search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana Governor"

    • தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை காலை 8.45 மணிக்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றுகிறார்.
    • கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவையொட்டி அனைத்து மாநில தலைநகரங்களிலும் நடைபெறும் விழாக்களில் கவர்னர்கள் தேசிய கொடியேற்றுகின்றனர். தெலுங்கானா மாநில கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி மாநிலத்தின் பொறுப்பு கவர்னராகவும் உள்ளார்.

    இதனால் கவர்னர் தமிழிசை 2 மாநிலங்களிலும் நடைபெறும் விழாக்களில் பங்கேற்று கொடியேற்றுகிறார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை காலை 8.45 மணிக்கு நடைபெறும் குடியரசு தின விழாவில் தேசிய கொடியேற்றுகிறார்.

    விழா முடிந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி வருகிறார். தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று தேசிய கொடியேற்றுகிறார்.

    மதியம் 1 மணி அளவில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். விருந்து நிகழ்ச்சி முடிந்த பின் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ஐதராபாத் செல்கிறார்.

    அங்கு கவர்னர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். கடந்த ஆண்டும் குடியரசு தினவிழாவில் கவர்னர் தமிழிசை 2 மாநிலங்களில் கொடியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.
    • திருக்குடை ஊர்வலம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக புறப்படுகிறது.

    அம்பத்தூர்:

    அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளையும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பிப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சிறப்பு பூஜைகளுடன் 21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகிறது. இந்த திருக்குடை ஊர்வலம் வருகிற 13-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலமாக புறப்படுகிறது. ஊர்வலத்துக்கு மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்குகிறார். திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் வரவேற்கிறார்.

    விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சு.சீனிவாசன் முன்னிலை வகிக்கிறார். திருக்குடை ஊர்வலத்தை அகில பாரத சன்னியாசிகள் சங்க அறங்காவலர் சுவாமி ஈஸ்வரானந்தா ஆசியுரையுடன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகை வேல், எஸ். சீனிவாசன் உட்பட திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    திருக்குடை ஊர்வலமானது என்.எஸ்.சி.போஸ் ரோடு, வால்டாக்ஸ் ரோடு, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ஸ்டாரன்ஸ் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று இரவு அயனாவரத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் சிவசக்தி சத்சங் மண்டபத்தில் தங்குகிறது.

    • கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் மன மற்றும் உடல் நலனை உறுதி செய்ய ‘சுந்தரகாண்டம்’, ராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க தொடங்க வேண்டும்.
    • கர்ப்பிணிகள் யோகாசனம் செய்து வந்தால் வயிற்றில் இருக்கும் கருமட்டும் இல்லாமல் தாய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சங்கத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான கர்பா சன்ஸ்கார் திட்ட தொடக்க விழா டெல்லியில் நடந்தது.

    தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த திட்டத்தை ஆன்லைன் மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    விஞ்ஞான பூர்வமாகவும், ஆன்மீக முறையிலும் கர்ப்பிணிகள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும். இந்த அணுகுமுறை கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது.

    கிராமங்களில் கருவுற்ற பெண்களை ராமாயணம் மகாபாரதம் மற்றும் பல நல்ல கதைகளை படிக்க வேண்டும் என சொல்வார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டுமென்று பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள்.

    கர்ப்ப காலத்தில் சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கும். இது போல் ராமாயணம், மகாபாரதம் படிப்பதால் பிரசவத்தின் போது பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பிறக்கும் குழந்தைகளும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் மன மற்றும் உடல் நலனை உறுதி செய்ய 'சுந்தரகாண்டம்', ராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க தொடங்க வேண்டும்.

    கர்ப்பிணிகள் யோகாசனம் செய்து வந்தால் வயிற்றில் இருக்கும் கருமட்டும் இல்லாமல் தாய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.

    இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினாலே பிரசவ காலம் இனிமையாக இருக்கும். சுகமான பிரசவம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழிசை சவுந்தரராஜன் கவர்னர் மட்டுமின்றி, மகப்பேறு மருத்துவர் மற்றும் கரு சிகிச்சை நிபுணராவார். அவர் கூறிய இந்த அறிவுரை கர்ப்பிணிகளிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர்.
    • புதுச்சேரி மாநில மின் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

    கோவை:

    கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராஜராஜ சோழன் குறித்து டைரக்டர் வெற்றிமாறன் சொன்ன இந்து தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்து கூறியதாவது:-

    தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வளர்ந்தவள் நான், இதில் உள்ள அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாச்சார அடையாளங்கள் மறைக்கப்பட்டால் எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

    ஏற்கனவே பல அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் தான். இந்து அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர். அப்படி இந்து அடையாளங்களை மறைக்க முற்பட்டால் அதுசரியாக இருக்காது.

    புதுச்சேரி மாநில மின் ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. தனியார் மயமாக்கல் என்றதும், மின்துறையை முழுவதுமாக கொடு்த்து விடுவதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

    பல துணைநிலை மாநிலங்களில் மின் துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் மக்களுக்கு வேண்டிய அளவிற்கு மின்கட்டணம் குறைக்கப்படும்.

    இதனால் மின் ஊழியர்கள், அதிகாரிகள் பணி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு சாராருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு எண்ணம் கிடையாது. மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவு தான் இது.

    இது தொடர்பான முடிவுகள், முதல்வருடன் பேசித்தான் எடுக்கப்படுகின்றது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது கூட பொதுமக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக தான். இதை ஊழியர், அதிகாரிகள் புரிந்துகொண்டு இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
    • முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும்.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் ரத்த வங்கியில் 50 முறைக்கு மேல் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு தெலுங்கு திரைப்பட மெகா ஸ்டார் சிரஞ்சீவி இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கி வருகிறார்.

    தெலுங்கானா ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பயனாளர்களுக்கு இலவச ஆயுள் காப்பீடு அட்டை வழங்கினார் இதில் நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார். 


    மேலும் சிரஞ்சீவி அறக்கட்டளை சார்பில் இதுவரை 9,30,000 யூனிட் இரத்தம் மற்றும் 4,580 ஜோடி கண்தானம் செய்ததற்காக அப்போது ஆளுநர் பாராட்டு மற்றும் வாழ்த்துத் தெரிவித்தார்.

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவியை பின்பற்றி மற்ற முன்னணி நடிகர்களும் ஏழை, எளிய கலைஞர்களுக்கும், மக்களுக்கும் உதவ வேண்டுமென தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ராஜ்பவன் கதவுகள் ஏழை, எளிய பெண்களின் குறைகளை சொல்ல வசதியாக திறந்து வைக்கப்படுகிறது.
    • தெலுங்கானா கவர்னர் சாமானிய பெண்களை நேரடியாக சந்திக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு பதிவு செய்ய தனி தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.

    சென்னை:

    கவர்னர் மாளிகை என்பது சாதாரண மக்களின் நிழல் கூட பட முடியாத இடம். உயர் அந்தஸ்தில் உள்ள மேல்தட்டு மக்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமே ராஜ் பவனுக்குள் செல்லும் நிலை உள்ளது.

    வரலாற்றில் முதல் முறையாக தெலுங்கானா ராஜ்பவனின் கதவுகள் ஏழை-எளிய மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி புரட்சியை உருவாக்கி இருப்பது கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். கவர்னராக பொறுப்பேற்றதும் கவர்னர் மாளிகையில் மக்கள் தர்பார் நடத்தப்படும் என்றார்.

    ஆனால் கொரோனா காரணமாக அதை நிறைவேற்ற முடியவில்லை. சமீப காலமாக தெலுங்கானாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து முதலில் பெண்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்தார்.

    ராஜ்பவன் கதவுகள் ஏழை, எளிய பெண்களின் குறைகளை சொல்ல வசதியாக திறந்து வைக்கப்படுகிறது. தெலுங்கானா கவர்னர் சாமானிய பெண்களை நேரடியாக சந்திக்கிறார் என்ற அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டு பதிவு செய்ய தனி தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் வெளியிடப்பட்டது.

    இந்த தகவல் தெரிந்ததும் ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இன்று காலை வரை 400 பெண்கள்தொலைபேசி மூலம் பதிவு செய்திருந்தனர். மின்னஞ்சலிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர்.

    காலை 12 மணி அளவில் பொதுமக்கள் ராஜ்பவனுக்குள் அனுமதிக்கப்பட்டனர். குறைகளோடு வந்தவர்கள் ராஜ்பவனை பிரமிப்புடன் பார்த்தபடி சென்றனர். பெண்கள் ஒவ்வொருவராக நேரில் அழைத்து கவர்னர் டாக்டர் தமிழிசை குறைகளை கேட்டார்.

    பலதுறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். கடனுதவி போன்ற சிறு சிறு பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. சில பிரச்சினைகள் மாநில அரசின் துறைகளுக்கு அனுப்பப்பட்டது. கவர்னரின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆனால் இதுபற்றி கவர்னர் தமிழிசை கூறும்போது, 'இதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி சம்பந்தப்படுத்தி பார்ப்பதும் தவறு. என்னை பொறுத்த வரை அரசில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் எல்லா அலுவலகங்களும் மக்கள் செல்லும் இடமாக இருக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் இடமாக இருக்க வேண்டும்.

    சாதாரண மக்களுக்கு சில இடங்களுக்கு செல்ல தயக்கம் இருக்கலாம். நானும் ஒரு பெண்ணாக இருப்பதால் பெண்கள் தயக்கமில்லாமல் வந்தனர். மாதம் ஒரு முறை இதே போல் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளேன்' என்றார்.

    ×