என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை
    X

    பெண்ணாடம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகை கொள்ளை

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் கபியோல் மாசிலாமணி (வயது 62). கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று மாலை தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே புறப்பட்டார். சாவியை வழக்கமாக வைக்கும் இடமான கதவு மேல் வைத்து விட்டு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கதவு மேல் இருந்த சாவியை எடுத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    வெளியே சென்ற கபியோல் மாசிலாமணி இரவு வீட்டுக்கு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டதை கண்டு திடுக்கிட்டார். பின்பக்க வழியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து பெண்ணாடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். இதுப்பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×