என் மலர்
கோயம்புத்தூர்
- காட்டுப்பன்றி பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கோஷம்
- வனவிலங்கு தாக்கி உயிரிழக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர் வேலுசாமி, மாவட்ட தலைவர் காளையனூர் மனோகரன், மாவட்ட செயலாளர் நவீன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-
காட்டு பன்றிகளின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகள், விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டு கொல்ல அரசு அனுமதிக்க வேண்டும். குறிப்பாக கிராம பகுதிகளில் இதுதொடர்பாக வைக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை சிலர் அப்புறப்படுத்தி உள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு காட்டுப்பன்றி பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சியினர் தீர்வுகான வேண்டும். இல்லையெனில் விவசாயிகளிடம் ஒட்டு கேட்காமல் காட்டுப்பன்றிகள், மயில், மான்களிடம் சென்று ஓட்டு கேட்க கொள்ளுங்கள்.
காட்டுப்பன்றிகள் உள்பட வனவிலங்குகள் தாக்கி மனிதர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும். வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றவாறு அரசு பணி வழங்க வேண்டும் .
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதில் அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணிச் தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.
- நடைபாதை பாலத்தில் ஏறி இறங்கி சென்று கியூ வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து வந்த பயணிகள் மகிழ்ச்சி
- தானியங்கி எந்திரத்தில் டிக்கெட் எடுத்து ரெயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சென்னை செல்லக்கூடிய நீலகிரி மற்றும் சேரன் எக்ஸ்பிரஸ் ெரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒரு முறை திருநெல்வேலிக்கும் சிறப்பு ெரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து தினமும் 3 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பயணிகள் கோவை மட்டுமின்றி, பிற நகரங்களுக்கும் சென்று வருகின்றனர்.
குறிப்பாக மேட்டுப்பாளையம்-கோவை இடையான ெரயிலில் அன்றாடம் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் சீசன் டிக்கெட் எடுத்துள்ளனர்.
சீசன் டிக்கெட் எடுக்காதவர்கள், ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில், டிக்கெட்டை வாங்கிக்கொண்டு மீண்டும் நடைபாதை பாலம் வழியாக ஏரி இறங்கிதான் நடைமேடைக்கு வர வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதனால் முதியோர்கள், குழந்தைகள், பெண்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். எனவே ரெயில் நிலையத்தில், தானியங்கி டிக்ெகட் எந்திரம் நிறுவ வேண்டும் என மேட்டுப்பாளையம் ெரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், ெரயில் நிலைய பயணிகள் சங்க நிர்வாகிகள், பயணிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவர்களின் கோரிக் கையை ஏற்று, மேட்டுப்பாளையம் ரெயில் நிலைய நடைமேடையில் இருப்பு பாதை போலீஸ் நிலையத்துக்கு அருகே தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் நிறுவப்பட்டது.
இந்த எந்திரம் நேற்று முதல் பயன்பாட்டிற்க வந்தது. அதில் பயணிகள் டிக்கெட் எடுத்து ரெயிலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
நீண்ட நாட்களாக நடைபாதை பாலம் ஏறி, இறங்கி வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து வந்த பயணிகள் தற்போது நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள எந்திரத்தில் டிக்கெட் எடுத்து சென்று வருகின்றனர். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரத்தில், க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தும் டிக்கெட்டை பெற முடியும். இதனால் ெரயில் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள்.
- பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து வழிபாடு
- காலை 11 மணிக்கு மறுபூஜை மற்றும் மஞ்சல் நீராட்டு விழா நடந்தது
மேட்டுப்பாளையம்,
கோவை அன்னூர் அருகே அ.குமாரபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு க்கான திருவிழா கடந்த 26-ந் தேதி பூச்சாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.
அதன்பின் 27-ந் தேதி அலங்கார பூஜைகளும், அதனை தொடர்ந்து தண்டுமாரியம்மனுக்கு தினசரி சிறப்பு பூஜைகளும் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் வாசுதேவன் குழுவினரின் பஜனை நிகழ்சியும், சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று காலை 6 மணியளவில் பொங்கல் வைக்கும் நிகழ்வும், 10 மணிக்கு மாவிளக்கு எடு த்தல், மதியம் 12 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை, மாலை 3 மணிக்கு அலகு குத்தி தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மறுபூஜை மற்றும் மஞ்சல் நீராட்டு விழா நடக்கிறது. இந்நிகழ்சியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்த னர்.
- தந்தை ரவி மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்
- 3 பேரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை திம்மம்பாளையம்புதூரை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு 22 மற்றும் 19 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராகுல்(22). இவரும், பெண்ணின் 2-வது மகளும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அந்த பெண், தனது மகளை ராகுலுக்கு திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோரிடம் பேச முடிவு செய்தார். அதன்படி தனது மகள்களை அழைத்து கொண்டு, ராகுலின் வீட்டி ற்கு சென்று மாப்பிள்ளை கேட்டார்.
அப்போது ராகுலின் தந்தை ரவி, மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த பெண் மற்றும் அவரது மகள்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராகுலின் தந்தை ரவி மற்றும் உறவினர்கள் உதயகுமார்(21), வினு(21) உள்பட 4 பேர் சேர்ந்து, அந்த பெண்ணையும், அவரது மகள்களையும் தாக்கினர்.
இதில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவர்களை மீட்டு காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து அந்த பெண் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ராகுல், ராகுலின் தந்தை ரவி, உறவினர்கள் உதயகுமார், வினு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து ரவி, உதயகுமார், ராகுல் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பியோடிய வினுவை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வேலை பார்த்த வீட்டில் துணிகர கைவரிசை
- கணவவருடன் சேர்ந்து வின்னாஸ் டபி வீட்டில் திருடியதாக ஒப்புக் கொண்டார்
கோவை,
கோவை காந்திபுரம் 2-வது வீதியைச் சேர்ந்தவர் வின்னாஸ்டபி (வயது 34). இவர் சம்பவத்தன்று வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரம், தங்கச்சங்கிலி ஆகியவை மாயமானது தெரியவந்தது.
இதுதொடர்பாக வின்னாஸ்டபி, ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக வின்னாஸ்டபி வீட்டில் வேலை பார்த்த பி.என்.புதூர் அடுத்த லிங்கனூரை சேர்ந்த மேகலா என்ற பரிமளாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது முன்னுக்கு பின் முரணாக பேசிய மேகலா ஒருகட்டத்தில் கணவர் ஸ்ரீஹரி என்பவருடன் சேர்ந்து வின்னாஸ் டபி வீட்டில் வைர மோதிரம், தங்கச்சங்கிலி திருடியதாக ஒப்புக் கொண்டார்.
அவர்களிடம் தங்க நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து வின்னாஸ்டபி வீட்டில் தங்க நகைகள் திருடியதாக மேகலா, ஸ்ரீஹரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பர்னீச்சர் கடையை விரிவுபடுத்துவதற்காக பணம் வாங்கி ஏமாற்றிய வியாபாரி
- கேரளாவில் பதுங்கியவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம், கார்டன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தராஜன் (வயது 59). தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில் விவேகானந்தராஜன் பீளமேடு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் கேரளாவில் பர்னீச்சர் கடை நடத்தி வருவதாகவும், தொழிலை விரிவுபடுத்துவதற்காக பணம் தேவைப்படுகிறது. நீங்கள் தரும்பட்சத்தில் வட்டியுடன் அசலை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தி விடுவதாக வாக்குறுதி அளித்தார். இதனை நம்பிய நான் அவருக்கு ரூ.54.07 லட்சம் கொடுத்தேன்.
என்னிடம் பணத்தை பெற்றுக் கொண்ட சசிகுமார், குறித்த காலத்துக்குள் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. எனவே நான் அவரிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். இதற்கு அவர் மறுத்து வருகிறார். எனவே போலீசார் இதுதொ டர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து கேரளாவில் பதுங்கியிருந்த சசிக்குமாரை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். இதில் அவர் விவேகானந்தராஜனிடம் ரூ.54 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி மோசடி செய்தது தெரிய வந்தது.
பின்னர் சசிக்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- காவேரி கூக்குரல் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தமிழகத்தின் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல் இயக்கம் 'கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!' என்ற கருத்தரங்கை வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள சந்தன மரப் பண்ணையில் நடத்த உள்ளது. இக்கருத்தரங்கு, 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பெரிய அளவில் நடக்க உள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி நிலத்தல் 50 சதவீத நிலம் மானாவாரி நிலமாகவே உள்ளது. இந்நிலங்களில் டிம்பர் மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகள் நல்ல வருமானம் பெற முடியும். சந்தனம், செம்மரம், கொடுக்காபுளி, இலுப்பை, வேம்பு, நாட்டு வாகை, நாவல் போன்றவை மானாவாரி வளர்ப்புக்கு உகந்த மரங்களாகும். குறிப்பாக வறட்சியான நிலங்களில் சந்தனம் மற்றும் செம்மரம் நன்றாக வளர்கிறது, இம்மரங்களுக்கு அதிக நீர் தேவையில்லை. இம்மரங்கள் அதிக விலை மதிப்புடையவை என்பதால் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் நல்ல வருமானம் நிச்சயம்.
கருத்தரங்கில் சந்தன மர சாகுபடி தொழில் நுட்பங்கள், விற்பனை வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வனவியல் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் விளக்க உள்ளார்கள். பெங்களூரு மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுந்தர்ராஜ் (ஓய்வு), விஞ்ஞானி சௌந்தரராஜன், மானாவாரி நிலத்தில் செம்மரம் சாகுபடி செய்துள்ள ஆசிரியர் ராமன், செம்மரச் செம்மல் கணேசன் போன்றோர் பங்கேற்க உள்ளார்கள். மேலும், மரம் சார்ந்த விவசாயம் குறித்து காவேரி கூக்குரல் வல்லுநர்கள் விளக்குவார்கள்.
விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றம், சுற்றுச்சூழல், நதிகளின் நீர் ஆதாரம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு மரம் சார்ந்த விவசாயம் ஒரு தீர்வாக உள்ளதால் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நட விவசாயிகளை ஊக்குவிக்கிறது. இதுவரை ஈஷா ஏறக்குறைய 9 கோடி மரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது. இந்த ஆண்டு காவேரி கூக்குரல் மூலம் தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 46 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் பலா சாகுபடி நுட்பங்கள், சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி போன்ற பயிற்சிகளையும் நடத்தியது.
சந்தன சாகுபடி பயிற்சி திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள துரைசாமி அவர்களின் சந்தனமரப் பண்ணையில் நடைபெற உள்ளது. மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 94425 90079, 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.
காவேரி கூக்குரல் குறித்து கூடுதல் தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.
- மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு துப்பாக்கிய ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் கேரளாவில் இருந்து 11 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், யாரும் உள்ளே வராதபடி வீட்டின் நுழைவு வாயிலையும், வீட்டில் உள்ள கதவுகளையும் மூடி விட்டனர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்டனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்று, அங்குள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனையிட்டனர். ஒவ்வொரு அறையையும் சில மணி நேரங்களில் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து சோதனை செய்தனர். அங்கிருந்த ஆவணங்களையும் எடுத்து கொண்டனர்.
மார்ட்டின் வீட்டின் அருகே அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்திற்குள்ளும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
கோவையில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு, மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு துப்பாக்கிய ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் ஏற்கனவே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு இருந்தனர். அப்போது சட்டவிரோத பணிபரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கடந்த மே மாதம் அவரது வீடு, உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
கோவை,
கோவை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக இன்று கோர்ட்டு வளாகத்துக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கோவை கோர்ட்டுகளில் போதிய ஆட்கள் இல்லாமல், போதிய ஊதிய முறைகள் இல்லாமல் இருப்பதை முறைபடுத்த வேண்டும். பொது மக்களை பாதிக்கின்ற ஈ-பைலிங் முறையை ஏற்க மாட்டோம் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கூட்டமாக சென்றால் லோன் தரமாட்டார்கள் என கூறி ஏமாற்றி மோசடி
- காரில் தப்பிய கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
பீளமேடு,
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த 51 வயதுடைய நபர்.
இவர் கோவையில் தங்கி மின்சார வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று, மின்வா ரிய ஊழியர், கோவை விமான நிலையம் அருகே உள்ள வங்கி முன்பு தனது நண்பர்கள் 2 பேருடன் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, மின்வாரிய ஊழியர், ஒரு விளம்பரத்தை பார்த்து, அதில் உள்ள எண்ணுக்கு தொடர்பு ெகாண்டார். அவர்களிடம் எனக்கு ரூ.40 லட்சம் கடன் வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள், உங்களுக்கு கடன் வேண்டும் என்றால், நீங்கள் முன்பணமாக, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். மேலும் அந்த பணத்தை நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பெற்றுக்கொள்வோம். அதன்பின்னர் உங்கள் வங்கி கணக்கில் ரூ.40 லட்சம் செலுத்தப்படும் என்றனர்.
இதனை உண்மை என நம்பிய 3 பேரும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துடன் கோவையில் உள்ள ஒரு வங்கி முன்பு காத்திருந்தனர். அப்போது அவர்களின் அருகே ஒரு கார் வந்தது.
அதில் இருந்து 4 பேர் திபுதிபுவென இறங்கினர். அவர்கள், நேராக லட்சுமணிடம் சென்று, நீங்கள் தானே போன் செய்து, லோன் வேண்டும் என கேட்டது என்றனர். அதற்கு அவரும் ஆமாம் என்று தெரிவிக்க, நாங்கள் கூறிய பணத்தை எடுத்து வந்தீர்களா என அந்த கும்பல் கேட்டனர்.
அதற்கு இவர்கள் தாங்கள் வைத்திருந்த பணப்பெட்டியை திறந்து காண்பித்தனர். அதில் பணம் இருப்பதை பார்த்த அந்த கும்பல், காரில் ஏறுங்கள், உங்களை வங்கி அழைத்து சென்று பணத்தை வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர்.
இதனை உண்மை என நம்பி 3 பேரும் அவர்களுடன் காரில் ஏறினர். சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், கூட்டமாக சென்றால் லோன் தரமாட்டார்கள்.
நீங்கள் இங்கு காத்திருங்கள். நாங்கள் சென்று வாங்கி வருகிறோம் என தெரிவித்தனர். அதற்கு இவர்கள் நாங்களும் வருகிறோம் என்றனர். இதனால் அந்த கும்பல் வலுக்கட்டாயமாக 3 பேரையும் காரில் இருந்து கீழே இறக்கி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இவர்களும் பணம் வந்துவிடும் என சில மணி நேரம் அங்கு காத்திருந்தனர். ஆனால் வரவே இல்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும், லட்சுமணன் பீளமேடு போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடன் வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- போலீஸ் நிலையத்தில் 2-வது நாளாக மாஜிஸ்திரேட்டு ஆய்வு
- முதலுதவி சிகிச்சை அளித்த பூலுவப்பட்டி சுகாதார நிலையத்திலும் விசாரணை
வடவள்ளி,
திருச்செந்தூரில் குழந்தையை கடத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாண்டியன் (வயது 45) மற்றும் அவரது மனைவி திலகவதி (40) ஆகியோரை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர்.
ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்த போது, கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற திலகவதி அங்கு மயக்கம் அடைந்து விழுந்து உயிரிழந்தார்.
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட பெண் கைதி உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நீதிமன்ற விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதன்ஒருபகுதியாக கோவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்தோஷ்குமார் நேற்று அரசு மருத்துவமனை மற்றும் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று திலகவதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனை அறிக்கையையும் வாங்கி ஆய்வுசெய்து பார்த்தார்.
இன்று 2-வது நாளாக கோவை மாஜிஸ்திரேட்டு நீதிபதி சந்தோஷ்குமார் ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது இறந்த திலகவதி அழைத்து வரப்பட்டபோது பணியில் இருந்த போலீசாரிடம் விசாரித்தார்.
அவர் அழைத்து வரப்பட்ட நேரம், விசாரணையின் போது அவர் எப்படி இருந்தார். ஏதாவது மாற்றங்கள் காணப்பட்டா? அவரிடம் என்னென்ன உடமைகள் இருந்தன என்பது குறித்தும் விசாரித்தார்.
ஆலாந்துறை காவல் நிலையத்தில் திலகவதி மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு கொண்டு வரப்படும்போது திலகவதி சுயநினைவுடன் இருந்தாரா அவருக்கு எத்தகைய சிகிச்சைகள் வழங்கப்பட்டன என்பது குறித்தும் கேட்ட றிந்து விசாரணை மேற்கொ ண்டனர்.
- தீயணைப்புத் துறையினர் அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
- சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார ப்பகுதிகளான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் மோத்தேபாளையம் பஸ்நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த சுமார் 80 அடி உயரமுள்ள ராட்சத மரம் சாய்ந்தது. அப்போது அருகில் இருந்த மற்றொரு மரமும் சேர்ந்து சாய்ந்தது.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் அந்த சமயம் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனையடுத்து அவ்வழியே சென்றவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் ஜேசிபி எந்திரம் மற்றும் ராட்சத மரங்களை அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரம் வெட்டி அகற்றப்பட்டது.
சாலையில் விழுந்த மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்ட பின்னர் மேட்டுப்பாளையம் போலீசாரால் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் சாலையின் நடுவே விழுந்த ராட்சத மரத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






