என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் புவனகிரி சித்தேரிரோட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 27). இவருக்கும், கிள்ளை அருகே உள்ள நவாப்பேட் டையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த புதுப்பெண் ராஜேஸ்வரி தீடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேஸ்வரியை தேடிவந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியை சித்தேரி தெற்கு தெருவை சேர்ந்த ஊராட்சி செயலர் ஜெயராஜ் (39) என்பவர் கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜெயராஜ் மீது போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் நாடுமுழுவதும் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த தடுப்பூ ஊசி கண்டுபிடிக்காத நிலையில் உலகநாடுகள் அனைத்தும் கொரோனாவில் இருந்து தப்பிக்க பொதுமுடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது மக்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு முதல்-அமைச்சர் பழனிசாமி படிபடியாக தளர்வுகளை அறிவித்து வருகிறார். இதனால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே வரும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அந்த அந்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 10,817 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடலூர் முதுநகர் பகுதிக்கு வந்தனர். அவர்களை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் சென்னையில் இருந்து வந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் 432 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இன்று 140 பேரின் முடிவுகள் நிலுவையில் இருந்தது. அதில் கடலூர் மாவட்டம் தண்டபாணி நகரை சேர்ந்த 30 வயது லேப்டெக்னீசியன் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்தனர். அந்த பெண் வசித்த தண்டபாணி நகரை சீல்வைத்து தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த என்.எல்.சி. ஊழியர் ஒருவர் கடந்த வாரம் விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து டாக்டர்கள் அவரை சொந்த ஊரில் தனிமைப்படுத்த அறிவுறுத்தினார். அதன்படி நெய்வேலியில் உள்ள அவரது வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
சுகாதார ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அவர் வசிக்கும் தெருவில் கிருமிநாசினி தெளித்தனர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 434 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 417 பேர் குனமாகி வீடு திரும்பி உள்ளனர். 16 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி முத்துலட்சுமி. சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் காட்டுமன்னார்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினர். சிதம்பரம் குமராட்சியில் உள்ள புதுகுழாம்மேடு பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி வீரமணி, முத்து லட்சுமி இருவரும் கீழே விழுந்தனர். இதில் முத்துலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். அங்கு முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் திம்மராவுத்தன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 45). விவசாயி. இவரது மகள் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த எம்.ஜி.ஆர். என்பவர் கேலி பேசினார். இதனால் அர்ஜூனனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் தகராறு ஏற்பட்டது. எம்.ஜி.ஆர்., அவரது மனைவி கவிதா, சகோதரர் செந்தில் குமார், தாயார் அலமேலு, உறவினர் ஜனார்த்தனன் ஆகியோர் அர்ஜூனன் தரப்பினரை தாக்கினர்.
இதில் காயம் அடைந்த எம்.ஜி.ஆர். மற்றும் அர்ஜூனன் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக அர்ஜூனன் புதுவை ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுதொடர்பாக எம்.ஜி.ஆர்., செந்தில்குமார், ஜனார்த்தனன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி சித்தேரிரோட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 27).
இவருக்கும், கிள்ளை அருகே உள்ள நவாப்பேட் டையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடும்பத்தினர் திருமண தேதியை மாற்றி வைத்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த புதுப்பெண் ராஜேஸ்வரி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேஸ்வரியை தேடிவருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்திலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் இருந்து புதுவைக்கு தொழில் ரீதியாகவும், கல்வி நிறுவனங்கள் தொடர்பாகவும் அடிக்கடி பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதே போல் புதுவையிலிருந்தும் கடலூருக்கு வந்து செல்கின்றனர்.
புதுவை மாநிலத்தின் எல்லையாக முள்ளோடை உள்ளது. இந்த பகுதியில் கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே புதுவைக்கு அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோல் தமிழக எல்லையான கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கங்கனாங்குப்பம் சோதனை சாவடியாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இரு மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் புதுவை மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் புதுவையில் சில தளர்வுகளோடு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கியது. இதனால் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து ரெட்டிச் சாவடி பகுதியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் புதுவை போலீசார் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை புதுவைக்குள் நுழைய தடை செய்துள்ளனர். இதனால் தமிழக பகுதியான ரெட்டிச் சாவடி, தூக்கனாம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்த பகுதியில் 200-க் கும் மேற்பட்ட சிறு கிராமங்களில் 1000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவைக்காக புதுவை மற்றும் கடலூருக்கு வந்து செல்கின்றனர். தற்போது புதுவை போலீசார் கடலூருக்கு செல்ல மீண்டும் அனுமதி மறுப்பதால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
தற்போது புதுவையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடலூரில் உள்ள குடிமகன்கள் புதுவைக்கு செல்வதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரு மாநில போலீசாரும் அடிக்கடி சோதனை செய்வதாலும், எல்லைக்குள் நுழைய அனுமதி மறுப்பதாலும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் நிரந்தர தீர்வுகாண பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பண்ருட்டி:
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக ஆட்டோக்கள் இயக்கப்பட வில்லை.தற்போது ஒரே ஒரு பயணி மட்டும் ஏற்றி செல்லலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 2,500 ஆட்டோ டிரைவர்களின் நலன் கருதி ஆட்டோக்களுக்கு பெட்ரோல் போடும் பணி தே.மு.தி.க.சார்பில் நடந்தது.
பண்ருட்டியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவகொழுந்து கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட, நகர தே.மு.தி.க. நிர்வாகி திரளாக கலந்து கொண்டனர்.
சிதம்பரம்:
சிதம்பரம், பரங்கிபேட்டை, கிள்ளை, அண்ணாமலை நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஊரடங்கு தடை உத்தரவை மீறி வெளியே சுற்றி திரிந்த 43 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுபடுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
தற்போது ஊரடங்கு உத்தரவினை படிப்படியாக தளர்வுகளை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து வருகிறார். ஏற்கனவே ஊரக பகுதிகளில் சலூன்கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நகராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடை தொழிலாளர்கள் கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன்படி தமிழகத்தில் சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் 61 நாள் ஊரடங்கிற்கு பிறகு இன்று காலை 7 மணி முதல் கடைகள் திறக்கப்பட்டன. தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கடையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சலூன்கடைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். கடைக்கு வருபவர்களுக்கு சானிடைசர்கள் வழங்க வேண்டும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். சலூன் கடைகளில் வேலைபார்க்கும் தொழிலாளர்களும் முக கவசம் அணிந்து வேலை பார்க்க வேண்டும்.
கடைகளில் 3 பேருக்கு மேல் கூடக்கூடாது. குளிர்சாதன வசதி இருக்கும் கடைகள் திறக்கக்கூடாது. தற்போது கடையை திறக்க அனுமதி அளித்ததால் சலூன் கடை தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நகர பகுதிகளில் உள்ள முடி வெட்ட முடியாமல் தவித்த ஆண்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட முன்னாள் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கி ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், பந்தல் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் என 500-க்கும் மேற்பட்டோருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி, முக கவசம் ஆகிய நிவாரண உதவிகள் வழங்கினார்.
மேலும் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் வார்டு பிரதிநிதி பாலா , முன்னாள் பிரதிநிதி நடராஜன், சரவணன், வடிவேலு, சதீஷ், கார்த்திக், ராஜா, கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஊரடங்கு அமலில் இருக்கும் போது இரவு 7மணிக்கு மேல் 2 வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பழவியாபாரம் செய்த தீபன், இனிப்பு கடை வைத்திருந்த வசந்த பிரசாத் , மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் இயக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல இருசக்கர வாகனத்தில் கெடிலம் ஆற்றில் இருந்து அரசு அனுமதியின்றி 2 மூட்டை மணல் திருடியதாக தயா நிதி, பாலு, புருஷோத்தமன், ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.






