என் மலர்tooltip icon

    கடலூர்

    திட்டக்குடி அருகே கிராம நிர்வாக அதிகாரியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 28). இவர் ஆவினங்குடி பஸ் நிறுத்தத்தில் மது போதையில் நின்றார். அப்போது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சென்ற வையங்குடி கிராம நிர்வாக அலுவலர் கலைவாணியை வழிமறித்து தகராறு செய்து மிரடடினார்.

    இதுகுறித்து ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் கலைவாணி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, திவாகரை கைது செய்தனர்.
    நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த சில நாட்களாக கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 42.17 அடியாக உள்ளது. சென்னைக்கு 51 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக அனுப்பப்படுகிறது.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வீராணம் ஏரியில் உள்ள நீர் ஆவியாகி செல்கிறது. இதன் காரணமாக நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். கோடை மழை பெய்தால் மட்டும் கூடுதல் தண்ணீர் அனுப்ப ஏதுவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ராமநத்தம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அடுத்துள்ள கல்லூர் ரோட்டை சேர்ந்தவர் பொற்கைபாண்டியன்(வயது 60). விவசாயி. இவர் தற்போது கல்லூர் அருகே மயிலாடும்புரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரவு நேரத்தில் மட்டும் கல்லூர் ரோட்டில் உள்ள தனது வீட்டில் வந்து பொற்கைபாண்டியன் தங்குவார். நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், இரவில் அவர் தங்குவதற்கு வரவில்லை. இதை பயன்படுத்தி வீட்டின் கதவை உடைத்து, 2½ பவுன் நகை, 300 கிராம் வெள்ளியை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. திருட்டு நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர் முதுநகர் அருகே கிறிஸ்தவ ஜெப கூடத்துக்கு மர்ம கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே செல்லங்குப்பத்தில் கடலூர்-சிதம்பரம் பிரதான சாலையில் பெந்தகொஸ்தே சபைக்குரிய ஜெப கூடம் அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அந்த ஜெப கூடத்தில் பிரார்த்தனை ஏதும் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று மதியம் மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் “வெள்ளை நிற சேலை அணிந்த ஒரு பெண்ணால் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது. இது இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும். பெந்தகொஸ்தே ஜெப கூடத்தில் இது நடக்கப்போவதாக சிலர் பேசிக்கொண்டனர். அதைக் கேட்ட நான், கடிதம் மூலமாக தங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இப்படிக்கு என்ற இடத்தில் ‘செய்தியை கேட்டவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த கடிதம் கடலூர் பகுதியில் உள்ள அஞ்சலகம் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் நவீன சோதனை கருவிகளுடன் செல்லங்குப்பத்தில் உள்ள பெந்தகொஸ்தே சபைக்குரிய ஜெப கூடத்துக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா? என அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் மர்ம கடிதத்தை அனுப்பியது யார்?, மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் அந்த கடிதம் அனுப்பப்பட்டதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிறிஸ்தவ ஜெப கூடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    கடலூர்:

    கடலூர் ஆர்.எஸ்.எஸ். சமர்ப்பணம் சேவை மையம் சார்பில் மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக 10 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீரும், 3 ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆரிய வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கடலூர் வள்ளி விலாஸ் உரிமையாளர் பாலு தலைமை தாங்கினார். திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கடலூர் யோகிராம் பார்மா உரிமையாளர் ரவிச்சந்திரன், பாபு ஏஜென்சி உரிமையாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையின் பயன்கள் குறித்து டாக்டர் கணபதி விளக்கி கூறினார். பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் அரிசி, முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் கருணாகரன், மாவட்ட மக்கள் தொடர்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.
    மாவட்டத்தில் நடந்த சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 13 ஊராட்சி ஒன்றியம், 2 நகராட்சி பகுதிகளில் காலியாக இருந்த 108 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 145 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 9.7.2018 அன்று கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டார். இதில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பேரில் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்தனர்.

    பின்னர் அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேர்காணல் நடத்தியும், காலி பணியிடங்களை இது வரை நிரப்ப முடியவில்லை. இந்நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தையும் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபடி சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிர்வாக காரணங்களுக்காக இது வரை நிரப்பப்படவில்லை. இதனால் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்பதால், இது தொடர்பாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது. மேலும் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்களை பூர்த்தி செய்வது தொடர்பான அறிவிப்பு பின்னர் தனியாக வெளியிடப்படும்.

    இவ்வாறு கலெக்டர் கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.

    அம்பன் புயல் காரணமாக கடலில் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு உள்ளது.
    கடலூர்:

    வங்கக்கடலில் அம்பன் புதிய புயல் உருவாகி கடந்த மூன்று நாட்களாக கடல் பகுதிகளில் பலத்த கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டு வருகின்றன. மேலும் இந்த புதிய புயல் பெரிய அளவில் சூறாவளிப் புயலாக மாறி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    மேலும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கடல் அலை சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று இரவு முதல்  கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு, ராசாப்பேட்டை, துறைமுகம், சொத்திக்குப்பம், அக்கரை கோரி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் கடல் அலை சுமார் 20 அடி முதல் 30 அடி வரை முன்னோக்கி வந்து செல்கிறது.

    இதன் காரணமாக தாழங்குடா பகுதியில் படகு நிறுத்துவதற்கு இடமில்லாமல் கடற்கரையோரம் நிறுத்தப்பட்ட படகுகள் கடல் அலையில் இழுத்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் சுதாரித்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக 50 அடிக்கு சிரமப்பட்டு கொண்டு சென்று தென்னை மரத்தில் கட்டி அங்கு பாதுகாப்பாக இருந்து வருகின்றனர்.

    மேலும் கடல் அலை நாளுக்குநாள் சீற்றம் அதிகரித்து வருவதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு உள்ளது. மேலும் மீனவர்கள் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமென வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரும்பு தோட்டத்தில் வைத்து சாராயம் காய்ச்சிய ஒருவரை மட்டும் போலீசார் பிடித்தனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே சமட்டிக்குப்பம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் சாராயம் காய்ச்சபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டெல்டா பிரிவு சப்இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 3 பெரிய பேரலில் சாராயம் காய்ச்சும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை பார்த்த போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது பலர் தப்பி சென்று விட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான சமட்டிக்குப்பம் சேர்ந்த பாலமுருகன் வயது 37 என்பவர் மட்டும் பிடிபட்டார்.

    மேலும் 600 லிட்டர் சாராயம், பானைகள், கேன் போன்றவற்றை பறிமுதல் செய்து கடலூர் மதுவிலக்கு போலீசிடம் டெல்டா பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கேப்பர்மலை துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலூர் துறைமுகம், செல்லங்குப்பம், சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர், சிவானந்தபுரம், கூத்தப்பாக்கம், கிழக்கு ராமாபுரம், எஸ்.புதூர், வழிசோதனைபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

    நெல்லிக்குப்பத்தில் பால் வாங்குவதற்கு நின்று கொண்டிருந்த போலீசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜீ (வயது 32). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் காவலராக இருந்து வருகிறார்.

    இவர் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வாங்குவதற்கு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபரில் ஒரு வாலிபர் காவலர் ராஜூவை இடித்துக் கொண்டு நின்றார். இதனை தட்டிக்கேட்ட காவலர் ராஜுவை 3 வாலிபர்கள் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 

    காயமடைந்த ராஜீ கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் காவலர் ராஜீ கொடுத்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் அண்ணா நகர் சேர்ந்தவர்கள் ஜெய சீலன் (வயது 29), சேரன் (வயது 24), ராஜ்குமார் (வயது 28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெய்வேலி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நிலக்கரி கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.

    நெய்வேலி:

    நெய்வேலி வட்டம், ஊ.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் டிப்பர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி பழுப்பு நிலக்கரி கடத்தியது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து டிப்பர் லாரியின் டிரைவரான உ.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    சிதம்பரம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தை அடுத்த மீதிகுடியிருப்பு பகுதி யில் உள்ள ரெயில் தண்ட வளத்தில் தலையில் பலத்த காயத்துடன் ஆண் பிணம் கிடந்தது. இந்த பிணத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிதம்பரம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் சிதம்பரம் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிவராமன் (வயது 20) என்பது தெரியவந்தது. சிவராமன் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் அவரது உடலை வீசி சென்றனரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×