என் மலர்
ஈரோடு
- வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
- 238 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்த்து பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்காளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இதற்காக 238 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்த்து பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.
வாக்காளர்கள் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதில் வாக்காளர்கள் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர், இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண் வரிசையில் வாக்குச்சாவடியின் பெயர் தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
இந்த வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் வைத்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க இயலாது. இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வந்து வாக்களிக்கலாம் என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் அளித்து அதற்குரிய ஒப்புகையை பெற்றனர்.
இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு இன்று முதல் வருகின்ற 24-ந்தேதி வரை 'பூத் சிலிப்' வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் எனும் கணக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகளுக்கும் 238 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பூத் சிலிப் படிவங்கள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன.
அலுவலர்கள் இன்று காலை 8 மணி முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்து பூத் சிலிப் வழங்குகின்றனர். பூத் சிலிப் பெற முடியாத அல்லது கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று அந்தந்த வாக்கு சாவடிகளிலேயே பூத் சிலிப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
- தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில், ஆஸ்பத்திரி ரோடு மாதேஸ்வரன் கோவில், பெருந்தலையூர் பிரகனநாயகி சமேத மகிழேஸ்வரர் கோவில் மற்றும் பட்டையகாளி பாளையம் தென்காளகஸ்தி கண்ணப்ப நாயனார் கோவில் ஆகிய கோவில் களில் சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் நீள் நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவிலில் தீட்சை பெற்ற சிவனடியார்கள் பவானி திருமுறை கழகம் தியாகராஜா தலைமையில் தாங்கள் கொண்டு வந்திருந்த சிவலிங்க உற்சவர் திருமேனிக்கு பால், பஞ்சாமிர்தம், தேன், திருநீர், சந்தனம், பன்னீர் போன்ற நவ திரவியங்களால் ஐந்து காலமும் அபிஷேக பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து பன்னிரு திருமுறை பாடி சிறப்பு வழிபாடு செய்தார்கள். மேலும் அனைத்து கோவில்களிலும் உள்ள மூலவருக்கு ஐந்து கால அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் கவுந்தப்பாடி, வேலம்பாளையம், அய்யம்பாளையம், பொம்மன்பட்டி, க.புதூர், செந்தாம்பாளையம், சலங்கைபாளையம், பெருந்தலையூர், குட்டிய பாளையம், பி.மேட்டுப் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் கண்விழித்து பூஜையில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ராஜா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் போலீஸ் நிலை யத்தில் ராஜா (40). என்பவர் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உளளனர். இவர் பவானி காவலர் குடி யிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
பவானி காவலர் குடியிருப்பில் குடி இருந்து வரும் ராஜா கடந்த 3 மாத ங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இதையடுத்து கடந்த 3 மாதங்களாக பணி விடுப்பில் அவர் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராஜா பவானி காவலர் குடி இருப்பில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்ட அந்த பகுதியில் உள்ள மற்ற போலீசார் அவரது உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதைதொடர்ந்து இன்று சலூன் கடை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல சலூன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த பகுதிகளில் இயங்கி வரும் ஒரு சில சலூன் கடைகளில் வட மாநில தொழிலாளர்களை வைத்து அவர்கள் மூலம் முடி திருத்தும் பணி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதிதாக உருவாகும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களிலும் வட மாநில தொழிலாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவ தாகவும் அந்த பகுதி சவர தொழிலாளர்கள் புகார் கூறி வருகிறார்கள்.
இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்
இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களை அந்தியூர் பகுதியில் சவர தொழில் செய்ய அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (சவர த்தொழிளார்களின் சங்கம்) சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது.
இதையொட்டி அந்தியூ ர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் கடந்த 4 நாட்களாக கடை யடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 36-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டு அவர்கள் எதிர்ப்பை தெரி வித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் வட மாநில தொழி லாளர்கள் அந்தியூர் பகுதி யில் கடைகளை திறந்து வேலை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி சலூன் கடைகாரர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்தனர்.
இதையடுத்து சவர தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அந்தியூர் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதியில் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தியூர்- அத்தாணி, பர்கூர், பவானி ரோட்டில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாலை பவானி ரோட்டில் இயங்கி வரும் அழகு நிலையம் கடையை திறந்து வைத்திருந்ததை கண்டித்தும் அங்கேயும் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடைகள் அடைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 5-வது நாளாக சலூன் கடை தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடை களும் அடைக்கப்பட்டு இரு ந்தன.
- கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- இதில் பலத்த அடிபட்ட சுப்ரமணியத்தை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள சிலம்பட்டி, களத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 42). தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறை செல்வதற்காக பெத்தாம்பாளையம் ரோடு, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த அடிபட்ட சுப்ரமணியத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்ரமணியம் இறந்து விட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம். எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம்.
- ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தங்கள் பெறப்படும்.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. பூங்கா நடைபயிற்சி மைதானத்தில் இன்று காலை அமைச்சர் மா. சுப்பிரமணியம் யோகா மற்றும் நடைபயிற்சி மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஈரோடு மாநகராட்சி 2008-ல் உருவாக்கப்பட்டாலும் 10 ஆண்டுகளாக மாநகராட்சி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரூ.480 கோடி மதிப்பில் திட்டங்களை கொண்டு வந்து முதல்-அமைச்சர் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
ஈரோடு கிழக்குக்கு முதல்-அமைச்சர் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார். ஈரோடு கிழக்கு உதிக்கும். ஈரோட்டில் மக்களை சந்திக்கும் போது 3 பிரதான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள்.
ஜவுளி துறைக்கு நிரந்தரமான கண்காட்சி அமைக்கப்பட வேண்டும். சாலை வசதி மேம்படுத்த வேண்டும். சாயகழிவு அதனால் ஏற்படும் புற்றுநோய்க்கு தீர்வு காணப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்த பிறகு ஈரோடு நகரின் புற்றுநோய்க்கான நிரந்தர தீர்வு நிதிநிலை அறிக்கையில் கிடைக்கும்.
நீட் தொடர்பான மசோதா குடியரசுத் தலைவர் மேல் நடவடிக்கைக்காக அனுப்பியதை உள்துறை அமைச்சகம் சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும், ஆயுஷ் அமைச்சகத்திற்கும் அனுப்பி உள்ளது. 2 அமைச்சகமும் சிறு விளக்கம் கேட்டு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதற்கும் விளக்கம் அனுப்பி இருக்கின்றோம்.
ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து கடிதம் மீண்டும் வந்துள்ளது. அதற்கு பதில் அனுப்பும் பணி நடந்து வருகிறது. நீட் விலக்கு பெற தொடர்ச்சியாக பணி நடந்து வருகிறது. ஏற்கனவே எடப்பாடி தலைமையிலான அரசு நீர்த்துப்போன சட்டம் 1956-ல் வந்த பழைய சட்டத்தை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
அந்த வழக்கை தொடர்ந்து நடத்தினால் பாதகமான தீர்ப்பு வரும். இந்த நிலையில் தான் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி புதிய வழக்கை நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார்.
இவ்வாறு பல நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். எனவே தமிழகத்திற்கு நிச்சயம் நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும்.
எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக 2015-ல் அறிவிப்பு வெளியானது. 2018-ல் அமைச்சரவை ஒப்புதல் தந்தது. 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 8 ஆண்டு காலம் இதற்கான முயற்சி நடைமுறையில் இருக்கிறது என்றாலும் அதற்கான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை.
மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு நிதி ஆதாரமாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜெய்க்கா நிதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பணிகளுக்கு கடன் பெறுவதற்கான விளக்கங்களையும் வரைபடங்களையும் டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் ஜெயிக்கா நிறுவனத்திடம் விளக்கி இருக்கின்றோம்.
தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொண்டால் மட்டுமே நிதி ஆதாரம் கிடைக்கும். ஒன்றிய அரசு நிதி ஆதாரம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்போதுதான் இதற்கான தனி அலுவலர் ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது. இதை முதலிலேயே செய்திருந்தால் அங்கிருந்து நிதி பெற்று எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டியிருக்கலாம்.
தமிழ்நாட்டிற்கு தேவையான வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு நிதி ஆதாரங்களை பெற்றிருக்கின்றோம். எய்ம்ஸ் நிதி ஆதாரத்தை கேட்டிருக்கின்றோம். ஏப்ரல் மாதத்தில் டெண்டர் முடிந்தவுடன் கட்டுமானத்திற்கான ஒப்பந்தங்கள் பெறப்படும்.
அவை இறுதி செய்யப்பட்டு 2024 இறுதியில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். 2024-ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கினால் 2028 இறுதியில் தான் பணிகள் முடியும். இது தான் உண்மை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
- பிரசாரம் வரும் 25-ந் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24,25-ந் தேதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். கனிமொழி எம்.பி. ஏற்கனவே பிரசாரம் செய்துள்ளார்.
இதைத் தவிர தி.மு.க அமைச்சர்கள் எம்.எல்.ஏக்.கள், தேர்தல் பணி குழுவினர் வீதி,வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இதே போல் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் ஆகியோர் ஆதரவு திரட்டினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்டமாக எடப்பாடி பழனிசாமி வரும் 24, 25 ஆகிய 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். இதே போல் 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வெளிமாவட்ட நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே 3 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். 2-வது கட்டமாக வரும் 21-ந்தேதி முதல் மீண்டும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தே.மு.தி.க. சார்பில் மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜய பிரபாகரன் ஆகியோர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்றும் நாளையும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று மாலை 5 மணிக்கு இடையன்காட்டு வலசு பகுதியில் அண்ணாமலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் பகுதியிலும், இரவு 7 மணிக்கு மகாஜன உயர்நிலைப் பள்ளியிலும், இரவு 8 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் தனது 2-வது நாள் பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர் ஓங்காளியம்மன் கோவில், காந்தி சிலை, மற்றும் வி.வி.சி.ஆர். நகரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணி அளவில் கருங்கல்பாளையம் காந்தி சிலையில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு, சம்பத் நகர், வீரப்பன்சத்திரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதேபோல் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை வீரப்பன்சத்திரம், திருநகர் காலனி, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ். நகர், கிருஷ்ணா தியேட்டர், வி.வி.சி.ஆர் நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பிரசாரம் வரும் 25-ந் தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால் தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஈரோடு தேர்தல் களம் அனல் பறக்கிறது.
- விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது.
- எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்.
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், நான் என மூவரும் ஒரே இடத்தில் உணவு உண்ணும் அளவிற்கு எங்களிடம் நெருக்கம் இருந்தது. அதனால் எனக்கு கிடைத்த தகவலின்படி பிரபாகரன் உயிருடன் இல்லை. அரசியலில் நாகரிகமான விமர்சனம் செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சியோ, ஆளும் கட்சியோ நாகரிகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஆளும் கட்சியாக இருந்தாலும், ஒரு சில குறைபாடு இருக்கத்தான் செய்யும். குறைபாடுகளே இல்லாத ஆளுங்கட்சி என்று எதையும் கூற முடியாது. தமிழகத்தில், திமுக ஆட்சி மிகச் சிறப்பாக உள்ளது பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மிகச் சிறப்பாக பணிபுரிந்து வந்த திருமகன் ஈ.வெ.ரா மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தொகுதி மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமகன் விட்டுச் சென்ற பணிகளை இளங்கோவன் தொடர்வார். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்கூட நிர்வாகிகள் அன்புதென்னரசு உள்பட பலர் ராஜாஜிபுரம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர்.
- பொதுமக்கள், உங்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் எங்களைப் பற்றி சர்ச்சையாக பேசி உள்ளார். எனவே நீங்கள் வாக்கு சேகரிக்க வர வேண்டாம் என்று கூறி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். கடந்த 13-ந்தேதி திருநகர் காலனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசும்போது, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பற்றி பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து நேற்று மாலை நாம் தமிழர் கட்சி மாநில தொழிற்கூட நிர்வாகிகள் அன்புதென்னரசு உள்பட பலர் ராஜாஜிபுரம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உங்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் எங்களைப் பற்றி சர்ச்சையாக பேசி உள்ளார். எனவே நீங்கள் வாக்கு சேகரிக்க வர வேண்டாம் என்று கூறி உள்ளனர்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அன்புதென்னரசு என்பவரது மண்டை உடைந்தது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருநகர் காலனி பஸ் நிறுத்தம் பகுதியில் சீமானை கைது செய்யக்கோரி இன்று சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
- போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணி இணையதளத்தின் தொடங்கி வைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்க ப்பட்டுள்ளது
தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 105 ஏட்டுகள், 51 முதல் நிலை போலீசார் மற்றும் 82 போலீசார் என மொத்தம் 238 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதையொட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில் வாக்குப்பதிவு நாளான வரும் 27-ந் தேதி கிழக்கு தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணி யில் ஈடுபடும் போலீசாருக்கான வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணியினை இணைய தளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த பணியை தொகுதி காவல் பார்வையாளர் சுரேஷ்குமார் சதீவ், மாவட்ட வருவாய் சந்தோஷினி சந்திரா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தின் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் 238 போலீசாருக்கு கிழக்கு சட்டமன்ற தொகுதி களில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு வாக்குச்சாவடி மையம் ஒதுக்கீடு செய்யும் பணியினை இந்தியதேர்தல் ஆணையத்தின் இணை யதளத்தின் மூலம் கணினி சுழற்சி முறையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது கணேஷ், தாசில்தார் (தேர்தல்) சிவகாமி, கணினி நிரலாளர் வெங்கடேஷ் உள்படபலர் கலந்து கொண்டனர்.
- எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
- குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரி முத்தூர் ரோடு அருகே அமைந்துள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல், பூச்சாட்டு, குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சிவகிரி நான்கு ரத வீதி வழியாக வந்து எல்லை மாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து குண்டம் அமைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு அம்மன் சிங்க வாகனத்தில் சிவகிரி நான்கு ரத வீதி வழியாக மேளதாளம், கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெறும்.
இதனையடுத்து நாளை அதிகாலை முதல் மாவிளக்கு பூஜை மற்றும் அக்னி சட்டி, கும்ப ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளைமறுநாள் அம்மன் திருமஞ்சன திருவீதி உலா நடைபெற உள்ளது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- லாரி பின்னால் சென்று திரும்பும் போது மின் கம்பத்தில் திடீரென மோதியது.
- இதில் அங்கிருந்த 2 மின்கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது.
சென்னிமலை:
சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ளது வாய்க்கால் புதூர். இவ்வழியாக சரக்கு லாரி ஒன்று வந்தது. அதில் பஞ்சு பேல்கள் ஏற்றப்பட்டு இருந்தது.
பஞ்சு பேல்களுடன் எடை பார்த்த பிறகு லாரி பின்னால் சென்று திரும்பும் போது அருகில் இருந்த மின் கம்பத்தில் திடீரென மோதியது. இதில் அங்கிருந்த 2 மின்கம்பங்கள் உடைந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இதனையடுத்து உடன டியாக மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. பின்னர் உடைந்த மின் கம்பங்களை மின்வாரிய பணியாளர்கள் வந்து சரி செய்தனர்.
லாரி டிரைவர் லாரியை பின்னால் இயக்கிய பொழுது கவனக்குறைவாக மின் கம்பத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த சென்னிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பஞ்சு பேல்களை ஏற்றிய லாரி சென்னிமலை வழியாக கர்நாடக மாநி லத்திற்கு செல்வதற்காக வந்துள்ளது. போலீசார் பஞ்சு பேல்களுடன் நின்ற லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.






