என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். பொருளாளர் விஜயபாலன், மாநகர செயலாளர் அம்ஜித்கான், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாபர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    ஓ.பி.சி. மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன், மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் சண்முகம், செய்தி தொடர்பாளர் துரை, வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் ரேவந்த், ஒன்றிய செயலாளர்கள் துரை ஆறுமுகம், சரண், தங்கராசு, முரளி, பெரியகாளையன், வெற்றிச்செல்வன் உள்பட பலர் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்து ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வேப்பமரத்தின் உச்சி மரக்கிளையில் இருந்து திடீரென பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, ஈரோடு -முத்தூர் சாலையில் எம்.ஊஞ்சப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது.

    இந்நிலையில் வேப்பமரத்தின் உச்சி மரக்கிளையில் இருந்து திடீரென பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இந்த தகவல் காட்சி தீ போல் பரவியது. சிறிது நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு திரண்டனர்.

    பின்னர் வேப்ப மரத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, மஞ்சள், சிவப்பு, குங்குமம் பூசினர். பின் வாழைப்பழம், ஊதிபத்தி கொழுத்தி தேங்காய் உடைத்து வழிபட்டனர். அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் வேப்ப மரத்தை கும்பிட்டு சென்றனர்.
    ஈரோட்டில் ஓடும் பஸ்சில் பயணியிடம் ரூ. 2003-ஐ திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு உப்புகிணறு சந்து பகுதியை சேர்ந்தவர் முகமது ரியாசுதீன் (வயது 42). இவர் நேற்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். அந்த பஸ் பெரியமாரியம்மன் கோவில் பகுதியில் மெதுவாக சென்றபோது முகமது ரியாசுதீனிடம் இருந்து ஒருவர் ரூ.200-ஐ திருடிவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். 

    சக பயணிகள் அந்த நபரை பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர், ஈரோடு வளையக்காரவீதியை சேர்ந்த மீராமைதீன் (38) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு அருகே பப்ஜி விளையாடிய சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல். சென்னை வண்டலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது ஒரே மகன் அருண் (வயது 14). சென்னை வண்டலூரில் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அருண் எந்நேரமும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். நாளடைவில் அருண் இந்த விளையாட்டுக்கு அடிமையானார். இதனால் மன உளைச்சலில் அருண் இருந்துள்ளார். இதிலிருந்து அருணை மீட்டு வெளியே கொண்டுவர அவரது பெற்றோர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கள்ளிபாளையத்தில் உள்ள நண்பரின் தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்து கோயம்புத்தூர் சூலூரில் உள்ள மனநிலை மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக அருணை சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் அருண் தூக்குப்போட்டு தற்கெலை செய்து கொண்டார். இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பப்ஜி கேம் விளையாட்டால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, மான், புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் ஆசனூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

    வனவிலங்குகள் இந்த சாலையை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இதனால் வனத்துறையினர், ‘திம்பம் வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்ல தடைவிதித்து உள்ளனர்’.

    திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை, புலி நடமாட்டத்தை நேரில் பார்த்த சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு சரக்கு வேன் சென்றது. திம்பம் மலைப்பாதை 25-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது தடுப்புச்சுவரில் ஒரு சிறுத்தை அங்கும், இங்குமாக நடமாடுவதை டிரைவர் பார்த்தார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் இதைப்பார்த்தனர். ஆனால் சரக்கு வேனில் சென்ற டிரைவர் சிறுத்தை ரோட்டோர தடுப்பு சுவரில் அங்குமிங்கும் நடமாடுவதை தனது செல்போனில் படம் பிடித்தார். சிறிது நேரம் கழித்து சிறுத்தை தடுப்புச்சுவரில் இருந்து கீழே குதித்து அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. சிறுத்தை நடமாட்டத்தை நேரில் பார்த்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.
    பணம் வைத்து சூதாடிய 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே கொண்டையம்பாளையத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது 9 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.33 ஆயிரத்து 300 பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் 9 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று ஒரே நாள் மட்டும் ரூ.60 லட்சத்துக்கு பூக்கள் விற்பனை ஆனது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஆயுத பூஜையை யொட்டி பூக்கள் அதிகளவில் விற்பனையானது. இதில் குண்டு மல்லி கிலோ- ரூ.800-க்கும், முல்லை கிலோ- ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ - ரூ.300-க்கும் அரலி - ரூ.170 முதல் 200,கனகாபரம்- ரூ. 800 முதல் ஆயிரம் வரையும், ரோஜா கிலோ ரூ.300 முதல் 500 வரையும் ஜாதி மல்லி கிலோ ரூ.360 க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாள் மட்டும் ரூ.60 லட்சத்துக்கு பூக்கள் விற்று உள்ளன. கடந்த ஆண்டை விட பூக்கள் குறைவாக தான் விற்றுள்ளது.

    இதே போல் ஆயுத பூஜையை யொட்டி வாழைப்பழம், ஆப்பிள், மாதுளம் ,ஆரஞ்சு, கொய்யா என மாவட்டம் முழுவதும் 50 டன் பழங்கள் விற்பனைக்கு வந்தன. இதில் 25 டன்னுக்கு மட்டுமே ஆதாவது ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே பழங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட 40 சதவீம் வியாபாரம் குறைவாக நடந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    விஜயமங்கலம் அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை வாலிபர் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் அடுத்த காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 62). இவருக்கு சுப்பிரமணி, மாரப்பன் என 2 அண்ணன்களும் கருப்பசாமி என்ற தம்பியும் உள்ளனர்.

    இவர்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் கொங்கன்பாளையம் என்ற இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்துள்ளனர்.

    இதில் மாரப்பனின் மகன் தினேஷ் சொத்து பிரிப்பதில் தங்களை சித்தப்பா மூர்த்தி ஏமாற்றி விட்டார் என்று கூறி வந்தார். இது தொடர்பாக மூர்த்திக்கும், தினேசுக்கும் தகராறு இருந்து வந்தது.

    நேற்று இரவு தினேஷ் கொங்கம்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா மூர்த்தியின் தோட்டத்து வீட்டுக்கு சென்று சொத்து பிரிப்பது தொடர்பாக மூர்த்தியிடம் பேசினார். திடீரென மூர்த்தி, தினேசுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி அரிவாளால் தினேஷின் இடது கையில் வெட்டினார். இதையடுத்து தினேஷ் மூர்த்தியை தள்ளி விட்டார். அப்போது அருகில் இருந்த மாட்டு வண்டியின் மீது விழுந்த மூர்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கையில் காயம் அடைந்த தினேஷ் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் சித்தப்பாவை வாலிபர் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சுண்டக்காய் பறிக்க சென்றபோது யானை தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கள்ளிபட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் கிராமம் வேதபாறை மலைவாழ் மக்கள் காலனியை சேர்ந்தவர் ராமன் (வயது 65) கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த சிலருடன் வனப்பகுதிக்குள் சுண்டைக்காய் பறிக்க சென்றார்.

    இதில் ராமன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம்பாளையம் வனப்பகுதியில் அவரை தேடி சென்றனர். அப்போது சன்னகரடு-செங்குட்டை என்ற இடத்தில் தலை நசுங்கிய நிலையில் ராமன் பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    வனச்சரகர் கணேஷ் பாண்டியன், பங்களாபுதூர் போலீசார் மற்றும் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது யானை மிதித்து ராமன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து டோலி (தொட்டில் கட்டி) மூலம் ராமனின் உடலை சம்பவ இடத்தில் இருந்து மீட்டனர். பின்னர் ராமனின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இறந்து ராமனுக்கு மாதம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    சுண்டைக்காய் பறிக்க சென்ற ராமனை ஒற்றை யானை துரத்தி சென்று தாக்கியதற்கான தடயங்கள் மற்றும் யானையின் கால் தடங்கள் இருந்ததால் யானை மிதித்து ராமன் இறந்தது தெரிய வந்தது.

    யானை நடமாட்டம் அப்பகுதியில் அதிகம் உள்ளதால் இதுபோன்ற சூழலில் ஊர் மக்கள் அடர்ந்த வனத்திற்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர் பகுதியில் தொடர்ச்சியாக கள்ளநோட்டு புழக்கம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீ கடைக்கு வந்த ஒரு வாலிபர் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து சென்றார்.

    இதையடுத்து கடைக்காரர் மாற்ற முயன்ற போது தான் அது கள்ளநோட்டு என்று தெரியவந்தது. இது குறித்து போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கள்ளநோட்டு கும்பலை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூரை சேர்ந்த செல்வராஜ் (47)என்ற மாட்டு வியாபாரிக்கும், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன்கள் பிரபு, பாபு ஆகியோருக்கும் அந்தியூர் சந்தைக்கு சென்ற போது பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது செல்வராஜ் மாட்டு வியாபாரத்துக்காக அவர்களிடம் ரூ.10 ஆயிரம் கடனாக கேட்டார். இதையடுத்து அவர்கள் அந்தியூர் அடுத்த மறவன் குட்டை பிரிவு என்ற இடத்துக்கு செல்வராஜை வரவழைத்து அவருக்கு 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.10 ஆயிரம் கொடுத்தனர்.

    அவர்கள் சென்ற பின்னர் செல்வராஜ் பணத்தை எடுத்துப்பார்த்தார். அப்போது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ரவி, வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிரபு, பாபுவை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கொடுத்தது கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. மேலும் இந்த கள்ள நோட்டுகளை கேரளாவை சேர்ந்த கால்நடை வியாபாரி விஜு என்பவர் தான் தங்களுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டில் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்து இருக்கிறார்களா? என்று போலீசார் சோதனை நடத்தினர். மேலும் இவர்கள் அந்தியூர் சந்தை மற்றும் பஸ் நிலையங்கள், கடைகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைதான பாபு, பிரபு கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த வாலிபர் விஜுவையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    அந்தியூர் பகுதியில் தொடர்ச்சியாக கள்ளநோட்டு புழக்கம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 500 ரூபாய் நோட்டுகளை வாங்க அச்சமடைந்து வருகின்றனர்.

    ஈரோட்டில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 44 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
    ஈரோடு:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர், பொறியாளர் அணி மாநில துணைச்செயலாளர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

    பெண்களுக்கு எதிரான மனுதர்ம சனாதன நூலை தடை செய்ய வேண்டும், பா.ஜ.க. தூண்டுதலின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொல்.திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் சித்ரா, தொகுதி செயலாளர் கஸ்தூரி தேவி, நிர்வாகிகள் அரங்க முதல்வன், சண்முகம், மதிவாணன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் ஜாபர் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சித்திக், செயலாளர் சலீம், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், பகுதி செயலாளர் செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனால் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 44 பேரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    கொரோனா வைரசால் இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், போலீசார் ஆகியோரின் பங்கு மிக முக்கியமானது.கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அவ்வாறு தடுப்புமருந்து கண்டுபிடித்தால் அதை முதலில் முன் களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், லேப் டெக்னீசியன், மருந்தக ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆகியோரின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு சுகாதார துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு மாவட்ட சுகாதார துறையினர், மேற்கூறியவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதில், அவர்களின் வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ரேஷன் கார்டு இதுபோன்று ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.
    ×