என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 118 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி தெரிவித்தார்
    ஈரோடு:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 238 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஏராளமானோர் பட்டாசு கடைகளை திறக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளனர்.

    அனுமதி கேட்டு உள்ள இடங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? பட்டாசு கடைகள் தொடங்குவதற்கு உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 118 பட்டாசு கடைகள் அமைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி புளுகாண்டி கூறும்போது, ‘பட்டாசு கடைகள் தொடங்குவதற்கு உரிய நிபந்தனை, விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதுகாப்பான இடம் என்று ஆய்வு செய்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 118 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அனுமதி பெற்று பட்டாசு கடை நடத்துபவர்கள் அதற்கான விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்’ என்றார்.
    ஈரோடு அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் அழகரசன் நகர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

    விசாரணையில் அவர் கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கவின் (வயது 31) என்பதும், அவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கவினை போலீசார் கைது செய்தனர்.

    வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர்கள் ஜாபர் சாதிக், திருச்செல்வம், அயுப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    முன்னதாக இந்திரா காந்தி நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர்களது உருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, துணைத்தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாசலம், பாஸ்கர் ராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் கனகராஜ், வின்சென்ட், சச்சிதானந்தம், சாகுல் அமீது, ஞானசேகரன், பொருளாளர் வெங்கடகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் துரைசாமி, நிர்வாக தலைவர் ரவி, சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு அருகே உள்ள மூலபாளையத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். மேலிட பார்வையாளர் சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள்.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், பொருளாளர் ரவி, நிர்வாகிகள் நடராஜ், ஈங்கூர் ரவி, தளபதி ரமேஷ், ஆரிப் உள்பட பலர் கலந்து கொண்டு, வேளாண் சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியானார்கள். புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயம் கொங்கு மண்டலத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று புதிதாக 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 303 ஆக உயர்ந்தது. அதேசமயம் கொரோனாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 151 பேர் குணமடைந்தார்கள். இதனால் கொரோனா தொற்றில் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 367 பேர் மீண்டு உள்ளார்கள். இதுவரை 812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனாவுக்கு மாவட்டத்தில் மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஈரோடு பாலக்காட்டூர் பகுதியை சேர்ந்த 66 வயது முதியவர் கொரோனா தொற்று காரணமாக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 29-ந் தேதி உயிரிழந்தார். இதேபோல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த 75 வயது முதியவர் 29-ந் தேதியும், ஈரோடு குமரன்நகரை சேர்ந்த 59 வயது நபர் நேற்று முன்தினமும் பரிதாபமாக இறந்தார்கள். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.
    பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் மலிவு விலையில் பெரிய வெங்காய விற்பனையை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
    பவானி:

    பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பெரிய வெங்காயத்தை மலிவு விலையான ரூ.45-க்கு விற்பனை செய்வதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பவானி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பெரிய வெங்காய விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இதில் ஈரோடு வடக்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் செந்தில் குமரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், ஈரோடு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கே.கே.விஸ்வநாதன் மற்றும் சின்னபுலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முதல் கட்டமாக 1 டன் வெங்காயம் சுமார் 4 மணி நேரத்தில் விற்பனையானது. இதைத்தொடர்ந்து அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், ரேஷன் கடைகளிலும் மலிவு விலையில் பெரிய வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    பவானி அருகே உடல் நலம் சரியில்லாமல் இருந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பவானி:

    பவானி அருகே உள்ள சங்கரன்கவுண்டன்பாளையம் அஞ்சுவள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 41). இவருடைய மனைவி மேகலா (38). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் மணி காயம் அடைந்தார். பின்னர் அதில் இருந்து அவருக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் உடல் நலம் சரியாகவில்லை. 

    இதில் மணி மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும் பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவிலுக்காக வளர்த்த தாடியை கேலி செய்ததால் கழுத்தை அறுத்து கொன்றேன் என்று கைது செய்யப்பட்ட அவரது நண்பர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    ஈரோடு:

    திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). இவரும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (38) என்பவரும் நண்பர்கள். 2 பேரும் ஈரோட்டில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். வேலை முடிந்ததும் இவர்கள் 2 பேரும் இரவில் மணிக்கூண்டு பகுதியில் ரோட்டோரம் தங்குவது வழக்கம்.

    மேலும் சில நேரங்களில் இவர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவார்கள். அதைப்போல் சம்பவத்தன்று நள்ளிரவில் 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் பெருமாளின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் பெருமாள் மயக்கம் அடைந்து கீழே விழுந்து சிறிது நேரத்தில் இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெருமாளை கொலை செய்ததாக லட்சுமணனை கைது செய்தனர். போலீசாரிடம் கொலைக்கான காரணம் குறித்து லட்சுமணன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    நானும், பெருமாளும் நண்பர்கள். ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தோம். கடந்த 28-ந்தேதி மணிக்கூண்டு விநாயகர் கோவில் அருகே 2 பேரும் மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது பெருமாள் நான் கோவிலுக்காக வளர்த்திருந்த தாடியை பார்த்து கேலி செய்து என்னை அடித்து சாக்கடையில் தள்ளினார். இதில் ஆத்திரமடைந்த நான் பிளேடால் பெருமாளின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டேன். அதன் பின்னர் தான் அவர் இறந்தது எனக்கு தெரியவந்தது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது. மக்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு மீண்டும் 2-வது முறையாக ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும். இதுவரை பிளஸ்-2 முடித்த 9 ஆயிரத்து 438 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் மக்காச்சோளங்களை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள உலர்களங்களில் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் மக்காச்சோளங்களை சத்தியமங்கலம் பகுதியில் உள்ள உலர்களங்களில் உலர வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவின் மைசூர், சாம்ராஜ் நகர், குண்டல்பேட்டை, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மக்காச்சோளம்  பயிரிடப்படுகிறது.

    தற்போது கர்நாடகாவில் மக்காச்சோள அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால்  அங்கிருந்து விலை கொடுத்து வாங்கப்பட்ட மக்காச்சோளங்களை வெயிலில் இரண்டு நாள் காய வைக்கும் வியாபாரிகள், மக்காசோளத்தில் உள்ள ஈரப்பதத்தின் அளவு 40 சதவீதமாக குறைக்கப்பட்ட பின்னர், பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோழி தீவன ஆலைகள் மற்றும் கோழிப் பண்ணைகளுக்கு விற்பனைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு மக்காச்சோளம் கிலோ 25 ரூபாய் வரை விற்பனையான நிலையில், இந்த ஆண்டு கிலோ 15 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாவதாக மக்காச்சோள வியாபாரிகள் தெரிவித்தனர்.
    பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ.2¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    பவானி:

    பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக தமிழ்ச்செல்வனும், செயலாளராக குணசேகரனும் உள்ளனர். இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன், பயிர்கடன், நகைக்கடன் ஆகியவை வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும் படி ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாருக்கு மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில், இன்ஸ்பெக்டர் ரேகா மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட துணை ஆய்வுக்குழு போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் 2.30 மணி அளவில் ஊராட்சிக்கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து யாரையும் போலீசார் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் வெளியில் இருந்து யாரையும் அலுவலகத்துக்குள் செல்லவும் போலீசார் அனுமதிக்கவில்லை. கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தின் கதவுகளை மூடிவிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 842 மற்றும் சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

    இந்த சோதனை இரவு 9.40 மணி வரை நடைபெற்றது. சோதனை முடிந்ததும் போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த சோதனையால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் லூர்து பெலிக்ஸ் ஸ்டீபன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, மாரிச்சாமி, தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட செயலாளர் சண்முகம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

    அனைத்து நிலை ஆசிரியர்களும் பெற்று வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது 40 ஆக குறைத்து, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள விதித்திருத்தம், அரசாணைகளை அரசு திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மலர்விழி, மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செழியன் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

    சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.பி.க்கள் கணேசமூர்த்தி, சுப்பராயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
    ஈரோடு:

    தூய்மை பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட கூலியை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தூய்மை பணியாளர்கள் பலர் சம்பத்நகர் பகுதியில் நேற்று காலை திரண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் எஸ்.சின்னசாமி தலைமை தாங்கினார். இதில் எம்.பி.க்கள் அ.கணேசமூர்த்தி, சுப்பராயன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில் 66 ஆயிரத்து 130 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.100 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தூய்மை பணியாளர்களின் ஊதியத்தில் மாதத்துக்கு ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கூலி உயர்வு தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை.

    இந்த ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்தக்கோரி பல முறை கோரிக்கை வைத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஈ.பி.ரவி, சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். அதன்பிறகு எம்.பி.க்கள் மற்றும் சிலர் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவனை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ×