என் மலர்tooltip icon

    ஈரோடு

    டி.என்.பாளையம் அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தை நடமாட்டத்தை பார்வையிட அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம், ஏழூர், பெரியகொடிவேரி பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை பிடித்து வேட்டையாடி வருகிறது.

    இதனையடுத்து டி.என்.பாளையம் வனத்துறை சார்பில் கேமரா பொறுத்தியும் கூண்டு வைத்தும் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பெரிய கொடிவேரி நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன் பெரிய கொடிவேரி விவசாய தோட்டத்தில் புகுந்த சிறுத்தையை பிடிக்க வைத்துள்ள கூண்டில் சிறுத்தை சிக்கியுள்ளதா என்று பார்வையிட நேரில் ஆய்வு செய்ய வந்தார். சிறுத்தையின் நடமாட்டம் தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளதா? எனவும் வனத்துறையினரிடம் கேட்டறிந்தார். 

    மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு ஈரோடு மாவட்ட பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது.

    ஈரோடு:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டே இருக்கிறது.

    இது குறித்து ஈரோடு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது ரஜினியின் கருத்தை வரவேற்று உள்ளனர். துணிச்சலான முடிவு எனவும் புகழ்ந்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் குறித்து யார் வேண்டுமானாலும் பேசுவதற்கு இந்த நாட்டில் உரிமை உள்ளது. இவர் தான் பேசவேண்டும் இவர் பேசக் கூடாது என்பதெல்லாம் கூற வேண்டியதில்லை.

    குடியுரிமை திருத்த சட்டம் குறித்த சட்டத்தை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ஞானம் பெற்று ரஜினிகாந்த் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். சிலர் சட்டத்தை படிக்காமல் பேசிக் கொண்டு இருக்கின்றனர். ரஜினிகாந்த் கூறியுள்ள தெளிவான கருத்தை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.

    பா.ஜ.க. மாநில சட்டத் துறை அமைப்பாளர் ஈரோடு பழனிசாமி கூறியதாவது:-

    எந்த நாடாக இருந்தாலும் குடியுரிமைச் சட்டம் என்பது அவசியம் இந்த சட்டத்தால் இந்தியாவில் யாரும் பாதிக்கபடப்போவது இல்லை. இந்தக் கருத்தைத்தான் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    இந்தக் கருத்தை இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து போல் அரசியல் கட்சிகள் சித்தரித்து வருகின்றன. இந்த சட்டத்தால் இந்தியாவிலுள்ள எந்த மதத்தினரும் பாதிக்கப்படப் போவது இல்லை என ரஜினிகாந்த் கூறிய கருத்தில் எந்தவித தப்பும் இல்லை அவர் கூறிய கருத்து மிகச் சரியான தெளிவான கருத்து வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில்5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு மட்டுமன்றி அவர்களது பெற்றோருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

    இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கும் என்று கூறி பெற்றோர்களும், ஆசிரியர் சங்கங்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் உடனடியாக பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் பழைய முறையே தொடரும் என்றும் அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக 5, 8-வகுப்பு மாணவ-மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட மாணவ மாணவிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.

    கோபியை அடுத்த வேங்கை அம்மையார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் வகுப்பு மாணவி அனு பிருந்தா ஸ்ரீ, மாணவன் முகேஸ்வரன் அகியோர் கூறும்போது, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு மாணவர் களுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்தவுடன் நாங்கள் ஒரு வகையான பதட்டத்திற்கு உள்ளானோம். மேலும் இந்த அறிவிப்பு எங்களுக்கு மன அழுத்தத்தையும் தந்தது. மேலும் ஆசிரியர்கள் இதற்காக எங்களுக்கு தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தினர்.

    இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்று அறிவித்துள்ளார். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிம்மதியும் தந்துள்ளது. தமிழக அரசுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

    அந்தியூர் அருகே தவிட்டுபாளையம் அரசு பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவ மாணவிகள் கூறும் போது, பொதுத்தேர்வு என்ற அறிவிப்பு எங்களுக்கு முதலில் பயத்தை உண்டாக்கியது. எங்களைவிட எங்களது பெற்றோர் பயந்து கொண்டே இருந்தனர். தற்போது பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பு எங்களுக்கு மன மகிழ்ச்சியை தந்துள்ளது என்றனர்.

    இதேபோன்று பெருந்துறையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் வகுப்பு மாணவன் தினேஷ், மாணவி பிரியதர்ஷினி ஆகியோர் கூறும்போது, பொது தேர்வு என்று சொன்னவுடன் நாங்கள் பயந்தோம் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று ஒருவிதமான பதட்டம் ஏற்பட்டது. மேலும் மூன்று பருவ பாடப் புத்தகத்திலும் சேர்த்து படிக்க வேண்டியதாக இருந்தது.

    இதனால் நாங்கள் என்ன செய்வது என்று நினைத்திருந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்றனர் .

    பவானி நகராட்சி நடுநிலை பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகள் ஜனனி, ஜோஷிகா ஆகியோர் கூறும்போது, பொதுத்தேர்வு என்றவுடன் நாங்கள் முதலில் பயந்து விட்டோம். எங்களது பெற்றோர்கள் எப்பபாத்தாலும் படி படி என்று எங்களைக் கட்டாயப்படுத்தினார். இந்த நிலையில் பொது தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம் என்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் தெற்கு போக்குவரத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு, அபராதம் விதித்துள்ளனர்.

    அதன்படி அதிவேகமாக சென்றதாக 34 வழக்குகளும், அதிக பாரம், செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்கியதாக 80 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் சென்றதாக 969 வழக்குகளும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் 135 வழக்குகளும் என மொத்தம் வாகன விதிமுறைகளை மீறியதாக 2585 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    அந்தியூர் அருகே ஊராட்சி குடிநீர் டேங்க் ஆபரேட்டரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் மாதையன், இவர் அப்பகுதி ஊராட்சி குடிநீர் டேங்க் ஆபரேட்டராக 30 வருடமாக பணிபுரிந்து வருகிறார்.

    குடிநீர் மேல்நிலை தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து விடுவது சம்பந்தமாக மாதையனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கியதில் முகம்,தலையில் பலத்த காயம் பட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    அந்தியூர் போலீசில் இது குறித்து அவர் புகார் அளித்தார், ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் பிரதான சாலையில், பிரம்மதேசம் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த அந்தியூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் டேங்க் ஆப்ரேட்டர் மாதையனை தாக்கியவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

    இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் அந்தியூர் - ஆப்பக் கூடல் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசம்செய்வது தொடர் கதையாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச் சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதும் இரவு நேரங்களில் காவல் காக்கும் விவசாயிகளை தாக்குவதும் தொடர்கதையாகிவருகிறது .

    இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட திகனாரை அருகேஉள்ள ஜோர காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார். அவரது விவசாய நிலத்தில் வாழை மற்றும் தென்னை பயிர் செய்துள்ளார் .

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த 15 யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது சத்தம் கேட்டுவந்த விவசாயி யானைகள் வாழை பயிர்களை நாசம் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அருகில் இருந்த விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். பட்டாசு வெடித்தும் தீ பந்தம் காட்டியும் யானைகளை விரட்ட தொடங்கினர். கூட்டமாக யானைகள் வந்ததால் வனப்பகுதியில் செல்லாமல் தொடர்ந்து வாழை பயிர்களை நாசம் செய்தது.

    சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் வனப்பகுதியில் சென்றது. யானைகள் மிதித்து நாசம் செய்ததில் 1 ஏக்கர் வாழை சேதாரம் ஆனாது.

    தாளவாடி மலைப் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசம்செய்வது தொடர் கதையாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    வனவிலங்குகளால் சேதாரம் ஆகும் பயிர்களுக்கு உரிய இழப்பீடும் வனத்துறையால் வழங்கப்படுவது இல்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். யானைகள் விவசாய தோட்டத்தில் புகாதவாறு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    டி.என்.பாளையம் அருகே சிறுத்தையை பிடிக்க கரும்பு தோட்டம் மற்றும் வாழை தோட்டத்தில் வனத்துறை சார்பில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம், பெரியகொடிவேரி, கவுண்டன்புதூர் (ஏழூர்) போன்ற கிராமங்களில் கடந்த மூன்று நாட்களாக ஆடு, மாடு மற்றும் நாய் என கிராமத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று வேட்டையாடி வருகிறது.

    இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து அந்த சிறுத்தையை பிடிக்க கரும்பு தோட்டம் மற்றும் வாழை தோட்டத்தில் வனத்துறை சார்பில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதி கிராம மக்கள் இரவு நேரத்தில் வெளியே வரவேண்டாம் என்று தண்டூரா போடப்பட்டுள்ளது.

    5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை ஆசிரியர்கள் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    கோபி:

    கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    5 மற்றும் 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு ஆசிரியர்கள் திருப்பி அளிப்பதுதான் அவர்களது கடமை.


    மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து தற்போது வரைபடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விபரம் வரவில்லை. வந்தால் தான் அது குறித்து ஆய்வு செய்யமுடியும்.

    5 மற்றும் 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தியதற்கு கிடைத்த வெற்றி என்பதெல்லாம் தவறான செய்தி.

    மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருமளவிற்கு மீண்டும் பயிற்சி அளித்து பரிசீலனை செய்யலாம் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    நீட் தேர்வு


    நீட் தேர்வு பயிற்சி தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. நீட்தேர்வு விலக்கு கோராமல் பயிற்சி அளிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். நீட்தேர்வு வருவதற்கு கையெழுத்திட்டது காங்கிரஸ் அரசு தான். அவர்கள் தான் நீட்தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இடையில் நாங்கள் மாட்டிக்கொண்டுள்ளோம்.

    தமிழக முதல்வர், பிரதமர், மற்றும் குடியரசு தலைவரை சந்திக்கின்ற போதெல்லாம் நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

    அரசு பள்ளிகளில் இந்தி விருப்ப பாடமாக வேண்டும் என ஒருசில ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது. ஆசிரியர்கள் இருக்கின்ற பாடத்தை ஒழுங்காக சொல்லிக் கொடுத்தாலே போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் என்று பதில் அளித்தார்.
    அந்தியூர் அருகே பஞ்சாயத்து தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சின்னதங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் (வயது 48) அ.தி.மு.க பிரமுகர்.

    நேற்று காலை ராதாகிருஷ்ணன் அந்தியூர் அருகே செல்லப்பபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

    பிறகு அந்த கும்பல் காரில் ஏறி தப்பி ஓடினர். கொலையாளிகளை உடனே பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவு படி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.

    இதையொட்டி கவுந்தப்பாடி அருகே வந்த காரை போலீசார் விரட்டினர். காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய 4 பேரை போலீசார் பிடித்தனர்.

    கைதான 4 பேரும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த கூலிப்படையினர் என திடுக்கிடும் தகவல் தெரிந்தது.

    கூலிப்படையை சேர்ந்த சரவணன், பாலமுருகன், ராஜேஷ் மற்றும் சிவா ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் கொலையில் திடுக் தகவல் கிடைத்து உள்ளது. பழிக்கு பழியாக இந்த கொலை நடந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    அந்தியூர் அருகே கடந்த 2013-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் பிரச்சினையில் சேகர் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு ராதாகிருஷ்ணன் மீது இருந்தது.

    இதந்கு பழிக்கு பழி வாங்க அவரது மகன் அரவிந்த் என்பவர் 7 ஆண்டுகளுக்கு பிறகு கூலிப்படையை ஏவி ராதாகிருஷ்ணனை கொலை செய்தது. போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    மேலும் பஞ்சாயத்து தலைவரை கொல்ல சென்னை கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்திற்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டை சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தியின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் மூதாட்டி பாப்பாத்தி (வயது 75).

    தி.மு.க. மீதும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். ஆனால் அவர் கட்சியில் ஒரு உறுப்பினர் கூட கிடையாது.

    சிறந்த தமிழ் ஆர்வலரான பாப்பாத்திக்கு கருணாநிதியின் தமிழ் மற்றும் மு.க.ஸ்டாலினின் அணுகுமுறை பேச்சாற்றலில் ஈர்க்கப்பட்டவர்.

    ஈரோடு மாவட்டத்தில் முன்பு கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்வார்.

    கடந்த 2008-ம் ஆண்டு பாப்பாத்தி தன்னந்தனியாக தனது சொந்த செலவில் சென்னை சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்தார். மேலும் அப்போதைய தி.மு.க.தலைவர் கருணாநிதியையும் சந்தித்தார். தி.மு.க. மீது பற்று கொண்ட பாப்பாத்தியுடன் மு.க.ஸ்டாலின் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தார்.

    இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக பாப்பாத்தி நேற்று திடீர் மரணம் அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருத்தம் அடைந்தார். பாப்பாத்தி மறைவுக்கு இரங்கலும் தெரிவித்தார்.

    அவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், “பாப்பாத்தி மறைவு செய்தி எனக்கு வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் பாப்பாத்தி வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு தி.மு.க. கொடி போர்த்தி மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர்.

    அந்தியூர் அருகே அதிமுக பஞ்சாயத்து தலைவரை காரில் வந்த மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சலங்கபாளையம் ஊராட்சி தலைவராக இருந்தவர் சின்ன தங்கம் என்ற ராதா கிருஷ்ணன் (வயது 45). அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்

    சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தேர்தெடுக்கப்ட்டவர்.

    ராதாகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி அளவில் அந்தியூர் அருகே செல்லப்பம் பாளையம் பகுதியில் ஒரு பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வேகமாக ஒரு கார் அவர் முன் வந்து நின்றது. காரில் இருந்த கும்பல் திபு..திபுவென வந்து இறங்கியது. அடுத்த கனம் அந்த கும்பல் அங்கு நின்று பேசி கொண்டிருந்த பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் உடனடியாகக அடைக்கப்பட்டன.

    அரிவாளால் வெட்டப்பட்ட ராதாகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    உடனடியாக அந்த கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். உடனடியாக அவரை அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரில் வந்த கும்பல் கர்நாடக மாநில எண் கொண்ட காரில் வந்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர் வெட்டி கொல்லப்பட்டாரா? வேறு என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டணத்தில் ராக்கெட் தளம் அமைக்க முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

    கோபி:

    கோபி அருகே உள்ள கூகலூர், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி பவள விழா நடைபெற்றது. அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ரமா ராணி வரவேற்றார்.

    விழாவில் இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

    உலக நாடுகள் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புவதற்கு பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மங்கல்யான் விண்கலத்தை முதல் முயற்சியிலேயே விண்ணில் செலுத்தி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.

    நான் பள்ளியில் படித்ததற்கும், தற்போது நீங்கள் கல்விகற்கும் முறையிலும் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசு ஆகும் என கூறியிருந்தார். தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தைப் பெற்று வல்லரசு ஆகியுள்ளது.

    நானும் உங்களைப் போல அரசு பள்ளியில் தாய் மொழியான தமிழில் தான் படித்தேன். மாணவ, மாணவிகள் படிக்கும் போது ஒவ்வொரு நாளும் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர் கல்வி பயில்பவர்கள் 49 சதவீதமாக உயர்ந்துள்ளனர். எந்த துறைக்குச் சென்றாலும் மாணவ, மாணவிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    அப்போது தான் வாழ்க்கையில் உயர முடியும். மாணவர்களான நீங்கள் தாய், தந்தையர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் தேர்வில், மதிப் பெண்களைப் பெறுவதில் எப்படி போட்டி உள்ளதோ, அதுபோல அரசு பள்ளிகளை மேம்படுத்துவதில் பொது மக்களிடம் போட்டி மனப்பான்மை வளர வேண்டும்.

    சமீபத்தில் நான் விண்ணும், மண்ணும் என்ற புத்தகம் எழுதியுள்ளேன். எனக்கு தமிழ்மொழி மீதுதான் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஆனால், பள்ளியில் படிக்கும் போது அறிவியல் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், நான் விஞ்ஞானி ஆனேன்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிடைக்கும் வாய்ப்புக்களை மாணவ, மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அடல் டிங்கர் லேப் எனப்படும் அறிவியல் ஆய்வகம் அமைப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    விளாயாட்டு மைதானம், நூலகம் அமைப்பது போல, அறிவியல் ஆய்வகம் மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டணத்தில் ராக்கெட் தளம் அமைக்கும் பணி நடக்குமா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மயில்சாமி அண்ணாதுரை கூறும் போது, அதற்கான முதல் கட்ட பணிகள் நடந்து வருகிறது என்றார்.

    ×