என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த கற்பகபிரியா மற்றும் கைது செய்யப்பட்ட கணவர் மணியன்
பழனி அரசு ஆஸ்பத்திரியில் மனைவியை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற கணவர்
- கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- ஆஸ்பத்திரியில் மனைவியை கணவனே வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி வி.கே.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் மணியன் (வயது40). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கற்பகபிரியா (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணியன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் கற்பகபிரியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை தனது மனைவியை பார்க்க வந்த மணியன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். இதனால் கற்பகபிரியா உயிருக்கு பயந்து ஓடினார். இருந்தபோதும் அவரை துரத்தி சென்ற மணியன் கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டினார். இதை பார்த்ததும் ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் மணியனை ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிடித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி அரசு ஆஸ்பத்திரியில் மனைவியை கணவனே வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






