என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாநகர் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட வைராபாளையம் பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஒரு சலவை தொழிற்சாலையின் மின் இணைப்பு ஏற்கனவே துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொழிற்சாலை, இரவு நேரத்தில் மாற்று மின் இணைப்பை பயன்படுத்தி இயக்கப்படுவதாக கலெக்டர் சி.கதிரவனுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அவர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ஈரோடு மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த தொழிற்சாலை மாற்று இணைப்பு மூலம் இயங்கியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

    மேலும் ஈரோடு மாநகராட்சி வில்லரசம்பட்டி பனங் காடு கிராமத்தில் இருந்து திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி திடக்கழிவினை இரவு நேரத்தில் லாரி மூலமாக எடுத்துச்சென்று கரூர் மாவட்டம் தென்னிலை கிராமம் அருகில் கொட்டப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதன்பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திடக்கழிவினை சாலையோரத்தில் விதிகளுக்கு புறம்பாக கொட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிரந்தரமாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் இனி வரும் காலங்களில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் எச்சரித்து உள்ளார்.
    ஈரோடு அருகே சீராக குடிநீர் வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஓடைப்பள்ளம் பகுதியில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பெண்கள், கடந்த 10 நாட்களாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை என்று கூறி காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள், ‘தங்கள் பகுதிக்கு வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 10 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து நாங்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தண்ணீர் வராததால் எங்களுடைய அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் நாங்கள் கடந்த 10 நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

    அதற்கு போலீசார், ‘இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி, குடிநீர் குழாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பு சரி செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈங்கூர் ரெயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டு உள்ள அபாய பள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே பெருந்துறை செல்லும் வழியில் உள்ளது ஈங்கூர் ரயில்வே மேம்பாலம். இந்த பாலம் வழியாக பெங்களூரு, சேலம் உள்பட பல பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கும் என தினமும் லாரிகள், சுற்றுலா வாகனங்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    கேரள மாநிலங்களுக்கு செல்லும் லாரிகள் 4 வழிச்சாலை வழியாக சென்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக சென்னிமலை, காங்கேயம், பல்லடம், பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு செல்கிறது. அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகளும் இந்த வழியாக செல்கின்றன.

    இதனால் இரவு, பகலாக இந்த பாலம் வழியாக வாகன போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த மேம்பாலம் அகலமாக இல்லாமல் குறுகிய பாலமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் ஈங்கூர் மேம்பாலத்தின் நடுப்பகுதியில் ஆங்காங்கே பல இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் காணப்படுகின்றன. முன்னால் செல்லும் வாகனங்களை பின் தொடர்ந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது பள்ளங்கள் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைவது வாடிக்கையாக உள்ளது. மேலும் இரவு நேரங்களில் மேம்பாலம் வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைந்து சென்று உள்ளனர்.

    எனவே ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு மேம்பாலத்தில் உள்ள பள்ளங்களை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    குடிபோதையில் நடந்து சென்ற மீன் வியாபாரி கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை:

    அறச்சலூர் அருகே உள்ள பள்ளியூத்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் சேகர் (வயது 43). இவர் வெள்ளோடு அருகே உள்ள கள்ளுக்கடை மேடு பகுதியில் கடை வைத்து மீன் வியாபாரம் செய்து வந்தார். உதவியாக அவருடைய தாய் கிட்டம்மாளும் வேலை செய்து வந்தார். சேகருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சேகரும், அவரது தாய் கிட்டம்மாளும் வழக்கம்போல் கடையில் மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த சேகர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இதற்காக கடையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் சேகரை தேடி கிட்டம்மாள் சென்றார். அப்போது வெள்ளோடு-ஈரோடு ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் மூக்கில் ரத்த காயங்களுடன் ரோட்டோரம் சேகர் கிடந்துள்ளார். உடனே அவரை கிட்டம்மாள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் நின்று கொண்டு கஞ்சா விற்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்தபோது, சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்த காளிதாஸ் (வயது 42) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.
    சென்னிமலையில் கடந்த 2 மாதங்களாக குழாய் உடைந்து காவிரி குடிநீர் வீணாக செல்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காவிரி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆங்காங்கே மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் சென்னிமலையில் தினசரி மார்க்கெட் அருகே காமாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் காவிரி ஆற்று குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடைக்கு செல்கிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘குடிநீர் குழாய் உடைந்து கடந்த 2 மாதங்களாக இரவு, பகலாக தண்ணீர் வீணாக வெளியேறி சாக்கடை கால்வாயில் கலக்கிறது. இந்த தண்ணீர் செல்லும் பாதையில் புற்கள் கூட முளைத்து வளர்ந்து விட்டது.

    குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவது குறித்து நாங்கள் பலமுறை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் அதிகாரி களிடம் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் வீட்டு குடிநீர் இணைப்புக்காக ரூ.150 வரியாக பேரூராட்சிக்கு செலுத்துகிறோம். ஆனால் போதுமான குடிநீர் எங்களுக்கு கிடைக்காத பட்சத்தில் குழாய் உடைந்து இப்படி தண்ணீர் வீணாக செல்வது வேதனையாக உள்ளது,’ என்றனர்.
    கவுந்தப்பாடி அருகே டேங்கர் லாரி மோதிய விபத்தில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள கண்ணாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் கொமராசாமி (வயது 55). கட்டிட தொழிலாளி. அவருடைய மகள் பிரியா (வயது 24). இவர்கள் 2பேரும் நேற்று கவுந்தப்பாடி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக கொமராசாமி, பிரியா மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொமராசாமி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    சத்தியமங்கலத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் 2 தேன் வாழைத்தாரில் ஒரு வாழைத்தார் ரூ. 1000-க்கும், மற்றொரு வாழைத்தார் ரூ. 800-க்கும் ஏலம் போனது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருவது வழக்கம்.

    சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசூர், பெரியூர், உக்கிரம், செண்பகபுதூர், பவானிசாகர், சக்கரசம் பாளையம், கே.என்.பாளையம், அரியப்பம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2,056 வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

    இதில் செண்பகப்புதூரைச் சேர்ந்த விவசாயி சஞ்சீவி என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த ஆளுயர 2 தேன் வாழைத்தார்களை விற்பனைக்குக் கொண்டுவந்தார். இந்த ஆளுயர தேன் வாழைத்தாரில் 18 சீப்புகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட வாழைக்காய்கள் இருந்தன.

    இந்த வாழைத்தாரை ஏலம் எடுக்க வியாபாரிகள் இடையே கடும் போட்டி நிலவியது. விவசாயி சஞ்சீவி கொண்டு வந்த இந்த 2 வாழைத்தாரில் ஒரு வாழைத்தார் ரூ. 1000-க்கும், மற்றொரு வாழைத்தார் ரூ. 800-க்கும் ஏலம் போனது.
    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    ஈரோடு:

    கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் நடப்பு மாதம் 30-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தளர்வுகளால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

    இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் தினமும் சுமார் 100 பேர் கொரோனாவுக்கு புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல், சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்தல் போன்ற நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 393 ஆக உயர்ந்தது. இதில் நேற்று ஒரே நாளில்101 பேர் குணமடைந்தார்கள். இதுவரை மொத்தம் 9 ஆயிரத்து 468 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். தற்போது வரை மொத்தம் 124 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
    கள்ளக்காதலன் மிரட்டியதால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். பிணத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவண்ணா (வயது 30). இவருடைய மனைவி குமாரி (27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    சிவண்ணா வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசித்து வருபவர் தினேஷ். தாளவாடியில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக தினேஷ் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளது.

    எதிரெதிரே வீடு என்பதால் சிவண்ணா மனைவி குமாரியும், தினேசும் சாதாரணமாக பழகி வந்து உள்ளனர். பின்னர் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    இதனால் கடந்த சில வாரங் களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தினேசுடன் குமாரி சென்றார். இதைத்தொடர்ந்து 2 பேரும் தாளவாடியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே முதியனூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குமாரி சென்றார். இதனை அறிந்த சிவண்ணா நேற்றுமுன்தினம் அங்கு சென்று, குழந்தைகள் நலன் கருதி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இதைத்தொடர்ந்து சிவண்ணாவின் வீட்டுக்கு குமாரி சென்றார்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு சிவண்ணா வீட்டிற்கு வந்த தினேஷ், தன்னுடன் குமாரி இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமாரி நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குமாரியின் பிணத்தை தினேஷ் வீட்டின் முன்பு வைத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தினேஷ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் கல்வீசி தாக்கினர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தினேசை விரைவில் கைது செய்துவிடுவோம் என்றனர். இதையடுத்து குமாரியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான தினேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஈரோடு அருகே விஷம் குடித்து தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே.ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன்லால் (வயது 55). மார்பில்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த ஒரு மாதமாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வாழ்க்கையில் விரக்தியுடன் காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி மோகன்லால் வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மோகன்லால் இறந்தார்.

    இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மோகன்லால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம் அருகே கல்லூரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    கோபியை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு கட்டுப்பாட்டு கண்காணிப்பாளராக வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தன்னுடைய மனைவியை கடந்த ஒரு ஆண்டுக்கும் ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் வீட்டில் உள்ள விட்டத்தில் வேஷ்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×