என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூர் பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- காட்டுப்பன்றி பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கோஷம்
- வனவிலங்கு தாக்கி உயிரிழக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அன்னூர் பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர் வேலுசாமி, மாவட்ட தலைவர் காளையனூர் மனோகரன், மாவட்ட செயலாளர் நவீன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-
காட்டு பன்றிகளின் இனப்பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
எனவே விவசாயிகள், விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டு கொல்ல அரசு அனுமதிக்க வேண்டும். குறிப்பாக கிராம பகுதிகளில் இதுதொடர்பாக வைக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை சிலர் அப்புறப்படுத்தி உள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு காட்டுப்பன்றி பிரச்சினைகளுக்கு அரசியல் கட்சியினர் தீர்வுகான வேண்டும். இல்லையெனில் விவசாயிகளிடம் ஒட்டு கேட்காமல் காட்டுப்பன்றிகள், மயில், மான்களிடம் சென்று ஓட்டு கேட்க கொள்ளுங்கள்.
காட்டுப்பன்றிகள் உள்பட வனவிலங்குகள் தாக்கி மனிதர்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளை அரசே ஏற்க வேண்டும். வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றவாறு அரசு பணி வழங்க வேண்டும் .
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதில் அன்னூர், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணிச் தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.






