என் மலர்
ஈரோடு
சேலத்தில் இருந்து கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காரில் சென்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று இரவு சுமார் 8.15 மணி அளவில் திடீரென பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் சங்கமேஸ்வரர், வேதநாயகி, ஆதிகேசவபெருமாள் உட்பட பல சாமி சன்னதியில் பயபக்தியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டு பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகம் ஆகியோர் கோபி அருகே காமராஜ் நகர் பகுதியில் 3 எண்ணெய் ஆலைகளை நடத்தி வருகின்றனர். இங்கு சமையல் எண்ணெய் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் கோவை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள், மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் என 20-க்கும் மேற்பட்டோர் 5 கார்களில் இந்த நிறுவனத்திற்கு வந்து இறங்கினர்.
உடனே அவர்கள் அந்த 3 ஆலைகளுக்கும் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆலைகளின் கதவுகளையும் அதிகாரிகள் மூடிவிட்டனர். காலையில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. மேலும் உள்ளேயும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த சோதனை விடிய விடிய நடந்து. இன்று காலை நிறைவு பெற்றது. எதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து அதிகாரிகள் கூற மறுத்துவிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமானத்துறை அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்தப் பகுதி மலைப் பகுதியின் அடிவாரப் பகுதியாக உள்ளதால் யானை மற்றும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுவது வாடிக்கையாக உள்ளது.
மேலும் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகே விநாயகர் கோயில் எதிரில் உள்ள சாலையில் ஒற்றை யானை ஒன்று நடந்து வந்து விளை நிலங்களுக்குள் புகுந்து உள்ளது. இதனை பார்த்த அந்தப் பகுதி தோட்டத்து உரிமையாளர்கள் அந்த யானையை விரட்டினர்.
இதனையடுத்து மீண்டும் வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட் அருகே ராஜ்குமார் என்பவரது தோட்டத்தில் புகுந்து வாழை மற்றும் கரும்பு, தென்னை ஆகியவற்றை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. இதனை பார்த்த தோட்டத்து உரிமையாளர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டி விட்டனர்.
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்க கோரி நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் துவங்கினர்.
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இது பற்றி போக்குவரத்து துறையிடம் கோரிக்கை மனு வழங்கியும், இதுவரை பேச்சுவார்த்தை துவங்கவில்லை. 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். முன்னதாக கடந்த பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இன்று நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகையா தலைமை வகித்தார். இது குறித்து அவர் கூறும்போது, நேற்று காலை தொடங்கிய எங்களது காத்திருப்பு போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. இன்று காலை 7 மணிக்கு பின் பணி முடிந்தவர்கள் பலரும் ஒன்றுகூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
தாளவாடி அருகே பனக்கள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திராணி. (வயது 64), கொங்கள்ளி கோவில் குண்டம் திருவிழாவில் இன்று அதிகாலை கலந்து கொள்வதற்காக கொங்கள்ளி வளைவு கோயில் செல்லும் ரோடு மல்லிகார்ஜுனா தோட்டம் அன்னதானப் பந்தல் அருகே சாப்பிட்டுவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த வேன் பின்னோக்கி இயக்கிய போது நடந்து சென்று கொண்டிருந்த இந்திராணி மீதி மோதியது. இதில் கீழே விழுந்த இந்திராணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். உடலை பிரேத பரிசோதனைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டம் தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தை உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் சிறுத்தை அவ்வப்போது கிராமத்துக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது.
அண்மையில் பீம்ராஜ்நகர், சூசைபுரம், தொட்டகாஜனூர் பகுதியில் சிறுத்தை தோட்டத்திற்குள் புகுந்து 10 ஆடுகளையும், 12 நாய்களையும் வேட்டையாடியது. சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை கண்காணித்து வந்தனார்.
பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கல்குவாரி, தோட்டத்தில் என இரண்டு இடங்களில் கூண்டு வைத்தனர். ஆனால் கடந்த 4 மாதமாக சிறுத்தைகூண்டில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
இந்தநிலையில் மாவட்ட தலைமை வனப் பாதுகாவலர் நாகநாதன் உத்தரவில் தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் சிறுத்தை பதுங்கி இருப்பதாக கூறப்படும் கல்குவாரிகளில் ட்ரோன் கேமரா மூலம் 4 கல்குவாரிகளிலும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கூண்டு வைத்து உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்கபடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகரை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய மனைவி முத்தம்மாள். இவர் சம்பவத்தன்று மதியம் பவானிசாகரில் இருந்து புஞ்சைபுளியம்பட்டிக்கு தனியார் பஸ்சில் படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்து கொண்டு இருந்தார். அந்த பஸ் பவானிசாகர் டவுன்ஷிப் நிறுத்தம் அருகே சென்றபோது படிக்கட்டில் இருந்து முத்தம்மாள் திடீரென தவறி ரோட்டில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே பஸ்சும் நிறுத்தப்பட்டது. பஸ்சில் இருந்த மற்ற பயணிகளும், அக்கம் பக்கத்தினரும் முத்தம்மாளை மீட்டு ஆம்புலன்சில் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
மருத்துவமனையில் டாக்டர்கள் முத்தம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் முத்தம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் முத்தம்மாள் பஸ் படிக்கட்டில் இருந்து ரோட்டில் தவறி விழும் காட்சி, அவர் பயணம் செய்த பஸ்சில் பொருத்தப்பட்டு இருக்கும் கண் காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது வாட்ஸ்-அப்பில் வைரலாகி வருகிறது.
கோபி:
கோபி அருகே உள்ள கூகலூரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 60). அப்பகுதியில் கட்டில் மரச்சாமான்கள் தயாரிக்கும் கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவரது கடையில் இருந்து புகை குபுகுபுவென வெளிவந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கோபி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 25,000 மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
சென்னிமலை:
தர்மபுரி மாவட்டம் இண்தூர், மோகனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 23). இவர் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே கவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் தங்கி தனியார் பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை விஜய் தனது உறவினர் ஒருவருடன் சென்னிமலை அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிக்க வந்தனர். இதில் விஜய் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. தற்போது கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தண்ணீர் அதிகமாக சென்றது. விஜய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சென்னிமலை இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது.
இந்நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட பைனாப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகுமார் (48) விவசாயி அவரது விவசாய நிலத்தில் 5 ஏக்கர் வாழை பயிர் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வந்த காட்டு யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்துள்ளது. காலையில் தோட்டத்தில் சென்று பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தர் இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகள் மிதித்து நாசம் செய்த வாழைகளை ஆய்வு செய்தனர். இதில் யானை மிதித்து நாசம் செய்ததில் 2 ஏக்கர் வாழை சேதாரம் ஆனாது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதாரம் ஆனதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சுமார் 2 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கோபி:
கோபி அடுத்த முத்துக் காளிமடை பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 48). இவர் கடந்த 5-ந் தேதி தனது தோட்டத்தில் கட்டு அறுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக அவரை கடித்து விட்டது.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோபி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு:
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் சி.என்.ராஜா ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவி வருவதால், அதைத்தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் இந்திய மருத்துவ சங்கத்தில் உள்ள 38 ஆயிரம் டாக்டர்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை தென்பட்டால், உடனடியாக தனியார் அல்லது அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். கொரோனா வைரசை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இல்லை என்றாலும், தொடக்க கட்டத்தில் குணப்படுத்தும் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. ஈரோடு அரசு ஆஸ்பத்திரி உள்பட பல்வேறு இடங்களில் தனி வார்டுகள் தயாராக உள்ளன.
நோய் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும். இருமல், தும்மல் வரும்போது முகத்தை கைக்குட்டையால் மூடி கொள்ள வேண்டும். முககவசம் அணிந்து கொள்வதும் சிறந்தது. அதிக மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கலாம். அசைவ உணவுகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
கொரோனா வைரஸ் பற்றி பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்பி பீதி அடைய வேண்டாம். வைரஸ் பரவுவதை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த நேரமும் உதவி செய்ய அரசும், இந்திய மருத்துவ சங்க டாக்டர்களும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






