search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அந்தியூரில் கடனாக வியாபாரிக்கு ரூ.10 ஆயிரம் கள்ள நோட்டு கொடுத்த அண்ணன்-தம்பி கைது

    அந்தியூர் பகுதியில் தொடர்ச்சியாக கள்ளநோட்டு புழக்கம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீ கடைக்கு வந்த ஒரு வாலிபர் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து சென்றார்.

    இதையடுத்து கடைக்காரர் மாற்ற முயன்ற போது தான் அது கள்ளநோட்டு என்று தெரியவந்தது. இது குறித்து போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கள்ளநோட்டு கும்பலை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூரை சேர்ந்த செல்வராஜ் (47)என்ற மாட்டு வியாபாரிக்கும், அந்தியூர் அருகே உள்ள அத்தாணி மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன்கள் பிரபு, பாபு ஆகியோருக்கும் அந்தியூர் சந்தைக்கு சென்ற போது பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது செல்வராஜ் மாட்டு வியாபாரத்துக்காக அவர்களிடம் ரூ.10 ஆயிரம் கடனாக கேட்டார். இதையடுத்து அவர்கள் அந்தியூர் அடுத்த மறவன் குட்டை பிரிவு என்ற இடத்துக்கு செல்வராஜை வரவழைத்து அவருக்கு 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.10 ஆயிரம் கொடுத்தனர்.

    அவர்கள் சென்ற பின்னர் செல்வராஜ் பணத்தை எடுத்துப்பார்த்தார். அப்போது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து அந்தியூர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ரவி, வெள்ளித்திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிரபு, பாபுவை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கொடுத்தது கள்ள நோட்டுகள் என்பது உறுதியானது. மேலும் இந்த கள்ள நோட்டுகளை கேரளாவை சேர்ந்த கால்நடை வியாபாரி விஜு என்பவர் தான் தங்களுக்கு கொடுத்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டில் கள்ள நோட்டுகள் பதுக்கி வைத்து இருக்கிறார்களா? என்று போலீசார் சோதனை நடத்தினர். மேலும் இவர்கள் அந்தியூர் சந்தை மற்றும் பஸ் நிலையங்கள், கடைகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைதான பாபு, பிரபு கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த வாலிபர் விஜுவையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    அந்தியூர் பகுதியில் தொடர்ச்சியாக கள்ளநோட்டு புழக்கம் இருப்பதால் பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். 500 ரூபாய் நோட்டுகளை வாங்க அச்சமடைந்து வருகின்றனர்.

    Next Story
    ×