என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி இவரது மனைவி லதா. ஆயங்குடி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக உள்ளார்.
இவர் தனது மகன் பிறந்த நாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகர் கோவிலுக்கு சென்றார். தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதர் தர்ஷனிடம் கூறினார். ஆனால் நர்சு லதாவிடம் பெயர், ராசி எதுவும் கேட்காமல் தீட்சிதர் அர்ச்சனை செய்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீட்சிதர் தர்ஷன் நர்சு லதாவை ஆபாசமாக திட்டி கன்னத்தில் அறைந்தார்.
காயம் அடைந்த லதா அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சிதம்பரம் டவுன் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்.
தர்சன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான தீட்சிதரை போலீசார் தேடி வருகின்றனர். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
இந்தநிலையில் பொது தீட்சிதர்கள் அவசர கூட்டம் செயலாளர் பாலகணேசன் தீட்சிதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பணியில் இருக்கும்போது பெண்ணை தாக்கிய தீட்சிதர் தர்ஷனை கோவில் பூஜை பணியிலிருந்து 2 மாதங்கள் சஸ்பெண்டு செய்தனர். மேலும் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே தீட்சிதரை கைது செய்யக்கோரி செவிலியர் சங்கம், மே17 இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் செல்லப்பன், மாவட்ட செயலாளர் பால. அறவாழி, தமிழக வாழ்வுரிமை கட்சி இளைஞர் பாசறை குமரன், புரட்சிகர மாணவர் முன்னணி மாவட்ட தலைவர் மணியரசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்னும் 2 நாட்களுக்குள் தீட்சிதர் தர்ஷன் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து அனைத்து கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில இணை செயலாளர் மணிமேகலை கூறுகையில், செவிலியர் லதாவை தாக்கிய தீட்சிதரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார்.
மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறும்போது, நர்சை தாக்கிய தீட்சிதர் தர்ஷன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இதுவரை காவல் துறை கைது செய்யவில்லை. காவல் துறையினரே அவருக்கு பாதுகாப்பு தருகிறார்கள். உடனடியாக அவரை கைது செய்யவில்லை என்றால் மிக பெரிய அளிவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
முன்னதாக அவர் நடராஜர் கோவிலில் தாக்கப்பட்ட நர்சு லதாவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
வடலூர்:
புதுவை மாநிலம் லாஸ்பேட்டையை சேர்ந்தவர்கள் சுந்தர், முரளி. இவர்கள் 2 பேரும் ரவுடிகள். இவர்கள் தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து சுந்தருக்கும், முரளிக்கும் இடையே தொழில்போட்டி ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 15.2.2017 அன்று முரளி கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தர், தட்டாஞ்சாவடியை சேர்ந்த செந்தில், அமரன் (வயது 24), அசோக் மற்றும் 17 வது சிறுவன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான அமரன் ரவுடி ஆவார். அவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் போலீஸ்நிலையத்தில் உள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் மட்டும் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
இந்த வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் நேற்று மாலை தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அமரன் உள்பட 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அமரனை அவரது தந்தை பாண்டியன் மற்றும் மைத்துனர் உதயகுமார் ஆகியோர் ஒரு காரில் அழைத்துக்கொண்டு நேற்று தஞ்சாவூருக்கு சென்றனர். காரை தஞ்சாவூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓட்டிச்சென்றார்.
இரவு 10 மணி அளவில் அவர்கள் சென்ற கார் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழி அருகே சென்றது. அப்போது காரில் இருந்த பாண்டியனும், உதயகுமாரும் காரை சாலையோரமாக நிறுத்தும்படி கூறினர். பின்பு பாண்டியன், உதயகுமார், மாரிமுத்து ஆகியோர் காரில் இருந்து இறங்கி அங்கிருந்த டாஸ்மாக் கடைக்கு சென்றனர். அப்போது அமரன் மட்டும் காரில் தனியாக இருந்தார்.
அந்த நேரத்தில் 4 மோட்டார் சைக்கிளில் 7 பேர் கொண்ட கும்பல் கையில் வீச்சரிவாளுடன் அங்கு வந்தனர். அவர்களை கண்டதும் காரில் இருந்த அமரன் இறங்கி தப்பி ஓடமுயன்றார். அப்போது அந்த கும்பல் அமரனை சரமாரியாக வெட்டி சாய்த்தது. மேலும் அவர்கள் ஆத்திரம் தீராமல் தலையை கொத்துகறிபோல் வெட்டினர். இதில் தலை சிதைந்து ரத்தவெள்ளத்தில் அமரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அப்போது மதுபாட்டில் வாங்கிக்கொண்டு பாண்டியன், உதயகுமார், மாரிமுத்து ஆகியோர் வந்தனர். உடனே அந்த கும்பல் அமரனின் தந்தை பாண்டியனையும் சரமாரியாக வெட்டி விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.
இதுகுறித்த தகவல் வடலூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. நெய்வேலி துணை போலீஸ்சூப்பிரண்டு லோகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த அமரன் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
படுகாயம் அடைந்த பாண்டியனை குறிஞ்சிப்பாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பிரபல ரவுடி முரளி கொலை வழக்கு தொடர்பாக பழிக்குபழியாக ரவுடி அமரனை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேக்கிக்கின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அமரனை கொலை செய்தது புதுவையை சேர்ந்த பார்த்தீபன், சதீஷ், சரவணன் உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது.
கொலையாளிகளை பிடிக்க துணைபோலீஸ்சூப்பிரண்டு லோகநாதன் தலைமையில் ஒரு தனிப்படையும், டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். கொலையாளிகள் ஊட்டி அல்லது கொடைக்காணல் சென்று பதுங்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
கொலை வழக்கில் விடுதலையான ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுவாதி (வயது22). இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.
கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (22) இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலைபார்த்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே காதலர்கள் வாழ்வில் இணைய முடியாவிட்டாலும், சாவிலாவது இணைவோம் என்று முடிவெடுத்து தற்கொலை செய்ய தீர்மானித்தனர். அதன்பின் 2 பேரும் நேற்று இரவு பணப்பாக்கம் வந்தனர். அங்குள்ள ரெயில்வே கேட்பகுதியில் உள்ள தண்டவாள பகுதிக்கு சென்றனர்.
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது இருவரும் கைகளை கோர்த்தப்படி நின்றனர்.
ரெயில் அருகே வந்ததும் கண்களை மூடிக்கொண்டு பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதனை பார்த்த ரெயில் என்ஜீன் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த கடலூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 2 பேரின் உடல்களை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க. கட்சியின் கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டு பேசினார். அதன்பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: -
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றுள்ளது.
உள்ளாட்சி தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு தேவையான இடங்களை அ.தி.மு.கவிடம் கேட்டு பெறுவோம். நாங்கள் கேட்டு வாங்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
மேலும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடுவோம். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
காவேரி, முல்லை, பாலாறு போன்ற ஆறுகள் இருந்தாலும் அடிக்கடி நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
கூட்டுறவு சர்க் கரை ஆலைகளில் கரும்பு அரவையை நிறுத்திவிட்டார்கள். தொடர்ந்து கரும்பு அரவை தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
நெய்வேலி என்.எல்.சி.யில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கவேண்டும்.
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு என்.எல்.சியில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இது கண்டிக்க தக்கதாகும்.
கடலூரில் ராமசாமி படையாட்சியாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க கோவில் நிர்வாகம் சீர் செய்ய வேண்டும். தமிழக அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் தனலட்சுமி (வயது 18). இவர் சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.
இதே கடையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே கடையில் வேலைபார்த்து வந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
இதையறிந்த கடை உரிமையாளர் அவர்கள் இருவரையும் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். தனலட்சுமி தனது பாட்டி வீட்டிலேயே தங்கி இருந்தார். சக்திவேல் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். தனலட்சுமியிடம் செல்போனில் சக்திவேல் பேச முயற்சி செய்தார். ஆனால், தனலட்சுமி செல்போனில் பேசவில்லை.
இதையடுத்து சக்திவேல் நேற்று சிதம்பரத்துக்கு வந்தார். தனலட்சுமி வீட்டுக்கு சென்றார். தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். ஆனால், அதற்கு தனலட்சுமி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான்மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.
தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தலட்சுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு தனலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே தப்பி ஓடிய சக்திவேலை பொதுமக்கள் மடக்கி பிடித்து சிதம்பரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா (வயது 51). காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக உள்ளார்.
இவர் தனது மகன் ராஜேசின் (21) பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று சாமி கும்பிட வந்தார். கோவில் பிரகாரத்தில் உள்ள முக்குருணி சன்னதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதர் தர்சன் என்பவரிடம் தேங்காய், பழத்தட்டை கொடுத்தார்.
அப்போது தீட்சிதர் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து விட்டு மீண்டும் லதாவிடம் பழத்தட்டை கொடுத்துள்ளார். அதற்கு லதா ஏன் என் மகன் பெயரில் அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த தீட்சிதர் தர்சன், நர்ஸ் லதா கன்னத்தில் அறைந்தார். இதில் அவர் கீழே விழுந்தார். இதனை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து லதா சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தீட்சிதர் தர்சன் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தீட்சிதர் தர்சன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் தொழில் அதிபர் இல்ல திருமணம் நடத்த தீட்சிதர் அனுமதி அளித்தது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் பக்தரை தீட்சிதர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் புதுப்பாளையம் ராமசாமி தெருவை சேர்ந்தவர் அப்துல்சத்தார். இவருடைய மகன் அப்துல்கபூர் (வயது 43). இவர் கடலூர் கான்வென்ட் தெருவில் செல்போன் பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த அவர் வேலை முடிந்ததும் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது, கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அங்கே அவர் வைத்திருந்த ரூ.700 மற்றும் பழுதுபார்க்க வைத்திருந்த 5 செல்போன்களையும் காணவில்லை.
இதை யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடிச்சென்று விட்டனர். இது பற்றி அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் கடைக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பண்ருட்டி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில்வெற்றிடம் என்பது ஏதும் இல்லை. மத்தியிலும், மாநிலத்திலும் சிறப்பான மக்கள் பணியினை ஆட்சியாளர்கள் செய்துவருகின்றனர். ரபேல் போர் விமான வழக்கில் எதிர்கட்சியினரின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நற்சான்றாக கருதுகிறேன்.
தமிழக அரசு 5 மாவட்டங்களை புதியதாக பிரித்து அந்த மாவட்டங்களில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. அந்த அந்த மாவட்ட மக்களுக்கு இதுநல்ல செய்தி மட்டும் அல்ல. அந்தந்த மாவட்டங்கள் பல்வேறு துறையிலான வளர்ச்சியை உறுதி செய்து உள்ளது.
தமிழகத்தில்உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்ததற்கு எதிர்க்கட்சியான தி.மு.க. வழக்கு போட்டதுதான் அடிப்படை காரணம். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான நல்ல சூழலை ஆளும்அ.தி.மு.க. அரசு ஏற்படுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க.கூட்டணி தமிழக உள்ளாட்சி தேர்தலில் மிக அமோக வெற்றியை பெறும். கர்நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதைஎதிர்த்து தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது வேதனை அளிக்கிறது. தமிழக அரசு மீண்டும் முயற்சி எடுக்க வேண்டும். சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற இறுதி தீர்ப்பு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 575 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி உள்ளது.
இந்த தொட்டியில் உள்ள தண்ணீரை மாணவர்கள் குடித்தனர். அவர்கள் குடித்த தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் கூறினர். இதைத்தொடர்ந்து பள்ளி ஊழியர்களின் உதவியுடன் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அதில் பாம்பு ஒன்று இறந்து கிடந்தது.
இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பள்ளியில் 7-வது படிக்கும் மாணவர்கள் வதிஷ்டபுரத்தை சேர்ந்த முருகன் மகன் சிவன் (வயது 12). நிதிநத்தத்தை சேர்ந்த நராயணன் மகன் செல்லதுரை (12) ஆகிய இருவரும் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தனர்.
அவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரையும் பள்ளி ஆசிரியர்கள் மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திட்டக்குடி தாசில்தார்கள் செந்தில்வேலன், ரவிச்சந்திரன், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் பாண்டிதுரை ஆகியோர் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தனர். பின் அரசு மருத்துவமனைக்கு சென்று பள்ளி மாணவர்களிடம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர். மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கூறி சென்றனர்.
தொடர்ந்து தகவலின் பேரில் விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் பாண்டிதுரை திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திட்டக்குடி அரசு மருத்துவ மனைக்கு சென்று மாணவர்களிடம் நலம் விசாரித்தனர்.
மேலும் தண்ணீர் தொட்டியில் இறந்த பாம்பு கிடந்தது எப்படி? மர்ம மனிதர்கள் யாரேனும் பாம்பை அடித்து கொன்று குடிநீர் தொட்டியில் வீசி சென்றார்களா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல ராதாம்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது17) இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இவருக்கும், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த விசித்ரா(17) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள் தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்தநிலையில் மாதவன் தனது நண்பர்களான நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த விக்னேஷ்(19), சூர்யபிரகாஷ்(21) ஆகியோரிடம் தான் நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த விசித்ரா என்ற பெண்ணை காதலித்து வருவதாக கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதவன் தனது காதலி விசித்ராவை அங்குள்ள ஆற்றங்கரை பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசமாக இருந்தார்.
இந்த விவரம் அறிந்த மாதவனின் நண்பர்கள் விக்னேஷ், சூர்யபிரகாஷ் ஆகியோரும் ஆற்றங்கரை பகுதிக்கு சென்றனர். அங்கிருந்த விசித்ராவை மிரட்டி அவர்கள் இருவரும் கற்பழித்தனர்.
அதன்பின்பு மாதவன் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அதனைத்தொடர்ந்து விசித்ரா அழுதுகொண்டு வீட்டுக்கு சென்றார்.
வீட்டில் இருந்த அண்ணன் மற்றும் தந்தையிடம் நடந்த விபரத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதைத்தொடர்ந்து விசித்ராவின் அண்ணன் சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். விசித்ராவை கற்பழித்த 3 பேரை பிடிக்க துணைபோலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் விக்னேஷ், மாதவன், சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரை இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதேபோல் சூர்யபிரகாசும் கல்லூரியில் படித்து வருகிறார்.
இளம்பெண்ணை மிரட்டி மாணவர்கள் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் தங்கவேல் (வயது 22) என்பவர் என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார்.
இதை பார்த்த போலீசார், தங்கவேலை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்றனர். அதற்கு அவர் தனது மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்டதாகவும், அதனால் மெக்கானிக் ஒருவர் வந்து என்ஜினை கழற்றி சென்று விட்டதாகவும், தான் அந்த கடைக்கு மோட்டார் சைக்கிளை தள்ளி செல்வதாகவும் கூறினார்.
இருப்பினும் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேல், என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்ததற்கு எதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் அவர் தன்னிடம் பணம் இல்லை என்றும், அதனால் ‘இ-செலான்’ மூலம் ரசீது கொடுங்கள், தான் கோர்ட்டில் அல்லது தபால் நிலையத்துக்கு சென்று அபராதம் செலுத்தி விடுவதாக கூறினார். அதற்கு சக்திவேல், இ-செலான் எந்திரம் இல்லை என்றும், அதனால் ரசீது எழுதி கொடுப்பதாகவும் கூறினார்.
இதனால் தங்கவேலுவுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், தங்கவேலை சமாதானப்படுத்தி அபராதம் செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு கூறினார். பின்னர் அவர் ரூ.100 அபராதம் செலுத்தி விட்டு, மோட்டார் சைக்கிளை தள்ளி சென்றார்.
ஹெல்மெட் அணியவில்லை என்று என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்த வாலிபருக்கு போலீசார் அபராதம் விதித்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






