என் மலர்
கோயம்புத்தூர்
- பேக்கரி கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார்
- தூக்கி வீசப்பட்டதில் லாரியிலும் சிக்கி தலை நசுங்கிய பரிதாபம்
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் சின்னமுத்தான் (வயது63).
இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சின்னமுத்தான், தனது நண்பரான குட்டாரபாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடன் அங்குள்ள மின் மயானம் அருகே பேசி கொண்டிரு ந்தனர்.அப்போது சின்னமுத்தான் அருகே உள்ள பேக்கரி கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார்.
அப்போது அந்த சாலையில் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் எதிர்பாராதவிதமாக சின்னமுத்தான் மீது மோதியது. இதில் அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டது.
அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து இறந்த சின்னமுத்தானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவையில் இன்று கலெக்டர் கிராந்திகுமார்பாடி அதிரடி ஆய்வு
- சுய மருத்துவம் பார்க்காமல் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை எடுக்க வலியுறுத்தல்
கோவை,
கோவையில் மழைக்கா லம் தொடங்கி உள்ளதை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று காலை கோவை காந்திபுரத்துக்கு வந்திருந்தார்.
அங்கு அவர் சுகாதாரத்துறை ஊழியர்களின் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பும் உடன் இருந்தார்.தொடர்ந்து கோவை ராம்நகர், காட்டூர் விவேகானந்தர் சாலை, செல்லப்பன் வீதி ஆகிய பகுதிகளிலும் சுகாதார ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மும்முர மாக நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சுகாதார ஊழியர்கள் வீடு-வீடாக சென்று அங்கு தண்ணீர் பாத்திரங்கள் மூடப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா, தொட்டிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளதா, வீட்டுக்குள் கயிறு, டயர், சிரட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளதா என்பது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதுதவிர வாரம் ஒருமுறை அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக சுகாதாரப்பணிகள் உறுதிசெய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வீட்டுக்குள் தேவையற்ற பொருட்களை வைத்திருந்தால் அவற்றில் மழைநீர் தங்கி டெங்கு கொசுக்கள் வளர வாய்ப்பு ஏற்படும்.
கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புக்காக 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைப்படும் வகையில் இல்லை. பொதுமக்களுக்கும் டெங்கு பாதிப்பு குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகளை தடுக்கும் வகையில் ஏற்கனவே தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பா ட்டில் உள்ளது. மேலும் கூடுதலாக ஊழியர்களை நியமித்து டெங்கு ஒழிப்பு பணிகளை முடுக்கிவிட திட்டமிட்டு உள்ளோம்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பை-கூளங்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. பொதுமக்கள் வசிப்பிடங்களில் டெங்கு கொசுக்கள் வளர்வதற்கு ஏதுவாக தேவையற்ற பொருட்களை சேகரித்து வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். இது அவர்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
மேலும் வணிக நிறுவனங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆவதற்கு ஏதுவாக தேவையற்ற பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளனவா என்பதை மாவட்ட நிர்வா கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பாதிக்கப்பட்டோர் சுய மருத்துவம் பார்க்காமல் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பிரத்யேக சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் தூக்கில் தொங்கினார்
- திருமணமான 5 மாதங்களிலேயே பரிதாபம்
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் கூடுதுறைமலையை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது48). டெய்லர். இவரது மகன் சூர்ய பிரகாஷ்(30).
இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த நாகவேணி என்பவரை காதலித்து திரு மணம் செய்து ெகாண்டார்.
திருமணத்திற்கு பின்னர் சூர்யபிரகாஷ் தனது மனைவி மற்றும் தாயுடன் ஒன்றாக வசித்து வந்தார். சூர்யபிரகாசுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாகவேணி ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவரை பிரிந்து, பெங்களூருவில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.மனைவி பிரிந்து சென்றாலும், சூர்யபிரகாஷ் போன் செய்து அவருடன் பேசி வந்ததாக தெரிகிறது.
கடந்த 9-ந் தேதி தனது மனைவிக்கு செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாக எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மன உளைச்சலிலேயே இருந்துள்ளார். நேற்று வாழ்க்கையில் விரக்தியடைந்த சூர்யபிரகாஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வெகுநேரமாகியும் சூர்யபிரகாஷின் அறை பூட்டியே கிடந்ததால், அவரது தாய் தனலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவர் ஜன்னல் வழியாக எட்டிபார்த்தார். அப்போது அறைக்குள் அவரது மகன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியான அவர் கதறி அழுதார்.அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து விட்டு மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருவழி கட்டணமாக ரூ.330 செலுத்த வேண்டி இருப்பதால் விவசாயிகள் வேதனை
- மத்தியஅரசு அறிவித்த தகுதியான நபர்களுக்கு மட்டும் விலக்கு என அதிகாரிகள் அறிவிப்பு
சூலூர்,
சூலூர் அருகே அவிநாசி சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அமைந்து உள்ளது. இங்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களுக்கு விவசாய பணிகளுக்காக கட்டண விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கணியூர் சுங்கச்சாவடியில் கடந்த 1-ந்தேதி முதல் கட்டண விலக்கு நிறுத்தப்பட்டது.
எனவே சுங்கச்சாவடி வழியாக செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த பகு தியில் வசிப்பவர்கள் கூறுகையில், சூலூர் அருகே அவினாசி சாலை கணியூர் பகுதியில் தனியார் நிறுவனத்தினர் சுங்கச்சாவடி அமைத்து அவ்வழியே செல்லும் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இதற்கு எதிராக நாங்கள் கடந்த 2017-ம் ஆண்டு போராட்டம் நடத்தினோம். அப்போது 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் பொது மக்களுக்கு கட்டண விலக்கு தருவதாக சுங்கசாவடி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் அவர்கள் திடீரென அவ்வழியே செல்லும் விவசாயிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களிடம் பணம் கேட்டு வருகின்றனர். இதனால் நாங்கள் அந்த பகுதியை கடக்க ஒருவழி கட்டணமாக ரூ.330 செலுத்த வேண்டி உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுங்கச்சாவடி அதிகாரிகள் கூறுகையில், மத்தியஅரசு அறிவித்துள்ள தகுதியுள்ள நபர்களுக்கு மட்டும் சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மற்றவர்கள் இவ்வழியை பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர்.
- சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடி நடவடிக்கை
- தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
சூலூர்,
சூலூர் அடுத்த கருமத்தம்பட்டிக்கு வரும் அனைத்து பஸ்களும் நிலையத்துக்குள் வந்திருந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டுமென போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
ஆனாலும் பெரும்பாலான பஸ்கள் கருமத்தம்பட்டி பஸ் நிலையம் வராமல், மேம்பாலத்தில் சென்று சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுகின்றனர். ஒருசில பேருந்துகள் கருமத்தம்பட்டி பேருந்து செல்லாது என கூறி பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர்.
இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏற்கெனவே பல்வேறு போராட்டம் நடத்தினர். இதன்விளைவாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் அனைத்தும் கண்டிப்பாக கருமத்தம்பட்டி பஸ் நிலையம் வந்து செல்ல வேண்டுமென அரசு உத்தரவிட்டது. ஆனாலும் பலனில்லை.
இந்த நிலையில் சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முகசுந்தரம் கருமத்தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த 2 அரசு பஸ்கள் கருமத்தம்பட்டி பஸ் நிலையத்திற்கு வராமல், சுமார் ஒரு கி.மீ. தூரம் தள்ளி நின்று பயணிகளை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டது கண்டறியப்பட்டது.
எனவே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பஸ்களை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த பஸ்களின் கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அத்து மீறி செயல்பட்டால் வாகனஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதுபற்றி மோட்டார் வாகன அதிகாரிகள் கூறுகையில், கருமத்தம்பட்டி பஸ் நிலையம் வராத வாகனத்தின் கண்டக்டர் நெப்போலியன் மற்றும் டிரைவர் செந்தில் ஆகியோருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கருமத்தம்பட்டி பகுதியில் பஸ் நிலையம் வராத பேருந்துகள் குறித்து அடிக்கடி ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.
- நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
- எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை:
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், நடிகர் கமல்ஹாசன் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்புவதாக கூறி கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு நகர செயலாளர் தாஜூதீன் தலைமையில் அந்த கட்சியினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அவர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் பற்றியும், நடிகர் கமல்ஹாசன் பற்றியும் உண்மைக்கு புறம்பான தகவலை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் கமல்ஹாசன் கன்னடர். கர்நாடகாவில் உள்ள ஹாசன் என்ற ஊர் தான் அவரின் பூர்வீகம் என்று பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாத தவறான கருத்துக்களை முன்வைத்து கமல்ஹாசனின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர் சாட்டை துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே யூடியூப் சேனலில் இருந்து அதனை அகற்றி சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் பேசிய சாட்டை துரைமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
- யானை நிற்பதை பார்த்ததும் சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார்.
- இறந்த முதியவரின் உடலை பார்வையிட்டு, யானை மிதித்து கொன்றதை உறுதி செய்தனர்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடவேடம்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60).
இவர் கடந்த 1 அரை வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் வடிவேலாம்பாளையம் பகுதியில் தங்கி மோளப்பாளையம், வடிவேலம்பாளையம் பகுதியில் தோட்ட வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக மோளப்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு புதர் மறைவில் யானை ஒன்று மறைந்திருந்தது.
யானை நிற்பதை பார்த்ததும் சண்முகசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் யானையிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் யானை விடாது துரத்தி வந்தது.
சில தூரம் சென்ற நிலையில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து யானை சண்முகசுந்தரத்தை தாக்கியது. இதில் அவருக்கு தலை, கை, கால் என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரின மீது ஏறியும் மிதித்து விட்டு சென்றது.
இதில் சண்முகசுந்தரம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
யானை தாக்கி முதியவர் இறந்த தகவல் அறிந்ததும் மதுக்கரை வனவர் ஐயப்பன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் இறந்த முதியவரின் உடலை பார்வையிட்டு, யானை மிதித்து கொன்றதை உறுதி செய்தனர். தொடர்ந்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து இறந்த சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. ஊருக்குள் புகும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தற்போது யானை தாக்கி ஒருவர் இறந்துள்ளது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கி உள்ளது. எனவே இந்த பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- எளிய முறையில் மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள் சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
- மன ஆற்றலையும் சமநிலையையும் மேம்படுத்தும் உணவை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
உலக மனநல தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், "பல்வேறு விதமான மனநல பாதிப்புகளிலிருந்து விடுபடவும், ஆரோக்கியமாக வாழவும் இயற்கையுடன் தொடர்பிலிருப்பது " என சத்குரு கூறியுள்ளார்.
எளிய முறையில் மனநலனை மேம்படுத்தி கொள்வதற்கு சத்குரு அவர்கள் சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "இன்றைய உலகில் செயலுக்கும் புத்திக்கும் ஒதுக்கப்பட்டுள்ள சக்தி பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் போவதால், எல்லாவிதமான மன நோய்களும் மனச்சோர்வும் ஏற்படுகிறது. ஏனென்றால் உணர்ச்சியளவில் போதுமான அளவு தங்களை வெளிப்படுத்தாமலும் உடலை வருத்தாமலும் இருந்தால் மனச்சோர்வில் ஆழ்வது இயல்பானது. எனவே, மனநோய்களால் அவதிப்படும் குழந்தைகளை விளையாட்டிலும் இசையிலும் ஈடுபடுத்த வேண்டும்.
கணினி, மொபைல் உள்ளிட்ட சாதனங்களால் ஏற்படக்கூடிய எந்திரத்தனமான வாழ்கையில் இருந்து விடுபட்டு இயற்கையுடன் தொடர்பில் இருக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நீர், ஒளி, மண் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் உங்களுடைய மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை சுலபமாக மேம்படுத்த முடியும்.
நீங்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்ப உங்கள் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். மன ஆற்றலையும் சமநிலையையும் மேம்படுத்தும் உணவை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, காபி குடிப்பதை குறைத்துக் கொண்டு வெள்ளை பூசணி ஜூஸ், தேன் போன்ற நேர்மறை பிராண சக்தி கொண்ட உணவை அதிகம் எடுத்து கொள்ளுங்கள். பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்கும் வழிமுறையை பின்பற்றுங்கள்" என சத்குரு கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக "X" தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் "நீங்கள் உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக மற்றும் ஆற்றல் ரீதியாக சமநிலையுடன் இருந்தால் உங்கள் உட்சபட்ச திறனுடன் உங்கள் வாழ்கையை நடத்துவீர்கள்.
சமநிலை தான் மிக முக்கிய அம்சம். சமநிலையற்ற தன்மை என்பது மோசமான ஆரோக்கியத்தை குறிக்கும். சமநிலை என்பது தான் ஆரோக்கியம். உடல்ரீதியாக, மன ரீதியாக மற்றும் உணர்வு ரீதியாக நீங்கள் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என்றால், சமநிலை அவசியம்." என கூறியுள்ளார்.
- மத்திய அரசின் அதிகாரிகள் உயர்மட்டக்குழு வருகிற 13-ந் தேதி கோவை வருகிறது.
- விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளின் கோரிக்கைகள், பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசின் அதிகாரிகள் உயர்மட்டக்குழு வருகிற 13-ந் தேதி கோவை வருகிறது.
கோவையில் கடந்த வாரம் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதியளித்தபடி இந்த குழு தேங்காய், கொப்பரை விலை, தென்னை நார் தொழில் தொடர்பாக கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு நேரில் வருகை தருவர். விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.
- தண்ணீர் தொட்டியை தொண்டாமுத்தூர் செயல் அலுவலர் பழனியப்பன் கள ஆய்வு செய்தார்.
வடவள்ளி,
தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தொண்டாமுத்தூர் அனைத்து வார்டுகளிலும் டெங்கு தடுப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று பணி மேற்கொண்டு வருகின்றனர்.
தேங்கி நிற்கும் தண்ணீர் தொட்டிகள், டயர்கள், போன்றவற்றில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா என்பதை கண்டுபிடித்து உடனடியாக அதை அப்புறப்படுத்தி மருந்து தெளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 7-வது வார்டு குபேரபுரி பகுதியில் ஒரு வீட்டில் தண்ணீர் தொட்டியை தொண்டாமுத்தூர் செயல் அலுவலர் பழனியப்பன் கள ஆய்வு செய்தார்.
- பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சார்ந்த இந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கோவை,
கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்தவர் வழக்கம் போல தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப சென்றார்.
அப்போது அந்த தொட்டிக்குள் ஒரு பாம்பு பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே அவர் உடனடியாக வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவரை தொடர்புகொண்டார்.
அவரும் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்து உள்ளார். அப்போது வனப் பகுதியில் அரிதாக உலா வரும் வெள்ளை நாகம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சார்ந்த இந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதேபோல வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது.
மழைக் காலம் என்பதால் இனி பாம்புகள் பொது இடங்களில் உலாவும். பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
- காவல்துறை சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 110 கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
- பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை,
கோவை மாநகரில் கைதிகளை நீதிமன்றம், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் ஆயுதப்படை போலீசாருக்கு பாடி ஓன் காமிரா என்ற தோள்பட்டை காமிராக்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. அப்போது போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், 24 போலீசாருக்கு தோள்பட்டை காமிராக்களை வழங்கினார்.
தொடர்ந்து அதிநவீன காமிராக்கள் பொருத்திய வாகனங்கள் அணிவகுப்பு நடத்த ப்பட்டது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
தொடர்ந்து பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், குற்றச ம்பவங்களில் ஈடுபட்டு சிறை செல்லும் கைதிகளை நீதிமன்றத்திற்கும், சிறைக்கும் அழைத்துச் செல்லும்போது அவர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கின்றன. மேலும் வழிக்காவலில் தப்ப முயலும் நிகழ்வுகளும் நடக்கின்றன. எனவே வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு தோள்பட்டை கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போல கைதிகளை அழைத்துச் செல்லும் வாகனத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
சிறை கைதிகளை அழைத்துச் செல்லும் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகள் ஆகிய வற்றை நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கேமராக்கள் வழங்கப்பட்டு உள்ளன.
கோவை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் 26 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. சாலைகளில் மட்டும் 15 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் காவல்துறை சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மேலும் 110 கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது.
சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் மூலம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு, பல கி.மீ. தொலைவு வரை சென்று அவர்களை கைது செய்து வருகிறோம். மாநகரில் கஞ்சா புழக்கம் பெரிய அளவில் இல்லை. ஆனாலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகரில் உள்ள போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்ப தால் ஆரஞ்சு அலார்ட் ஒத்திகை வாகன சோதனை நடைபெற்றது. திடீரென பெரிய அளவில் கொள்ளை மற்றும் குற்றச்சம்பவம் நடைபெறும்போது உடனடியாக மாநகர் முழுவ தும் வாகன சோதனையை துரிதப்படுத்துவதற்காக குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டுஉள்ளது.
மாநகரில் இருசக்கர வாகன திருட்டு குறைந்து உள்ளது. மேலும் பழைய குற்றவாளிகள் கண்காணிப்பில் உள்ளனர். இருசக்கர வாகன திருட்டில் சமீபகாலமாக புதிய குற்றவாளிகள் இறங்கி உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவ மழையால் பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளை துரிதபடுத்த 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 60 பேருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மேலும் பண்டிகை காலங்களில் நகரின் முக்கிய பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூடிய விரைவில் போலீசாருக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான காவலர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர் என கூறினார்.






