என் மலர்tooltip icon

    கடலூர்

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி:

    கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம்கோர்ட்டு கூறியது. ஆனால் பெண்களை அனுமதிப்பது அய்யப்பன் கோவிலின் ஆச்சாரவிதிகளை மீறுவதாகும் என்று இந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    கடலூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பண்ருட்டி 4 வழி சாலை சந்திப்பில் இன்று மதியம் இந்து மக்கள் கட்சியினர் திடீரென்று சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ராஜ் மற்றும் போலீசார் விரைந்துசென்று மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர்.

    பண்ருட்டி அருகே மினி லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பூங்குணம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 70). இவர் இன்று காலை பூங்குணம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு வந்தார். அங்குள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு வீட்டுக்கு கனகராஜ் சென்றார்.

    அப்போது அந்த வழியாக பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கனகராஜ் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உல்லாசத்துக்கு வரமறுத்த பெண்ணை சர மாரியாக தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொள்ளிருப்பு காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சுமித்ரா (வயது 19). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ் பாபு (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

    இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இவர்கள் 2 பேரும் தனிமையில் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் சுரேஷ் பாபு நேற்று மதியம் சுமித்ராவிடம் எங்களது வீட்டில் யாரும் இல்லை நீ எனது வீட்டுக்குவா நாம் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்தார். ஆனால் சுமித் ரா வர மறுத்துவிட்டார்.

    இதனால் சுரேஷ்பாபு ஆத்திரமடைந்து சுமித்ரா வின் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் தனியாக இருந்த சுமித்ராவை சர மாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் சுமித்ரா புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்குபதிவு செய்து சுரேஷ் பாபுவை கைது செய்தார்.
    பண்ருட்டி அருகே மனைவி இறந்த வேதனையில் வி‌ஷம் குடித்து கணவன் தற்கொலை தற்கொலை செய்து கொண்டார்.

    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே உள்ள கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகிமை தாஸ் (வயது 27), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சத்யாமேரி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சத்யாமேரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மகிமைதாஸ் கவலையடைந்தார். வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். தன்னையும், குழந்தையையும் தனியாக விட்டுவிட்டு போய்விட்டாரே என நினைத்து மனம் உடைந்து காணப்பட்டார்.

    நேற்று மாலை மகிமை தாஸ் திடீரென வீட்டில் வைத்திருந்த வி‌ஷத்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை மகிமைதாஸ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ் பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    வேப்பூர் அருகே ரெயிலை கவிழ்க்க சதி செய்து மர்ம நபர்கள் இரும்பு கிளிப்புகளை அறுத்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TrainTrack
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விருத்தாசலம்-சேலம் ரெயில்வே இருப்பு பாதை அமைந்துள்ளது. இந்த இருப்பு பாதையில் கூத்தக்குடி ரெயில்வே நிலையம் உள்ளது. இந்த கூத்தக்குடி ரெயில்வே நிலையம் வழியாக சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் சென்று வருவது வழக்கம்.

    மேலும் விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் உள்பட சில பயணிகள் ரெயில்களும் நின்று செல்கின்றன. இந்த நிலையில் நேற்று விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த ரெயில் மதியம் 2½ மணியளவில் கூத்தக்குடி ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் இரும்பு பொருள்கள் அறுந்து கிடந்தது. இதை பார்த்த ரெயிலை ஓட்டிவந்த டிரைவர் அதிர்ச்சியடைந்தார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.



    இதையடுத்து ரெயிலை விட்டு இறங்கி அவர் பார்த்தபோது அதில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 15 இரும்பு கிளிப்புகளை மர்ம நபர்கள் அறுத்து தண்டவாளத்தில் போட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கூத்தக்குடி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். இரும்பு கிளிப்புகளை அகற்றி தண்டவாளத்தை சரி செய்தனர். இதையடுத்து அந்த பயணிகள் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதுபற்றி தகவல் அறிந்த கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், ஜெயக்குமார் மற்றும் சேலம் கோட்ட ரெயில்வே போலீசார் கூத்தக்குடி ரெயில்வே நிலையத்துக்கு வந்தனர். தண்டவாளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ரெயிலை கவிழ்க்க சதி செய்து மர்ம நபர்கள் இரும்பு கிளிப்புகளை அறுத்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் நிலையத்தில் மர்ம நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? எனவும் கண்காணித்து வருகின்றனர். இரும்பு கிளிப்புகளை அறுத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  #TrainTrack

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அண்ணாநகரை சேர்ந்தவர் அபோன்ராஜ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 22). கடந்த 4.8.2016 அன்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மணிகண்டன், பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை மணிகண்டன் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    சிறுமி சத்தமிட்டதால் பெற்றோர் எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், மணிகண்டனை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். பின்னர் இது பற்றி சிறுமியின் தாய் நெய்வேலி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார். #tamilnews
    சிதம்பரம் அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள கீழ்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மகள் காவியா (வயது 16). இவர், சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காவியா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.

    கடந்த 14-ந் தேதி கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், காவியாவை தேடினர். இதனிடையே அதே ஊரில் உள்ள பாவாடைராயர் கோவில் அருகே காவியா, மயங்கி கிடப்பதாகவும், அவரது வாயில் இருந்து நுரைவெளியேறுவதாகவும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அவரது பெற்றோரிடம் கூறினர்.

    உடனே பதறியடித்துக்கொண்டு அவர்கள், அங்கு சென்று பார்த்தனர். அப்போது காவியா, விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதும், உயிருக்கு போராடியதும் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர், சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவியா நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து காவியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சத்திரம் அருகே கலெக்டர் அலுவலக என்ஜினீயர், கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
    பரங்கிப்பேட்டை:

    கடலூர் அருகே உள்ள சேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 57). என்ஜினீயரான இவர், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ராஜகோபால், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு உதவி பொறியாளராக ராஜகோபால் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் ராஜகோபால், தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சத்திரம் அருகே உள்ள மடவாபள்ளம் கடற்கரைக்கு சென்றார். கடற்கரையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, விறுவிறுவென கடலுக்குள் இறங்கி, ஆழமான பகுதிக்கு சென்று கடலில் மூழ்கி இறந்தார்.

    பின்னர் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவரது உடல், அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி உடனடியாக அவர்கள், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, ராஜகோபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜகோபால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், திருநாவலூரில் இருந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் ராஜகோபால் மனமுடைந்த நிலையில் இருந்ததாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ராஜகோபாலுக்கு மங்கலட்சுமி என்ற மனைவியும், கவாஸ்கர் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    திட்டக்குடி அருகே பெண் குழந்தையை கொன்று கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). இவருடைய மனைவி உஷா (25). இவர்கள் 2 பேரும் காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் பிரதிஷா என்ற பெண் குழந்தை இருந்தது.

    பிரகாஷ் குடும்பத்தோடு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தங்கி இருந்து அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் தனது மனைவி, மகளுடன் சொந்த ஊரான இடைச்செருவாய்க்கு வந்தார்.

    இந்நிலையில் பிரகாசின் வீடு நேற்று காலையில் நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது பிரகாஷ், உஷா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது அவர்கள் இருவரது கை மணிக்கட்டு நரம்புகளும் அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் கிடந்தனர். அவர்களது உடலுக்கு கீழே, குழந்தை பிரதிஷா கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தாள்.

    இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், குழந்தையை கொன்று விட்டு கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதற்கான காரணம் என்ன? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பிரகாசுக்கும், உஷாவுக்கும் நேற்று திருமண நாளாகும். தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பிரகாசும், உஷாவும் திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடைகளை உடுத்தி இருந்தனர். திருமண நாளை கொண்டாட வேண்டிய நாளில், அவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 
    ஸ்ரீமுஷ்ணம் அருகே கல்லூரி மாணவி வீட்டின் மேற்கூரை சட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கடலூர்:

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கூடலையாத்தூரை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகள் சிவசங்கரி (வயது 22). இவர் கடலூர் வன்னியர் பாளையத்தில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி இருந்து, தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் எம்.ஏ., 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்த அவர், திடீரென மேற்கூரை சட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் சம்மந்தம் தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் வேலாயுதம் (வயது 26). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பி.எச்.டி.படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் படித்து வருகிறார்.

    மாணவர் வேலாயும் அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். மேலும் அவர் அந்த புகைப்படத்தை மாணவிக்கும், தனது நண்பர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து அவர் சமூக வலைத் தளங்களிலும் அந்த படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஆபாச படத்தை பார்த்து அந்த மாணவி அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய மாணவர் வேலாயுதத்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

    மாணவியின் புகைப் படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் என்ஜினீயர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பி.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாதன் (வயது 30). இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (26).

    இவர்களுக்கு 1.12.2016 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில மாதங்கள் மட்டுமே அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து வந்தனர். பின்னர் சத்யநாதன் குடும்பத்தினர் ரம்யாவை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீ சில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது திருமணத்தின் போது 32 பவுன் நகை ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே கூடுதல் வரதட்சணை கேட்டு எனது கனவர் சத்யநாதன் சித்ரவதை செய்ய தொடங்கினார்.

    இதைத்தொடர்ந்து நான் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று 10 பவுன் நகையும், ரூ.10 லட்சமும் வாங்கி கொடுத்தேன். அதன் பின்னரும் எனது கணவர் மீண்டும் வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்தார். இதற்கு எனது மாமனார் கோவிந்தசாமி, மாமியார் தமிழ் செல்வி, கணவரின் தம்பி சண்முகபிரியன், அவரது மனைவி ஸ்ரீமதி, உறவினர்கள் சந்திர மோகன், இளவரசன் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

    அதன்பேரில் சத்யநாதன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×