search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெப கூடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தியபோது எடுத்த படம்.
    X
    ஜெப கூடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தியபோது எடுத்த படம்.

    கடலூர் முதுநகர் அருகே கிறிஸ்தவ ஜெப கூடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

    கடலூர் முதுநகர் அருகே கிறிஸ்தவ ஜெப கூடத்துக்கு மர்ம கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகர் அருகே செல்லங்குப்பத்தில் கடலூர்-சிதம்பரம் பிரதான சாலையில் பெந்தகொஸ்தே சபைக்குரிய ஜெப கூடம் அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அந்த ஜெப கூடத்தில் பிரார்த்தனை ஏதும் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று மதியம் மர்ம கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் “வெள்ளை நிற சேலை அணிந்த ஒரு பெண்ணால் வெடிகுண்டு வெடிக்கப் போகிறது. இது இன்னும் ஒரு வாரத்தில் நடக்கும். பெந்தகொஸ்தே ஜெப கூடத்தில் இது நடக்கப்போவதாக சிலர் பேசிக்கொண்டனர். அதைக் கேட்ட நான், கடிதம் மூலமாக தங்களுக்கு தெரிவிக்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் இப்படிக்கு என்ற இடத்தில் ‘செய்தியை கேட்டவர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த கடிதம் கடலூர் பகுதியில் உள்ள அஞ்சலகம் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் நவீன சோதனை கருவிகளுடன் செல்லங்குப்பத்தில் உள்ள பெந்தகொஸ்தே சபைக்குரிய ஜெப கூடத்துக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் வெடிகுண்டு ஏதேனும் உள்ளதா? என அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் மர்ம கடிதத்தை அனுப்பியது யார்?, மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் நோக்கில் அந்த கடிதம் அனுப்பப்பட்டதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிறிஸ்தவ ஜெப கூடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×