என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பண்ருட்டியில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். #PMK #AnbumaniRamadoss
    பண்ருட்டி:

    இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொள்ளுக்காரன் குட்டை பகுதியில் உள்ள தேசிங்கு நினைவு இடத்தில் வன்னியர் சங்கம் சார்பில் இன்று நடந்தது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகி தேசிங்கு குடும்பத்துக்கு அன்புமணி ராமதாஸ் நிவாரண உதவி வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்தட்டுப்பாடு உள்ளது. இதற்கு காரணம் ஊழல்தான். அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையங்களை ஆட்சியாளர்கள் செயலிழக்க செய்து விட்டனர்.

    தற்போது தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கமி‌ஷனுக்காகவும், ஊழலுக்காகவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளை உடனடியாக பதவியில் இருந்து விலக்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு கட்சியில் பதவி உயர்வு கொடுத்தது கண்டிக்கத்தக்கது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் பயப்படுகிறார். ஏனென்றால் அவர் மீது நடவடிக்கை எடுத்தால் முதல்-அமைச்சர் செய்யும் ஊழல் வெளிபடும் என பயப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #AnbumaniRamadoss
    மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வேப்பூர்:

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேல்முருகன் (வயது 35), மணி (30). இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    தற்போது அவர்கள் 2 பேரும் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே என்.நாரையூருக்கு செல்ல வேல்முருகனும், மணியும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் இன்று காலை 6 மணிக்கு வேப்பூர் கூட்ரோடு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருநதனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த தடுப்பு கட்டை மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வேல்முருகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணி படுகாயம் அடைந்தார்.

    தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த மணியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணமக்களுக்கு மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். #FuelPriceHike #WeddingBride
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழபருத்திக்குடியை சேர்ந்த இளஞ்செழியனுக்கும், நாகை மாவட்டம் செம்மியவழுரை சேர்ந்த கனிமொழிக்கும் குமராட்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர்.



    அப்போது மணமகனின் நண்பர்கள் சிலர் மணமக்களிடம் பிளாஸ்டிக் கேனில் 5 லிட்டர் பெட்ரோலை திருமண பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்தனர். இதை மணமக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர்.

    பொதுவாக திருமண விழாவில், மணமக்களுக்கு பரிசு பொருட்கள், மொய் பணம் ஆகியவற்றை தான் வழங்குவார்கள். ஆனால் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை நெருங்கி வருவதால் பெட்ரோலை பரிசாக அளித்த சம்பவம் மணவிழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த நிமிடம் முதல் நெட்டிசன்கள் ‘மீம்ஸ்’களை பறக்க விட்டனர். இதனால் டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்-அப் என்று எங்கும் இந்த மணமக்களின் ‘மீம்ஸ்’கள் தான் நிரம்பி வழிந்தன. #FuelPriceHike #WeddingBride 
    கடலூர் மத்திய சிறையில் இன்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீ சார் திடீர் கோதனை மேற்கொண்டனர். #cuddalorecentraljail

    கடலூர்:

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது கைதிகள் செல்போன், டி.வி., எப்.எம். ரேடியோ பயன் படுத்தியதும், மெத்தை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் இன்று காலை துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீ சார் திடீர் கோதனை மேற் கொண்டனர்.

    சிறைசாலையில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.

    செல்போன், சிம்கார்டு மற்றும் கஞ்சா பொட்டலங்களை மற்றும் ஆயுதங்களை பதுக்கி கைதிகள் வைத்துள்ளனரா? என தீவிர சோதனை மேற் கொண்டனர்.

    தொடர்ந்து சிறை சாலையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ் நிலை நிலவி வருகிறது.  #cuddalorecentraljail

    காட்டுமன்னார்கோவிலில் நேற்று சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் பலத்த சூறைகாற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்று வீசியதால் காட்டு மன்னார் கோவில் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து நுழைவு வாயிலில் உள்ள கதவின் மீது விழுந்தது. திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளேரி என்ற இடத்தில் புளிய மரமும், காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலை ஓரம் இருந்த வேப்ப மரமும் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன.

    இதேபோல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். இதன்பிறகு போக்குவரத்து சீரானது. பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ஒருசில கிராமங்களில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

    இதேபோல் பெண்ணாடம், திட்டக்குடி, ஆவினங்குடி, தொழுதூர், ராமநத்தம், ஆவட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நின்றது. மேலும் பெண்ணாடம் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் பெண்ணாடம் பகுதிகளில் உள்ள கடைவீதிகள் மற்றும் தெருக்களில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வடிகால் வாய்க்கால்களை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வி‌ஷ வண்டுகள் கடித்ததில் 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    விருத்தாசலம்:

    காட்டுமன்னார்கோவில் அடுத்த ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒருவரது இல்ல காதணி விழா விருத்தாசலம் அருகே கம்மாபுரம் சி.கீரனூரில் உள்ள பச்சையம்மன் கோவிலில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டவர்களுக்கு விருந்து வழங்கும் வகையில் அந்த பகுதியில் உள்ள மரத்தடியில் வைத்து சமையல் செய்தனர். அப்போது அங்கிருந்து வந்த புகையால், மரத்தில் இருந்த வி‌ஷவண்டுகள் கலைந்து, அங்கிருந்தவர்களை கடித்தன.

    இதில் பிச்சமுத்து, பாக்கியராஜ், ராஜேசேகர், ராமலிங்கம், பழனியம்மாள், சங்கீதா, சேகர், ரேகா, பச்சமுத்து, உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    வடலூர்:

    கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது38). தொழிலாளி.

    இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த காதர் மொய்தீனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் காதர் மொய்தீன் அவரது நண்பர் ராம்குமார் (29) என்பவரை அழைத்து கொண்டு வடலூருக்கு சென்றார்.

    அப்போது அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த மணிகண்டனை வழிமறித்து காதர் மொய்தீனும்,ராம்குமாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிகண்டனின் வயிற்றில் குத்தினார்.

    இதில் மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பலத்த காயம் அடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்து வடலூர் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். புகாரின் பேரில் காதர் மொய்தீன், ராம்குமார் ஆகிய 2 பேர் மீதும் போலீசார்வழக்குபதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.காதர் மொய்தீனை வலை வீசி தேடி வருகின்றனர். #tamilnews
    பெண்ணாடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தால் 50 கோழி, 2 ஆடுகள் உடல் கருகி பலியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் திருப்பூரில் தங்கியிருந்து அங்கு கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 55). இவர் பெண்ணாடத்தில் உள்ள தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் 50 கோழிகள் மற்றும் 10 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று இரவு பெண்ணாடத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவிந்தம்மாள் வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த கோழிகள், ஆடுகளை கூரை வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டினார். பின்னர் வீட்டை பூட்டி விட்டு அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று தூங்கினார். நள்ளிரவில் திடீரென கோவிந்தம்மாளின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டுக்குள் கட்டியிருந்த ஆடுகள் மற்றும் கோழிகள் தீயில் சிக்கின. அதன் அலறல் சத்தம் கேட்டு கோவிந்தம்மாள் உறவினர் வீட்டில் இருந்து எழுந்து அங்கு வந்து பார்த்தார்.

    தனது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் தீயில் கருகி 50 கோழிகள், 2 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

    மேலும் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் தங்க நகைகள், பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரங்கள் அனைத்தும் எரிந்து தீக்கிரையாகின. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கோவிந்தம்மாளின் வீட்டுக்கு மின்சார வசதி கிடையாது. இதனால் மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

    இதையடுத்து முன்விரோதம் காரணமாக மர்ம மனிதர்கள் யாராவது கோவிந்தம்மாள் வீட்டுக்கு தீ வைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    சிதம்பரத்தில் வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் குமராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
    வீடுகளை இழந்தனர். பயிர்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காததை கண்டித்தும், காவிரியில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் இன்று காலை சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், அந்த பகுதி விவசாயிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். #tamilnews
    பண்ருட்டி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்தமோதல் தொடர்பாக வி.ஆண்டிக்குப்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அரவிந்த்(வயது 19). இவரது நண்பர் அஜித்குமார்(18). இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார்சைக்கிளில் பண்ருட்டி சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    வரும் வழியில் ஒட்டுக்காட்டுஅம்மன் கோவில் அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த விஜயன் (42), அருண்குமார்(21) ஆகியோர் ஏன்? மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறீர்கள் என்று அவர்களை தட்டிக்கேட்டனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயன், அருண்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்த், அஜித்குமார் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து அவர்கள் சொந்த ஊருக்கு சென்று தங்களது ஆதரவாளர்களிடம் கூறினர். இதைத் தொடர்ந்து அரவிந்துக்கு ஆதரவாக கருணாகரன்(25), சங்கர்(45) ஆகியோர் வந்தனர். பின்பு அரவிந்த் ஆதரவாளர்களுக்கும், விஜயன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இருதரப்பினரும் அடி-தடியில் ஈடுபட்டனர். சரமாரியாக கற்களை வீசிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அரவிந்த், அஜித்குமார், விஜயன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக பண்ருட்டி போலீசில் அரவிந்த் தரப்பிலும், விஜயன் தரப்பிலும் புகார் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், தாசில்தார் ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த விஜயன், அருண்குமார், கருணாகரன், சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்தமோதல் தொடர்பாக வி.ஆண்டிக்குப்பத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    கடலூரில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழாவை அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள்ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். #ramasamiPadayatchiyar #ADMK #EdappadiPalaniswami

    கடலூர்:

    சுதந்திர போராட்ட வீரரும், சமூகநீதிக்காக பாடுபட்டவருமான ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் ரூ.2.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

    அதே நேரத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், கடலூர் மாவட்ட அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம் (பண்ருட்டி), முருகுமாறன் எம்.எல்.ஏ.(காட்டுமன்னார் கோவில்) , பாண்டியன் எம்.எல்.ஏ.(சிதம்பரம்) மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழித்தேவன், சந்திரகாசி ஆகியோருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

    அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அமைச்சர் எம்.சி.சம்பத் தங்களை மதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

     


    இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் மைதானத்தில் ராமசாமி படையாட்சியார் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டதால் அ.தி.மு.க.எம்.எல்.ஏ.க்கள் சத்யா பன்னீர்செல்வம், பாண்டியன், முருகுமாறன், மற்றும் எம்.பி.க்கள் அருண்மொழிதேவன், சந்திரகாசமி ஆகியோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #ramasamiPadayatchiyar #ADMK #EdappadiPalaniswami

    விருத்தாசலம் அருகே லாரிகள் எதிர்பாராதவிதமாக திடீரென்று நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.
    விருத்தாசலம்:

    நாமக்கல் மாவட்டத் தில் இருந்து பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி நோக்கி புறப்பட்டது. அந்த லாரியை குறிஞ்சிப்பாடியை சேர்ந்த டிரைவர் பழனிவேல்(வயது 40) ஓட்டிவந்தார். அந்த லாரியில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த பாபு(22), பிருத்திவிராஜ்(22), சரத்(20) ஆகியோரும் வந்தனர்.

    அந்த லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அரசக்குழி பகுதியில் வந்து கொண்டிருந்தது. இதே நேரத்தில் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி ஒன்று அதே பகுதியில் வந்தது. அந்த லாரியை அரியலூர் மாவட்டம் கீழபழுர் பகுதியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம்(49) ஓட்டிவந்தார்.

    இந்த 2 லாரிகளும் எதிர்பாராதவிதமாக திடீரென்று நேருக்கு நேர் மோதி சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் மகாலிங்கம், பழனிவேல் மற்றும் பாபு ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    பிருத்திவிராஜ், சரத் ஆகிய 2 பேரும் லாரியின் இடிபாட்டிற்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மேலும் பிராய்லர் கோழி ஏற்றி வந்த லாரியில் இருந்த 50 கோழிகளும் விபத்தில் சிக்கி இறந்தன. இந்த விபத்தினால் அந்த பகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் விபத்தில் சிக்கிய லாரிகளை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் போக்குரத்து சீராகியது.


    ×