என் மலர்
கோயம்புத்தூர்
- போலீசார் தொட்டியில் கிடந்தது எலும்புதானா ? அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாரிகள் விரைந்து கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்டது காளிபாளையம் கிராமம்.
இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து காளிபாளையம் கிராமம் முழுவதற்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல்நிலைதொட்டி பல நாட்களாகவே மூடி இல்லாமல் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருக்கிறது.
நேற்று காலை வெள்ளமடை ஊராட்சி சார்பில் பணியாளர்கள் சிலர் மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்வதற்காக வந்தனர்.அவர்கள் தொட்டியின் மீது ஏறி உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.அப்போது தொட்டிக்குள் எலும்புதுண்டுகள் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியாகினர்.
உடனடியாக சம்பவம் குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா, ஊராட்சித்தலைவர் பிரபாகரன் உட்பட வார்டு உறுப்பினர்கள் விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் தொட்டியை பார்த்தபோது அங்கிருந்த எலும்பு துண்டுகள் மாயமாகி விட்டன. அக்கம்பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
நாய்கள் அதனை எடுத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. இருந்தபோதிலும் அதனை தேடும் பணி நடக்கிறது.
இந்த தகவல் அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் நேரில் வந்து விசாரணை செய்தார். தொடர்ந்து மேல்நிலை தொட்டிக்கு மூடி போட ஏற்பாடு செய்தார்.
இதனை தொடர்ந்து வட்டார சுகாதார ஆய்வாளர் தலைமையிலான சுகாதார குழுவினர் வந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பிளிசிங் பவுடர் அடித்தனர். மேலும் தொட்டியில் கிடந்தது எலும்புதானா ? அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் குடிநீர் தொட்டியின் முன்பு திரண்டனர். பின்னர் தொட்டியில் கிடந்த எலும்பை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்கு மார், பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொட்டியில் கிடந்த எலும்பு எப்படி மாயமானது என்பது தெரிய வேண்டும். அதனை உடனே கண்டு பிடித்து தர வேண்டும். அதுவரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
- நடைபயிற்சிக்கு சென்ற போது கொள்ளையர்கள் துணிகரம்.
- போலீசார் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை,
கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 32). இவர் துடியலூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று சுரேந்திரன் தனது தந்தைக்கு பிறந்த நாள் என்பதால் அவருக்கு பரிசளிப்பதற்காக நகை கடைக்கு சென்று தங்க மோதிரம் வாங்கினார். பின்னர் அந்த மோதிரத்தை பூஜை அறையில் வைத்து இருந்தார்.
அதிகாலையில் சுரேந்திரன் நடைபயிற்சிக்காக சென்றார். அப்போது வீட்டின் மேல்மாடியில் உள்ள கதவை பூட்டாமல் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர் யாரோ மேல்மாடியின் வழியாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த மாலை, ஆரம், கம்மல், செயின், கைசெயின், மோதிரம், வளையல், நெக்லஸ் உள்பட 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
நடைபயிற்சிக்கு சென்று விட்டு திரும்பிய சுரேந்திரன் தந்தை பரிசளிப்பதற்காக பூஜை அறையில் வைத்து இருந்த மோதிரத்தை பார்த்த போது அதனை காணவில்லை. இதனையடுத்து அவர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 70 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த சுரேந்திரன் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்வாரிய உதவி பொறியாளர் வீட்டில் 70 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.
- இது குறித்து 4 மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
- மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தங்கம் தியேட்டர், கோட்டாம்பட்டி பிரிவு, வக்கம்பாளையம், கருப்பம்பாளையம், சிங்காநல்லூர், சீனிவாசபுரம், குஞ்சுபாளையம் வழியாக பொள்ளாச்சிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் ஆனைமலையை சேர்ந்த 57 வயது நபர் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
பொள்ளாச்சி சிங்காநல்லூர் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் அந்த பஸ்சில் தினமும் பள்ளிக்கு சென்று வந்தனர்.மாணவிகள் பயணிக்கும் போது கண்டக்டர், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து 4 மாணவிகள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று பஸ் ஜமீன்கொட்டாம் பட்டி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் கோட்டூர் போலீசர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து போலீசார் சிறை பிடிக்கப்பட்ட பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். இது குறித்து போலீசார் மாணவிகள் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
- சாலை திட்டம் முடிவடையும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வது எளிதாகிவிடும்.
கிணத்துக்கடவு,
கோவை கிணத்துக்கடவு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது கிணத்துக்கடவு நகரை கடப்பதற்கு அரசம்பாளையம் பிரிவில் இருந்து 2.5 கி.மீ தூரத்திற்கு கோதவாடி வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
கிணத்துக்கடவு நகரை சுற்றியுள்ள அண்ணா நகர், பகவதிபாளையம், கிரீன் கார்டன், செம்மொழி நகர் அண்ணாநகர் உட்பட பல பகுதிகள் சுமார் 2 கிமீ தூரம் வரை சென்று திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை மற்றும் தனியார் பள்ளி இருக்கும் இடத்தில் ரோடு மிக குறுகலாக உள்ளது. ரோட்டை அகலப்படுத்தும் பணி குறித்து நடவடிக்கைகள் எடுக்க கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் தலைமையில் கவுன்சிலர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர்.
இந்தப் பகுதியில் ரோடு குறுகலாக உள்ளதாலும் பள்ளிகள் மற்றும் சந்தைகள் இருப்பதாலும் போக்குவரத்து அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் ஒரு வழிபாதையாக இந்த ரோட்டை பயன்படுத்துவதால் பல நேரங்களில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி நிற்பதும் அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் மற்றும் கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பதால் அடிக்கடி ரோட்டில் ஏற்படும் குழிகளால் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் முழுவதும் சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சாலை விரிவாக்கம் செய்யக்கூடிய இடத்தினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாருக்கு நேரில் சென்று காண்பித்தார்.
ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் செந்தில்குமார், வருவாய் துறை, பேரூராட்சி நிர்வாகத்தினர் உட்பட அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் முடிவில் தினசரி காய்கறி சந்தை அருகே உள்ள சர்வீஸ் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் மூலம் சர்வீஸ் சாலை இருவழி பாதையாக மாற்றுவதற்கு டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிணத்துகடவு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வீஸ் சாலை அகலப்படுத்தும் பணி பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் தீவிர முயற்சியால் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த சாலை திட்டம் முடிவடையும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வது எளிதாகிவிடும். மேலும் தனியார் பள்ளி மற்றும் காய்கறி சந்தை அருகே போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படும். எனவே விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி தலைவர் கதிர்வேல் கேட்டுக் கொண்டார்.
- போக்குவரத்து அதிகாரிகள் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என அதிகாரிகள் எச்சரிக்ைக விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை மாநகர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஒரு சில தனியார் பஸ்கள், அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதனால் அந்த பஸ்சில் பயணம் செய்யும் பொதுமக்கள் மட்டுமின்றி சாலையில் செல்லும் பிற வாகண ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு அதிகமான புகார்கள வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து இன்று மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேஷன் தலைமையில் வட்டார போக்குவ ரத்து ஆய்வாளர் சிவக்குமார்,அரசு போக்குவரத்து கழக மேலாளர் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து மேட்டுப்பாளையம் கோவை சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ், அரசு பஸ், பள்ளி, கல்லூரி பஸ்கள் என அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ஒரு சில பஸ்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் அதிக அளவு ஒலி எழுப்ப கூடிய ஏர் ஹாரன்களை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது மாதிரியான ஹாரன்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் இருக்க மின் இணைப்பை துண்டித்தனர்
- சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் ஆவாரங்காட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை சம்பவத்தன்று இரவு பூசாரி வழக்கம் போல பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்ததால் அதில் காட்சிகள் பதிவாகாமல் இருக்க மின் இணைப்பை துண்டித்தனர்.
இதனை தொடர்ந்து மர்மநபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ,30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியலில் உள்ள பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் கோவிலில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் போலீசில் சிக்காமல் இருக்க மின் இணைப்பை துண்டித்து விட்டு உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களுக்கு முன் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது.
- கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்திருந்த இல்லத்தரசிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.
கோவை,
கோவையின் புறநகர் பகுதிகளில் தக்காளி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவற்றை வியாபாரிகள் சந்தைக்கு கொண்டுவந்து ஏலமுறையில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் வெளி மாவட்டம்-மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கோவை தியாகி குமரன் காய்-கனி சந்தையில் தற்போது காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளன. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது.
இங்கு கடந்த சில நாட்களுக்கு சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது. அது தற்போது கிலோவுக்கு ரூ.80 ஆக அதிகரித்து உள்ளது. தரத்துக்கு ஏற்ப விலையும் மாறுபடுகிறது. இதனால் சில்லரை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 வரை விற்பனையாகிறது.மேலும் காய்கறிகளின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்திருந்த இல்லத்தரசிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.
கோவை தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை): தக்காளி- ரூ.15 (10), வெண்டை-ரூ.40 (30), கத்தரிக்காய்-ரூ.30, முருங்கைக்காய்-ரூ.90 (60), சின்னவெங்காயம்-ரூ.80 (40), பெரிய வெங்காயம்-ரூ.30, உருளைகிழங்கு-ரூ.25, சேனை-ரூ.60, சிறுகி ழங்கு-ரூ.80, இஞ்சி-ரூ.100, சேம்பு-ரூ.70, காளிபிளவர்-ரூ.35 (30), பீன்ஸ்-ரூ.60 (80), எலுமிச்சை-ரூ.80 (100), புடலை-ரூ.30 (40), பீர்க்கங்காய்-ரூ.40 (50), சீனிஅவரை-ரூ.30, அவரை-ரூ.40, பூசணி-ரூ.15.
- லூர்துராஜ் குழந்தை தன்விகாவின் மரணத்தில் மனைவி ரஞ்சிதம் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார்.
- சோதனையில் குழந்தையின் உடலில் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் எந்த காயங்களும் இல்லை என்பது தெரிய வந்தது.
கோவை,
கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள நேதாஜிபுரத்தை சேர்ந்தவர் லூர்துராஜ். இவர் எட்டிமடை பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார். இந்தநிலையில் இவர்களுக்கு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தன்விகா என பெயர் வைத்தனர்.
கடந்த 15-ந் தேதி தன்விகா தனது 1½ வயது குழந்தையுடன் தொண்டாமுத்தூர் களிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.
அங்கு இருந்த போது 17-ந் தேதி தன்விகாவிற்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ரஞ்சிதம் தனது குழந்தையை கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு இருந்தபடி அவரது கணவரை தொடர்பு கொண்ட ரஞ்சிதம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் அனுமதித்து இருப்பதாகவும் கூறினார். அன்று இரவு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது.
இதனையடுத்து ரஞ்சிதம் குழந்தையை தாய் முருகம்மாள் மற்றும் அவரது தம்பி ஆகியோருடன் சேர்ந்து குழந்தையின் உடலை கணவர் வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர் குழந்தையின் உடலை கே.ஜி.சாவடி நேதாஜிபுரத்தில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.
இந்தநிலையில் லூர்துராஜ் குழந்தை தன்விகாவின் மரணத்தில் மனைவி ரஞ்சிதம் மீது சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.
நேற்று போலீசார் நேதாஜிபுரத்தில் உள்ள மயானத்துக்கு சென்றனர். பின்னர் மதுக்கரை தாசில்தார் ராஜேஸ்குமார் முன்னிலையில் குழந்தையின் உடலை போலீசார் ேதாண்டி எடுத்து டாக்டர்கள் குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் குழந்தையின் உடலில் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் எந்த காயங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் குழந்தையின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சோதனை முடிவில் குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- தியாகராஜன் காரில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிலியூர் தோலம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 48). ரியல் எஸ்டேட் அதிபர். சம்பவத்தன்று இவர் தொழிலில் அவருக்கு கமிஷனாக வந்த ரூ.1.80 லட்சம் பணத்தை காரில் வைத்தார். பின்னர் மேட்டுப்பாளையம் செல்வபுரத்தில் உள்ள நண்பர் செந்தில்குமார் என்பவரது வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது தியாகராஜன் காரை நண்பரின் வீட்டு முன்பு நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அப்போது யாரோ மர்மநபர் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த ரூ.1.80 லட்சம் பணத்தை கொள்யைடித்து தப்பிச் சென்றனர்.
திரும்பி வந்து பார்த்த தியாகராஜன் காரில் இருந்த பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்த னர்.
இது குறித்து ரியஸ் எஸ்டேட் அதிபர் தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
- மாணவியின் தாயார் ரேவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- மாணவி தான் கடத்தப்படுகிறோம் என்று அறியாமல் ராமசாமியுடன் சென்று இருக்கிறார்.
பீளமேடு:
கோவை பீளமேடு கிரி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சேகர். சூலூர் அரசூரில் உள்ள கிரைண்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (43). கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களது மகள் பயோனியர் மில் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 11-ந் தேதி சேகர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் பேசினார். உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சேகரின் மகளை நான் கடத்தி வைத்துள்ளேன். ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால் குழந்தையை விட்டு விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் அந்த மாணவியிடமும் செல்போனை கொடுத்து மர்ம நபர் பேச செய்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், சேகரை அழைத்து விவரத்தை தெரிவித்தார். சேகர் வீட்டுக்கு தொடர்பு கொண்டு மகளை பற்றி விசாரித்தார். மாணவி பள்ளி முடிந்து வீட்டு வராதது தெரியவந்தது. இதனால் மாணவி கடத்தப்பட்ட விவரம் உறுதியானது.
இதுபற்றி மாணவியின் தாயார் ரேவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மர்ம நபர் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை கொண்டு விசாரித்தனர்.
அப்போது மாணவியை கடத்திய நபர் பஸ்சில் சூலூர் பாப்பம்பட்டியை கடந்து பஸ்சில் செல்வது தெரியவந்தது. இறுதியில் திண்டுக்கல்லில் அவர் மாணவியுடன் இறங்கிய விவரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல்லுக்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். மேலும் அவரை கடத்திய நபரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் வெள்ளலூர் முல்லை நகரைச் சேர்ந்த ராமசாமி (வயது 52) என்பது தெரியவந்தது. இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவரிடம் தான் மாணவியின் தாயார் ரேவதி கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பழி வாங்கும் எண்ணத்துடன் ராமசாமி, ரேவதியின் மகளை கடத்தி இருக்கிறார்.
பள்ளி முடிந்து திரும்பிய மாணவியை ராமசாமி சந்தித்துள்ளார். ஏற்கனவே அறிமுகம் ஆன நபர் என்பதால் மாணவியும் அவரிடம் பேசி உள்ளார். உனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லை, ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம், நீ என்னுடன் வா, அழைத்துச் செல்கிறேன் என்று கூறியே மாணவியை அழைத்துச் சென்று இருக்கிறார். ஆனால் மாணவி தான் கடத்தப்படுகிறோம் என்று அறியாமல் ராமசாமியுடன் சென்று இருக்கிறார்.
இருந்தாலும் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு ராமசாமியை பிடித்து விட்டனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
- வேறு ஒருவருடன் திருமணமான பிறகும் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார்
- வீட்டிற்கு வலுகட்டாயமாக அழைத்து சென்று அத்துமீறல்
கோவை,
கோவை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 11-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
அதே பகுதிைய சேர்ந்தவர் அவினாஷ்(வயது24). அருகேகருகே வசிப்பவர்கள் என்பதால் இவருக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்தனர்.
இந்த நிலையில் ஆட்டோ டிரைவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி விட்டது. திருமணத்திற்கு பிறகும் அவினாஷ் சிறுமியுடன் பழகி வந்தார்.
கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி சிறுமி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவினாஷ் சிறுமியை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு வலுகட்டாயமாக அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறு மியை பலாத்காரம் செய்து விட்டார். இது போன்று பலமுறை செய்துள்ளார். மேலும் இதனை யாரிடமாவது தெரிவிக்க கூடாது எனவும் மிரட்டினார்.
இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைய டுத்து பெற்றோர் அவரை ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்தனர். அப்போது அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதைகேட்டு அதிர்ச்சியான பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, தனக்கு நடந்தவற்றை தெரிவித்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அவினாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
- கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பலர் பங்கேற்பு
கோவை,
கோவை சிவானந்தா காலனி அருகே கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.கால்நடை ஆய்வாளர் உள்பட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.






