search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    புதுவை எல்லைக்குள் தமிழக வாகனங்கள் நுழைய மீண்டும் தடை

    புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் புதுவை போலீசார் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை புதுவைக்குள் நுழைய தடை செய்துள்ளனர்.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்திலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கடலூரில் இருந்து புதுவைக்கு தொழில் ரீதியாகவும், கல்வி நிறுவனங்கள் தொடர்பாகவும் அடிக்கடி பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதே போல் புதுவையிலிருந்தும் கடலூருக்கு வந்து செல்கின்றனர்.

    புதுவை மாநிலத்தின் எல்லையாக முள்ளோடை உள்ளது. இந்த பகுதியில் கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே புதுவைக்கு அனுமதிக்கப்படுகின்றன.

    இதேபோல் தமிழக எல்லையான கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கங்கனாங்குப்பம் சோதனை சாவடியாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இரு மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

    கொரோனா பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் புதுவை மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் புதுவையில் சில தளர்வுகளோடு அளிக்கப்பட்டிருந்தது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கியது. இதனால் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து ரெட்டிச் சாவடி பகுதியில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    தற்போது புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததால் புதுவை போலீசார் தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை புதுவைக்குள் நுழைய தடை செய்துள்ளனர். இதனால் தமிழக பகுதியான ரெட்டிச் சாவடி, தூக்கனாம்பாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    இந்த பகுதியில் 200-க் கும் மேற்பட்ட சிறு கிராமங்களில் 1000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அன்றாட தேவைக்காக புதுவை மற்றும் கடலூருக்கு வந்து செல்கின்றனர். தற்போது புதுவை போலீசார் கடலூருக்கு செல்ல மீண்டும் அனுமதி மறுப்பதால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    தற்போது புதுவையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் கடலூரில் உள்ள குடிமகன்கள் புதுவைக்கு செல்வதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இரு மாநில போலீசாரும் அடிக்கடி சோதனை செய்வதாலும், எல்லைக்குள் நுழைய அனுமதி மறுப்பதாலும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் நிரந்தர தீர்வுகாண பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    Next Story
    ×