என் மலர்tooltip icon

    கடலூர்

    சேத்தியாத்தோப்பு, புவனகிரியில் முககவசம் அணியாதவர்களிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.
    சேத்தியாத்தோப்பு:

    உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு சுகாதாரத்துறை வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    இருப்பினும் பொதுமக்கள் தங்களின் அலட்சியத்தால் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தனர். இவர்களிடம் தற்போது அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புவனகிரி தாசில்தார் சுமதி சேத்தியாத்தோப்பு கடைவீதிக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி சுமார் 200 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களிடம் முககவசம் அணிந்து தான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தாசில்தார் சுமதி அறிவுறுத்தினார். ஆய்வின் போது, சேத்தியாதோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சுபாஷ், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர், உதவியாளர்கள் அன்பு, செல்வராஜ், ராஜவேல், சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இதேபோல் புவனகிரி கடைவீதியில் தாசில்தார் சுமதி முன்னிலையில், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் புவனகிரி கடைவீதிக்கு சென்று முககவசம் அணியாத கடைக்காரர்களிடம் ரூ.100 அபராதம் விதித்து ரசீது சீட்டை கொடுத்தனர். மேலும் சாலையில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் டைமன் துரை, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ராஜ்குமார், ராசு ஆகியோர் உடன் இருந்தனர்.

    பண்ருட்டி அருகே நகை அடகு கடையில் 7 கிலோ வெள்ளியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் காடாம்புலியூரில் காட்டாண்டிக்குப்பம் சாலையில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த 7 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 3½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    அடகு கடை பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் இரவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பண்ருட்டி அருகே நீதிபதி வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் இரும்பு, சிமென்ட் வியாபாரம் செய்து வருகிறார். வீடும், கடையும் ஒரே இடத்தில் உள்ளது.

    இவரது மனைவி ரஜேஸ்வரி (வயது 40). கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றகோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். இவர் விடுமுறை நாட்களில் காடாம்புலியூரில் உள்ள வீட்டுக்கு வருவது வழக்கம்.

    நேற்று இரவு மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    காலையில் எழுந்து பார்த்த மணிகண்டன் பீரோ மற்றும் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நீதிபதியின் வீட்டுக்கு விரைந்தனர். விசாரணையில் 35 பவுன் நகை, 2½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    விருத்தாசலம் அடுத்த சின்ன வடவாடி, பெரியவடவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் 50 ஏக்கர் வாழைகள் நாசமானது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மேக மூட்டம் ஏற்பட்டு திடீரென அவ்வப்போது காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த முந்திரி, பலா, மா உள்ளிட்ட மர வகைகள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தன. மேலும் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் அனைத்தும் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்த மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இதனால் சில கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

    விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை பயிர் செய்துள்ளனர். நேற்று மாலை திடீரென விருத்தாசலம் அடுத்த சின்ன வடவாடி, பெரியவடவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த காற்றில் குலை தள்ளி இருந்த நிலையில் வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்தன. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம், வட்டம், கிராமம் அளவில் அக்குழுக்கள் நோய் பரவாமல் திறம்பட செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்சி சம்பத் கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார்.

    கொரோனா தடுப்பு பணி அலுவலர் சுப்பிரமணியன், கூடுதல் காவல்துறை இயக்குநர் வினித் வான்கடே, டி.ஐ.ஜி சந்தோஷ்குமார், கலெக்டர் அன்புச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ஆணைக்கிணங்க 144 தடை உத்தரவு தொடங்கி நாட்கள் முதல் இன்று வரை அனைத்து அரசு பணியாளர்களும் தம் உயிரையும் துச்சமன நினைத்து பணியாற்றி வருகின்றனர்.

    குறிப்பாக துப்புரவு பணிகள், கிருமி நாசினி தெளித்தல், உணவு வழங்குதல், கிருமி தொற்று கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளான காய்கறிகள், மளிகைப்பொருட்கள் சிறப்பாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மருத்துவதுறை ஊழியர்கள் 24 மணிநேரம் முழு அற்பணிப்போடு நோய் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து பரிபூரண குணமடையச் செய்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முழு வீச்சில் மருத்துவம் மற்றும் சத்தான சரிவிகித உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம், வட்டம், கிராமம் அளவில் அக்குழுக்கள் நோய் பரவாமல் திறம்பட செயல்பட்டு வருகிறது.

    இனி வரும் நாட்களின் பொதுமக்கள் அனைவரும் சமூதாய இடைவெளியை கடைபிடிக்கவும், முக கவசம் அணிவது வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். தங்களையும், தங்களின் சுற்றுபுறங்களையும் தூய்மையாக வைக்கவும், தங்கள் வருங்கால சந்ததியினர் நலன் கருதி நோய் தொற்று பரவாமல் காக்க வேண்டும். பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பாக ஒத்துழைப்பு அளித்து வருவதற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பாண்டியன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்-கலெக்டர்கள் விசுமகாஜன், பிரவின்குமார், கடலூர் ஆர்.டி.ஓ. ஜெகதீஸ்வரன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர் ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் கீதா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் குமரன், கடலூர் ஒன்றிய குழு தலைவர் தெய்வ பக்கிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடலூரில் 2 இடமும், சிதம்பரத்தில் 2 இடமும், விருத்தாசலத்தில் 4 இடம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி ஆனது நடைபெற உள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு வருகிற மே 31-ந்தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அனைத்து பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருந்தது.

    மேலும் 10-ம் வகுப்பு தேர்வு வருகிற ஜூன் 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் நிறைவுபெற்ற பிளஸ்-2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

    வருகிற 27-ந் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ள நிலையில் தற்போது விடைத்தாள்களை பிரித்து திருத்தும் மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் இடங்களுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் என 3 இடத்தில் மட்டுமே இதுவரையில் 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வந்தது. ஆனால் ஆசிரியர்கள் சமூக இடைவெளி விட்டு அமரவேண்டும் என்ற உத்தரவு காரணமாக கடலூரில் 2 இடமும், சிதம்பரத்தில் 2 இடமும், விருத்தாசலத்தில் 4 இடம் என மொத்தம் கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் இந்த விடைத்தாள் திருத்தும் பணி ஆனது நடைபெற உள்ளது.

    மேலும் ஒவ்வொரு அறையிலும் இதுவரையில் 2 முதன்மை தேர்வாளர்கள் மற்றும் 2 கூற்று ஆய்வாளர் உள்ளிட்ட 12 உதவி தேர்வர்கள் என 16 பேர் இந்த விடைத்தாள்களை திருத்தும் பணியில் இதுவரை ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அது பாதியாக குறைக்கப்பட்டு ஒவ்வொரு அறையிலும் ஒரு முதன்மை தேர்வுவர், ஒரு கூர்நோக்கு ஆய்வாளர் மற்றும் 6 உதவித் தேர்வர்கள் என 8 பேர் மட்டுமே பணியில் இருப்பார்கள்.

    குறிப்பிட்ட நாட்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிக்கும் வகையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும். வரும் ஆசிரியர்களுக்கு தேர்வு மையத்திலேயே கிருமி நாசினிகள், முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்படும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    பண்ருட்டியில் சிறப்பு தொழுகை நடத்திய 70 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசூர் சாலையில் மணிநகரில் தனியார் மில் உள்ளது. இங்கு மணிலா உடைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த மில்லில் நேற்று இரவு ரமலான் மாதத்தின் 27-ம் நாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ்வுக்கு கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கரன், தாசில்தார் உதயகுமார், இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் ஆகியோர் விரைந்தனர். ஊரடங்கை மீறி தொழுகை நடத்தியதாக 70 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து கோட்டலாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன் புகாரின் பேரில் அந்த மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது.
    பத்திரக்கோட்டையில் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி 50 கிராம் பாக்கெட் வீடுதோறும் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி, பத்திரக்கோட்டை கிராமத்தில் 4 பேருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி 50 கிராம் பாக்கெட் வீடுதோறும் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன், ரேவதி, வழிகாட்டுதலின்படிஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு சங்கத் தலைவருமான கல்யாணசுந்தரம், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், ஊராட்சிமன்ற உறுப்பினர் பாலகுரு, வாட்டர் டேங்க் ஆப்பரேட்டர் வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

    பண்ருட்டி, புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வுக்காக தூய்மை பணி நடந்து வருகிறது.
    பண்ருட்டி:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தையும் உலுக்கியது. எனவே கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

    இந்த உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்ததால் அரசு பள்ளிகள், கோவில்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

    ஆனாலும் கொரோனா வைரஸ் இன்னும் குறைந்தபாடில்லை. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரசை தடுக்க கடுமையாக போராடி வருகிறது. கடந்த 50 நாட்களுக்கு மேலாக அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் தூசி படிந்து காணப்படுகிறது.

    1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, விடுபட்ட பிளஸ்-2 பொதுத்தேர்வு பாடங்களுக்கான தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.

    அதன்படி வருகிற 15-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பண்ருட்டி, புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தூய்மை பணி நடந்து வருகிறது. பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜைகள், நாற்காலிகள், பெஞ்ச் ஆகியவற்றை ஊழியர்கள் சுத்தப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.

    பண்ருட்டி கோட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் திருவதிகை, மேட்டுகுப்பம், வீரப்பார், திருவாமூர், ராசாப்பாளையம் ஆகிய பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (22-ந் தேதி) நடக்கிறது.

    எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வரதராஜபுரம், ஆதம்கான் தர்க்கா, சேர்மேன் மணிநகர், திருவதிகை, செட்டிப்பட்டறை, ஹவுசிங் போர்டு, கண்டரக்கோட்டை, புலவனூர், பெரிய காட்டு பாளையம், கீழிருப்பு, மேலிருப்பு, திருவாமூர், காமாட்சி பேட்டை, திடீர் குப்பம், சிறுவத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

    இந்த தகவலை செயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள சிறுநாரையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்க துரை (வயது 37) விவசாயி.

    இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது சொந்த கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது லால்பேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிளும் கண் இமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் தங்கதுரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலை அடுத்து இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சம்பவ இடத்தில் காயம் அடைந்த அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

    அங்கு தங்கதுரை சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் விபத்தில் காயம் அடைந்த 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த விபத்து தொடர்பாக காட்டுமன்னார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண்ணாடத்தில் முகமூடி அணிந்த 2 பேர் பெண்ணிடம் 10 பவுன் தாலி செயினை பறித்த சம்பவம் பொதுமக்களிடம் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள இருமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32) விவசாயி. இவரது மனைவி ராஜேஷ்வரி (26). இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

    நேற்று வழக்கம் போல் குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டனர். கொளுத்தும் வெயில் காரணமாக ராஜேஷ்குமார் வீட்டின் வரண்டாவில் வெளியே படுத்து தூங்கினார். அவரது மனைவி ராஜேஷ்வரி மற்றும் 2 வயது குழந்தையுடன் வீட்டின் உள்ளே படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது நள்ளிரவு 1 மணிக்கு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர்.

    வீட்டின் உள்ளே புகுந்த அவர்கள் தூங்கி கொண்டிருந்த ராஜேஷ்வரியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலி செயினை நைசாக எடுத்தனர்.

    மேலும் அவர் காதில் கிடந்த கம்மலையும் கழட்ட முயன்றனர். திடுக்கிட்டு எழுந்த ராஜேஷ்வரி முகமூடி கொள்ளையர்களை பார்த்த தும். திருடன், திருடன் என கூச்சல் போட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று திரண்டனர். சுதா ரித்து கொண்ட 2 முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அவர்களை பொதுமக்கள் விரட்டினர். அப்போது அவர்கள் சிறிது தூரத்தில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் நகையுடன் தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் ராஜேஷ் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொ) கிருபா லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கண்ணு மற்றும் போலீ சார் வழக்கு பதிவு செய்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக் மோப்பநாய் வர வழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றது. தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×