்து வாழப்போவதாக தெரிவித்தார். இதை கேட்டு ஹேமலதா மிகவும் மகிழ்ந்தார். பிறகு போலீசாருக்கு நன்றி தெரிவித்த காதல் தம்பதியினர் அங்கிருந்து ஜோடியாக தங்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.




    தனக்கு உதவுவது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ஈரோடு தொழில் அதிபர் மீது பெண் ஒருவர் போலீசில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம் பட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் என்பவர் மீது ஈரோடு வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் புகார் கூறியிருந்தார்.

    தன்னை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக கூறியிருந்தார். இதை குறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்கொண்ட புகார் உண்மை என தெரிய வந்தது.

    இதன்பேரில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர். ராதாகிருஷ்ணன் மேலும் சில பெண்களிடம் இதே போன்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளிவந்தன.

    இந்த சூழ்நிலையில் ஈரோடு எஸ்பி அலுவலகத்திற்கு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த மேலும் பெண் ஒருவர் வந்து தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    எனக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். என் கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    மதுக்கடையில் வைத்து எனது கணவருக்கும் ராதாகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதைக் காரணமாக வைத்து அவர் அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவார். எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்தி சமாதானப்படுத்தி வைத்தார். என் ஏழ்மையான சூழ்நிலையை புரிந்துகொண்டு எனக்கு உதவுவது போல் என் வீட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கினார்.

    இந்நிலையில் ஒருநாள் திடீரென ராதாகிருஷ்ணன்? என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ந்து என்னை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது ராதாகிருஷ்ணன் பற்றிய செய்தியை பார்த்தேன். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் இதேபோன்று பல பெண்களை தனது வலையில் வீழ்த்தியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகாரில் “ராதாகிருஷ்ணன் என்னை போன்று பல பெண்களை மிரட்டி கற்பழித்துள்ளார்” என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் மேலும் ஒரு பெண் அவர் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போலீசார் ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய செல்போனில் ஏதேனும் ஆபாச வீடியோக்கள் உள்ளதா? அல்லது ஆபாச வீடியோக்களை அவர் அழித்தாரா? என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

    இதேபோன்று ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் புகார் கொடுக்க இன்று வரக்கூடும் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
    ×