search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிநீர் தொட்டியில் கிடந்த எலும்புகள் மாயம்
    X

    பெரியநாயக்கன்பாளையம் அருகே குடிநீர் தொட்டியில் கிடந்த எலும்புகள் மாயம்

    • போலீசார் தொட்டியில் கிடந்தது எலும்புதானா ? அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதிகாரிகள் விரைந்து கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்டது காளிபாளையம் கிராமம்.

    இந்த கிராமத்தின் மேற்கு பகுதியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர் தேக்க தொட்டியில் இருந்து காளிபாளையம் கிராமம் முழுவதற்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. மேல்நிலைதொட்டி பல நாட்களாகவே மூடி இல்லாமல் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே இருக்கிறது.

    நேற்று காலை வெள்ளமடை ஊராட்சி சார்பில் பணியாளர்கள் சிலர் மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்வதற்காக வந்தனர்.அவர்கள் தொட்டியின் மீது ஏறி உள்ளே சென்று சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.அப்போது தொட்டிக்குள் எலும்புதுண்டுகள் கிடந்துள்ளது. இதனை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியாகினர்.

    உடனடியாக சம்பவம் குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமா, ஊராட்சித்தலைவர் பிரபாகரன் உட்பட வார்டு உறுப்பினர்கள் விரைந்து வந்தனர்.

    பின்னர் அவர்கள் தொட்டியை பார்த்தபோது அங்கிருந்த எலும்பு துண்டுகள் மாயமாகி விட்டன. அக்கம்பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    நாய்கள் அதனை எடுத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது. இருந்தபோதிலும் அதனை தேடும் பணி நடக்கிறது.

    இந்த தகவல் அறிந்ததும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் நேரில் வந்து விசாரணை செய்தார். தொடர்ந்து மேல்நிலை தொட்டிக்கு மூடி போட ஏற்பாடு செய்தார்.

    இதனை தொடர்ந்து வட்டார சுகாதார ஆய்வாளர் தலைமையிலான சுகாதார குழுவினர் வந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்து பிளிசிங் பவுடர் அடித்தனர். மேலும் தொட்டியில் கிடந்தது எலும்புதானா ? அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை காளிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் குடிநீர் தொட்டியின் முன்பு திரண்டனர். பின்னர் தொட்டியில் கிடந்த எலும்பை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்கு மார், பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தொட்டியில் கிடந்த எலும்பு எப்படி மாயமானது என்பது தெரிய வேண்டும். அதனை உடனே கண்டு பிடித்து தர வேண்டும். அதுவரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் விரைந்து கண்டு பிடித்து தருவதாக உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×