என் மலர்
செய்திகள்
விஜயமங்கலம் அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்து கொன்ற வாலிபர்
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் அடுத்த காட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் மூர்த்தி(வயது 62). இவருக்கு சுப்பிரமணி, மாரப்பன் என 2 அண்ணன்களும் கருப்பசாமி என்ற தம்பியும் உள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம் கொங்கன்பாளையம் என்ற இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்துள்ளனர்.
இதில் மாரப்பனின் மகன் தினேஷ் சொத்து பிரிப்பதில் தங்களை சித்தப்பா மூர்த்தி ஏமாற்றி விட்டார் என்று கூறி வந்தார். இது தொடர்பாக மூர்த்திக்கும், தினேசுக்கும் தகராறு இருந்து வந்தது.
நேற்று இரவு தினேஷ் கொங்கம்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா மூர்த்தியின் தோட்டத்து வீட்டுக்கு சென்று சொத்து பிரிப்பது தொடர்பாக மூர்த்தியிடம் பேசினார். திடீரென மூர்த்தி, தினேசுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த மூர்த்தி அரிவாளால் தினேஷின் இடது கையில் வெட்டினார். இதையடுத்து தினேஷ் மூர்த்தியை தள்ளி விட்டார். அப்போது அருகில் இருந்த மாட்டு வண்டியின் மீது விழுந்த மூர்த்தி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கையில் காயம் அடைந்த தினேஷ் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் சித்தப்பாவை வாலிபர் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.