search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதம்பரம் நடராஜர் கோவில்
    X
    சிதம்பரம் நடராஜர் கோவில்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நர்ஸ் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

    சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் பக்தரை தீட்சிதர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா (வயது 51). காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக உள்ளார்.

    இவர் தனது மகன் ராஜேசின் (21) பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று சாமி கும்பிட வந்தார். கோவில் பிரகாரத்தில் உள்ள முக்குருணி சன்னதியில் தனது மகன் பெயரில் அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சிதர் தர்சன் என்பவரிடம் தேங்காய், பழத்தட்டை கொடுத்தார்.

    அப்போது தீட்சிதர் வெறும் தேங்காயை மட்டும் உடைத்து விட்டு மீண்டும் லதாவிடம் பழத்தட்டை கொடுத்துள்ளார். அதற்கு லதா ஏன் என் மகன் பெயரில் அர்ச்சனை செய்யவில்லை என்று கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த தீட்சிதர் தர்சன், நர்ஸ் லதா கன்னத்தில் அறைந்தார். இதில் அவர் கீழே விழுந்தார். இதனை பார்த்த அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து லதா சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தீட்சிதர் தர்சன் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசியது, மிரட்டல், பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தீட்சிதர் தர்சன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் தொழில் அதிபர் இல்ல திருமணம் நடத்த தீட்சிதர் அனுமதி அளித்தது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் பக்தரை தீட்சிதர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×