என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Track In Veppur"

    வேப்பூர் அருகே ரெயிலை கவிழ்க்க சதி செய்து மர்ம நபர்கள் இரும்பு கிளிப்புகளை அறுத்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TrainTrack
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விருத்தாசலம்-சேலம் ரெயில்வே இருப்பு பாதை அமைந்துள்ளது. இந்த இருப்பு பாதையில் கூத்தக்குடி ரெயில்வே நிலையம் உள்ளது. இந்த கூத்தக்குடி ரெயில்வே நிலையம் வழியாக சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்கள் சென்று வருவது வழக்கம்.

    மேலும் விருத்தாசலம்- சேலம் பயணிகள் ரெயில் உள்பட சில பயணிகள் ரெயில்களும் நின்று செல்கின்றன. இந்த நிலையில் நேற்று விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த ரெயில் மதியம் 2½ மணியளவில் கூத்தக்குடி ரெயில்வே நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் இரும்பு பொருள்கள் அறுந்து கிடந்தது. இதை பார்த்த ரெயிலை ஓட்டிவந்த டிரைவர் அதிர்ச்சியடைந்தார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.



    இதையடுத்து ரெயிலை விட்டு இறங்கி அவர் பார்த்தபோது அதில் தண்டவாளத்தில் பொருத்தப்பட்டிருந்த 15 இரும்பு கிளிப்புகளை மர்ம நபர்கள் அறுத்து தண்டவாளத்தில் போட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கூத்தக்குடி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்தனர். இரும்பு கிளிப்புகளை அகற்றி தண்டவாளத்தை சரி செய்தனர். இதையடுத்து அந்த பயணிகள் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதுபற்றி தகவல் அறிந்த கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், ஜெயக்குமார் மற்றும் சேலம் கோட்ட ரெயில்வே போலீசார் கூத்தக்குடி ரெயில்வே நிலையத்துக்கு வந்தனர். தண்டவாளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ரெயிலை கவிழ்க்க சதி செய்து மர்ம நபர்கள் இரும்பு கிளிப்புகளை அறுத்து தண்டவாளத்தில் போட்டு சென்றனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் நிலையத்தில் மர்ம நபர்கள் யாராவது நடமாடுகிறார்களா? எனவும் கண்காணித்து வருகின்றனர். இரும்பு கிளிப்புகளை அறுத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  #TrainTrack

    ×