என் மலர்
கடலூர்
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 65). இவர் அந்த பகுதி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து அங்கு ஒரு கோவில் கட்டி வருகிறார்.
இந்த நிலையில் கோவில் கட்டுவதற்காக வசூலித்த பணத்தின் கணக்கு- வழக்குகளை அந்த பகுதி பொதுமக்கள் கேட்டனர். இதனால் மனம் விரக்தி அடைந்த ரத்தினசாமி நேற்று இரவு அவர் கட்டி வரும் கோவிலின் உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று அதிகாலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்தினசாமி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய ரத்தினசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளிடக்கரையோர கிராமமான குஞ்சமேட்டில் அரசு மாட்டு வண்டி மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்ததால், மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து, நேற்று முன்தினம் தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குவாரிக்கு சென்றனர்.
இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மணல் அள்ள வந்த மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், இந்த மணல் குவாரியால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மணல் குவாரியை மூடவேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குவாரியில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
சிறுபாக்கம் அருகே உள்ளது பொயனப்பாடி கிராமம். இங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த ஆண்டவர் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், பெரம்பலூர், சென்னை, திருச்செங்கோடு, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் இக்கோவிலுக்கு அடிக்கடி வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.
அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாக கோவிலின் மேற்கூரைகள், சுவர்கள், தரைதளத்தில் விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட் பெயர்ந்து விழுந்தும் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால் கோவிலை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவில் வளாகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கோவிலை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரத்தில் மழை பெய்தது. இந்த மழை 6.20 மணி வரை நீடித்தது. அதன்பிறகு இரவு 12 மணி அளவில் இடி-மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, குணமங்கலம், வெளியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அடித்த சூறாவளி காற்றால் மயிலம், ரெட்டணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் பல மரங்கள் மேலே சென்ற மின்வயர்கள் மீது விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வயர்கள் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்ததால் இரவு முழுவதும் மின்சாரம் வரவில்லை. விடிய விடிய மின்தடை நீடித்தது. இன்று காலை 10 மணி வரை மின்சாரம் வரவில்லை. இரவில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் முதியவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
திருவெண்ணைநல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தன. தற்போது பெய்த இந்த மழையால் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எலவ னாசூர் கோட்டை, மடப்பட்டு, களமருதூர், காட்டு நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இடை விடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் கடலூரிலும் நேற்று மாலை 6 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலையோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணியில் இருந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணி வரை இந்த மழை நீடித்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
வீராணம் ஏரி மற்று அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமாலை லேசான மழை பெய்தது. இன்று காலை ஏரியின் நீர் மட்டம் 46.80 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 256 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் சென்னை குடி நீருக்காக 74 கனஅடி தண்ணீர் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது.
நெய்வேலி அருகே உள்ள மேல்பாசனப்பட்டு கிராமம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி அம்சா (வயது 29).
இவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று மாலை மந்தாரகுப்பத்தில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்றார். கடையின் அருகே புதுஇளவரசன்பட்டை சேர்ந்த துரை என்ற அன்பரசன் (28) மற்றும் பெரியாக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன் (27) ஆகிய 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென அம்சாவை கேலி-கிண்டல் செய்தனர்.
இது குறித்து மந்தாரகுப்பம் போலீசில் அம்சா புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமலஹாசன் வழக்குப்பதிவு செய்து துரை மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேரை கைது செய்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தன்குடியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மகன் தமிழ்வேந்தன் (வயது 26).
இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இடையில் அவர் கல்லூரிக்கு வராததால் கல்லூரியில் இருந்து நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் இன்று மதியம் அவர் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மைய கட்டிடத்துக்கு சென்றார். அங்கு 4-வது மாடிக்கு ஏறினார். அங்கிருந்து திடீரென்று கீழே குதித்தார்.
இதில் அவரது தலை மற்றும் மூக்கில் அடிபட்டது. பலத்த காயம் அடைந்த அவரை அங்குள்ளவர்கள் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்வேந்தன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அண்ணாமலை நகர் போலீசில் புகர் செய்யப்பட்டது. தமிழ்வேந்தன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் கபியோல் மாசிலாமணி (வயது 62). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று மாலை தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே புறப்பட்டார். சாவியை வழக்கமாக வைக்கும் இடமான கதவு மேல் வைத்து விட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கதவு மேல் இருந்த சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
வெளியே சென்ற கபியோல் மாசிலாமணி இரவு வீட்டுக்கு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டதை கண்டு திடுக்கிட்டார். பின்பக்க வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து பெண்ணாடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். இதுப்பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உள்ளது. இங்கு 4 அனல் மின்நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மின்உற்பத்தி திறன் 2,990 மெகா வாட் ஆகும்.
இதில் முதல் அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 600 மெகா வாட் ஆகவும், 1-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் மின்உற்பத்தி திறன் 420 மெகாவாட் ஆகும். 2-வது அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி திறன் 1,470 ஆகவும், 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கத்தின் உற்பத்தி திறன் 500 மெகாவாட்டாகவும் உள்ளது.
தற்போது 2-வது அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அங்கு மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மற்ற 3 அனல் மின்நிலையங்களில் 1 யூனிட்டில் மட்டும் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் அந்த யூனிட்டில் மட்டும் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற யூனிட்டுகளில் தொடர்ந்து மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி முதலாவது அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி 411 மெகா வாட்டாக உள்ளது. முதலாவது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் 210 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2-வது அனல் மின்நிலையத்தில் 1,368 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. வழக்கமாக என்.எல்.சி.யில் உள்ள அனல் மின் நிலையங்களில் 2,990 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். ஆனால் தற்போது இந்த 3 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து மின் உற்பத்தி 1,989 மெகா வாட்டாக குறைந்துள்ளது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் முதல் அனல் மின்நிலையம், முதல் அனல் மின்நிலைய விரி வாக்கம், 2-வது அனல் மின் நிலையம், மற்றும் 2-வது அனல் மின் நிலைய விரிவாக்கம் என 4 அனல் மின் நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த 4 அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து 2990 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. தற்போது இவற்றில் இருந்து 1480 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 1510 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.
இது தவிர 2 யூனிட்டுகள் கொண்ட சூரிய மின்சக்தி திட்டங்களும் செயல்படு கின்றன. இவை தலா 10 மெகாவாட் மற்றும் 130 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இவற்றில் இருந்து தற்போது 4.3 மெகாவாட் மற்றும் 46.6 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
பொதுவாக மழை காலங்களில் நிலக்கரிகளில் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும். தற்போது மழை அடிக்கடி பெய்து வருவதால் இந்த நிலக்கரிகளில் ஈரப்பதம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் என்.எல்.சி. அனல் மின் நிலையத்துக்கு கூடுதல் நிலக்கரி அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சாதாரண நாட்களைவிட மழை காலங்களில் மின் உற்பத்தி சற்று குறை வாகவே இருக்கும். மேலும் 2-வது அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் தற்போது மின் உற்பத்திக்கான பரா மரிப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. இதனால் தற்சமயம் இந்த 2-வது அனல் மின்நிலையம் விரிவாக்கத்தில் இருந்து மின் உற்பத்தி தொடங்கவில்லை. இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதன்பிறகு மின் உற்பத்தி தொடங்கும்.
சூரிய மின்சக்தி திட்டத் தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் மின் உற்பத்தி சற்று குறைவாக இருக்கும். ஏனென்றால் இந்த மாதங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதே காரணமாகும். மேலும் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை உள்ள மாதங்களில் வெயில் அதிகமாக இருப்பதால் இந்த சூரிய மின்சக்தி திட்டத்தில் மின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
இந்த காரணங்களால் தான் நெய்வேலி என்.எல்.சி. அனல்மின்நிலையத்தில் தற்சமயம் வழக்கதைவிட சற்று குறைவாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது குறித்து என்.எல்.சி. அதிகாரிகள் கூறும்போது, நிலக்கரிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நிலக்கரியின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதிகளான முதல் சுரங்கம், 2-வது சுரங்கம் மற்றும் சுரங்கம் 1 ஏ ஆகியவற்றில் இருந்து கன்வயர் பெல்ட் மூலம் அனல்மின் நிலையத்துக்கு கூடுதல் நிலக்கரி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் நிலைமை சீராகி அதிக அளவு மின் உற்பத்தி செய்யப்படும் என்றனர். #neyvelinlc
கடலூர்:
கடலூர் திருவந்திபுரத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 36), கட்டிட தொழிலாளி. பில்லாளி தொட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (45), எலக்ட்ரிசியன். இவர்கள் 2 பேரும் இன்று திருவந்திபுரத்தில் இருந்து புதுவைக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
புதுவையில் உள்ள மதுக்கடையில் 2 பேரும் மது வாங்கி குடித்தனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் புதுவையில் இருந்து திருவந்திபுரத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பத்தை அடுத்த மருதாடு பகுதியில் உள்ள சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர்.
அந்த சோதனை சாவடியின் குறுக்கே தடுப்பு கட்டை வைக்கப்பட்டிருந்தது. இதை கண்டித்து கிருஷ்ணனும், தயாளனும் சத்தம்போட்டபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் காரர் செல்வம் மோட்டார் சைக்கிளில் சென்ற தயாளனை தாக்கினார். இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் மற்றும் அந்த பகுதி பொதுமக்களும் போலீஸ்காரர் செல்வத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் காயமடைந்த தயாளனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்த தயாளனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுவிலக்கு சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் செல்வம் குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் தன்னை தாக்கியதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து கடலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு லாமேக், பண்ருட்டி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






