என் மலர்
திண்டுக்கல்
- மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- முருகப்பெருமானின் 3-ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது.
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும், முருகப்பெருமானின் 3-ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலம் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களிலும் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வார விடுமுறை நாளான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால் தங்கள் குழந்தைகள் இந்த ஆண்டு கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். சிலர் தொழில்களில் சிறந்து விளங்கிட சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இன்னும் சிலர் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்துக் கொண்டு முருகனை தரிசித்து சென்றனர். இதனால் மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை முதலே கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகள் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதே போல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- கோடை விடுமுறையை கொண்டாட பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
- இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். கோடை சீசனில் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆகியவற்றை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தரை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரிப்பதால் வார விடுமுறை நாளான நேற்றும், இன்றும் சுற்றுலாப் பயணிகள் மோயர்சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, படகுக் குழாம் போன்ற பகுதிகளில் அதிகமாக குவிந்தனர்.
தற்போது கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. மேலும் வரும் காலங்களில் இந்த இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வாகன நிறுத்துமிடங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும் எனவும் கோடை விடுமுறை முடிந்த பின்பும் இன்னும் தாங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாகவும், இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- ஆஸ்பத்திரியில் மனைவியை கணவனே வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது40). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கற்பகபிரியா (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணியன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கற்பகபிரியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை தனது மனைவியை பார்க்க வந்த மணியன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். இதனால் கற்பகபிரியா உயிருக்கு பயந்து ஓடினார். இருந்தபோதும் அவரை துரத்தி சென்ற மணியன் கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டினார். இதை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மணியனை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிடித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அரசு ஆஸ்பத்திரியில் மனைவியை கணவனே வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சமீபகாலமாக பச்சைக்கிளி உள்ளிட்ட அபூர்வ வகை பறவைகளை வீட்டில் வளர்க்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பழனி:
பழனி ஆவணிமூலவீதியில் உள்ள ஒரு வீட்டில் அரியவகை பறவைகள் ஏராளமாக வளர்க்கப்படுவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து இன்று வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வீட்டில் இருந்த மாரிமுத்து(52), அவரது மனைவி பார்வதி(45) ஆகியோர் காட்டில் மட்டும் வாழும் பறவைகளை அதிகளவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.30ஆயிரம் அபராதம் விதித்து பழனி வனச்சரகர் குமரேசன் தலைமையிலான அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சமீபகாலமாக பச்சைக்கிளி உள்ளிட்ட அபூர்வ வகை பறவைகளை வீட்டில் வளர்க்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிளிகள், புறாக்கள் உள்ளிட்ட பறவை இனங்களை யாரும் அடைத்து வைத்து வளர்த்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிடிபட்ட கிளிகள் மற்றும் பறவைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்தும், இதனை யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர்.
- சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராகுல் (வயது 24). இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளியல் படித்து வந்தார். சின்னாளப்பட்டியில் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்த காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராகுல் தனது அறையிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர் வெளியே சென்ற நிலையில் 2 பெண் குழந்தைகளிடமும் ராம்ராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
- கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பேத்துப்பாறை அஞ்சுரான் மந்தையைச் சேர்ந்தவர் ராம்ராஜ் (வயது 53). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்தவர் தனது மனைவி மற்றும் இரட்டை பெண் குழந்தைகளுடன் கொடைக்கானல் வந்தார்.
அதே பகுதியில் தங்கியதால் அவர்களுடன் ராமராஜ் சகஜமாக பேசியுள்ளார். பெற்றோர் வெளியே சென்ற நிலையில் 2 பெண் குழந்தைகளிடமும் ராம்ராஜ் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகள் தனது தாயிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொடைக்கானல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால் ராம்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த 1 வாரமாக திருவிழாவின் போது மைக் செட் சத்தம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், உடனே நிறுத்தக்கோரியும் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக எந்த புகார் அளிப்பது என தெரியாமல் பாலியல் புகார் அளித்துள்ளதாக ராம்ராஜின் உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்தனர்.
கொடைக்கானலில் நீண்ட காலமாக வெளிநாட்டவர்கள் தங்கியுள்ளனர். அவர்களிடம் முறையான விசா உள்ளதா? என விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விழாவில் ஊர் கவுடர்மண்டகப்படி, நாட்டாண்மைகாரர்கள் மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஜி.நடுப்பட்டியில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கான திருவிழா சாமி சாட்டுதலுடன் தொடங்கியது.
விழாவில் ஊர் கவுடர்மண்டகப்படி, நாட்டாண்மைகாரர்கள் மண்டகப்படி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு பகுதி மக்களின் சார்பாக பட்டாசு வெடித்து மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊரைக்காக்கும் மந்தை முனியப்பன் கோவிலுக்கு கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்பதற்காக அவர்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டனர். அதன் பின்னர் ஊர் மந்தையில் முனியப்ப சாமிக்கு கிடாய்வெட்டி சமையல் செய்து படையல் போடப்பட்டது. அதன் பின்னர் கிராமத்தின் 4 பகுதிகளிலும் கோவில் பூசாரியான சந்திரன் என்பவர் கறிச்சோற்றை கலந்து அருள்வந்து ஆடி வானத்தை நோக்கி வீசினார்.
அவ்வாறு வீசப்படும் கறி சோறை முனியப்ப சாமி பிடித்துக்கொள்வார் என்பதும், ஒரு பருக்கை கூட கீழே விழாது என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் பின்னர் ஆண்கள் அனைவரும் சாமிக்கு படையல் இடப்பட்ட அசைவ உணவை சாப்பிட்டனர். இரவு 9 மணிக்கு தொடங்கி இந்த திருவிழா அதிகாலை 3 மணிக்கு நிறைவுபெற்றது. இந்த வினோத திருவிழாவை காண சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.
- மணிமாலா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு முறையீடு செய்திருந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தியதில் ரமேஷ் தூண்டுதலின் பேரில்தான் மணிமாலாவை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் தேவாரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மனைவி மணிமாலா (35). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மணிமாலா தனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கேட்டு முறையீடு செய்திருந்தார். இதற்காக மணிமாலா கோர்ட்டில் ஆஜராகிவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வேகமாக வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில் மணிமாலா பலத்த காயமடைந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மணிமாலாவை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த பாண்டித்துரை (22) என்பவரை பிடித்து போடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ரமேஷ் தூண்டுதலின் பேரில்தான் மணிமாலாவை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்
இதனையடுத்து போலீசார் பாண்டித்துரை மற்றும் ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர். போடி நீதிமன்றம் அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
- மலை கிராமங்களிலும் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் அதன் தாக்கமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானலிலும் விட்டுவிட்டு சாரல்மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது பெய்துவரும் மழை பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று காலை முதலே சாரல்மழை பெய்து வந்த நிலையில் மாலையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் காணப்பட்ட வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒருசில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. கல்லுக்குழி குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் சாலையில் மரம் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதேபோல மலை கிராமங்களிலும் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது. பலத்த காற்று வீசியதால் ஏரியில் படகு சவாரி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதியிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது.
கீழ்மலை பகுதியான தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல்மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது பெய்துவரும் மழை காய்கறி பயிர்களுக்கும், மலைத்தோட்ட பயிர்களுக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஒட்டன்சத்திரம் பகுதியிலும் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக சாரல்மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
- தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.
- தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.
திண்டுக்கல்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.
திண்டுக்கல் சீலப்பாடி அருகே ரூ.18.70 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப பள்ளி கட்டிடத்தை இன்று முன்னாள் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னையில் மத்திய மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, தொண்டர்களை உற்சாகமாக கட்சிப்பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும் என பேசி உள்ளார்.
ஆனால் அ.தி.மு.க.வை பொறுத்தவரை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
அந்த கூட்டணிக்கு இந்தியாவில் பா.ஜ.க. தலைமை வகிக்கிறது. ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி. இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதுவரை எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
- கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் நகர் பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கினர்.
மேலும் பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் நகர் பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
இன்றுடன் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.
இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். கொரோனா ஊரடங்கால் சிறு குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு கோடை விழாவின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- வினோத்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
- பலத்த காயமடைந்த வினோத்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் சீலப்பாடி அருகில் உள்ள மேற்கு குழிப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் மகன் வினோத்குமார்(27). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், இவரது சகோதரி ரம்யாவிற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலையில் வினோத்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரம்யாவின் கணவர் பொன்ராஜ்(40) சென்ரிங் கட்ட பயன்படுத்தும் இரும்பு கம்பியால் வினோத்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வினோத்குமார் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பொன்ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்பு கம்பியால் குத்தி கொல்ல முயன்ற பொன்ராஜ் கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






