என் மலர்
கோயம்புத்தூர்
- காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா
- தசரா குழு பக்தர்கள் பல வேடங்கள் அணிந்து கோவை மாநகரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது
கோவை,
கோவை சங்கனூர்-நல்லாம்பாளையம் ரோடு அன்னியப்பன் வீதி முத்தாரம்மன் நகரில் முத்தாரம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 23 ஆண்டுகளை கடந்து 24-ம் ஆண்டாக இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று(சனிக்கிழமை) இரவு 12 மணிக்கு காளிபூஜையுடன் தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.45 மணியில் இருந்து 11.45 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் விழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு வருகிற 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு 4 கால பூஜை நடைபெற உள்ளது. மேலும் கோவை தசரா குழு பக்தர்கள் பல, பல வேடங்கள் அணிந்து கோவை மாநகரில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவில் தென்காசி மாவட்டம் காசிநாதபுரம் தசரா நாயகி மியுசிக் நாசிக்டோல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் மதுரை தங்கவேல் குழுவினரின் தசரா சிறப்பு மேளமும், விருதுநகர் காரியாப்பட்டி தங்கம் கரகாட்டக்கலை குழுவினரின் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முத்தாரம்மன் அருளை பெற்று செல்லுமாறு கோவை தசரா டிரஸ்ட் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- மகாளயபட்சம் முன்னோர் சாபம் நீக்கும் பொருட்டு சிறப்பு யாகம்
- 2000 பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
சாய்பாபாகாலனி,
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் காவேரி புஷ்கரணி பாலாறு சங்கமத்தில் காவிரி ஆரத்தி விழா உலக நலன் வேண்டி, நல்ல மழை வளம் பெற்று விவசாயம் உணவு தானியங்கள் வளர்ச்சி அடையவும் காவேரியில் சீக்கிரம் தண்ணீர் திறந்து விடவும் மகாலய பட்சம் முன்னோர் சாபம் நீக்கும் பொருட்டு சிறப்பு யாகம் காவிரி நதிக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு ஆரத்தி பூஜை நடைபெற்றது. இதில் 2000 பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த பூஜையானது கோவை ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம் தவத்திரு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் பண்ணவாடி ஆதீனம் வெங்கடேஸ்வர சுவாமிகள் மண்டல ஜீயர் சுவாமிகளும் கலந்து கொண்டனர்.
- பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம், தென்சேரிமலை ஆதினம் தலைமையில் விழா நடந்தது
- 4 விதமான 108 வகையான மூலிகைகளை வைத்து சிறப்பு யாகம்
கவுண்டம்பாளையம்,
கோவை கவுண்டம்பாளையம் சிவநகரில் ஸ்ரீ ஆதி மங்கல விநாயகர் கோவில்- சிவாலயத்தில் 2-ம் ஆண்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழாவின் முதலாம் ஆண்டு விழாவில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு சஷ்டி மகா வேள்வி பெருவிழா நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம் ராமானந்த குருமகுருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் தலைமையில் விழா நடந்தது.
வெள்ளிகிழமை மாலை வாஸ்து வழிபாடுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து இன்று திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, ஆனைந்து வழிபாடு, மூத்தபிள்ளையார் வழிபாடுகள் நடைபெற்றன. அதன்பிறகு சஷ்டி மகா யாகப் பெரு வேள்வி தொடங்கியது. இந்த வேள்வியானது குழந்தைகளுக்கு கல்வி ஞானம் பெரும், நோய் மற்றும் துன்பம் நீங்கும். தொழில்கள் முன்னேற்றம் அடையும், மழைவளம் பெருகும் மற்றும் அனைத்து சுபகாரியங்கள் நடைபெறும். தொடர்ந்து 4 விதமான 108 வகையான மூலிகைகளை வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், அம்மன், சிவன் உள்ளிட்ட அனைத்து கடவுள்களுக்கும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் குடங்கள் மூலம் ஊற்றப்பட்டது. அதன்பிறகு அபிசேக பூஜைகள், சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
- மேட்டுப்பாளையம் தி.மு.க நகர செயலாளர் ஆலோசனை பேரில் சத்துணவு முட்டைகளை வைத்திருந்ததாக தகவல்
- பள்ளி கட்டிடத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து முட்டைகளை விநியோகிக்க அறிவுறுத்தல்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். ஆட்டோ டிரைவர்.
இவரது வீட்டின் அருகில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளை வாங்கி வைத்துள்ளதாகவும், இதனை ஆட்டோவில் எடுத்து சென்று கடைகளில் விற்பனை செய்வதாக சுற்று வட்டார பொதுமக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பால்ராஜ் காலியாக உள்ள தனது பக்கத்து வீட்டில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகளை அட்டை, அட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து பால்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேட்டுப்பாளையம் தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ் ஆலோசனையின் பேரில் சத்துணவு முட்டைகளை வைத்திருந்ததாக கூறினார்.
அதன்பின் சம்பவ இடத்திற்கு தி.மு.க நகர செயலாளர் முகமது யூனுஸ் வந்து போலீசாரிடம் மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக முட்டைகள் இங்கு வைத்துள்ளோம்.
அரசு பள்ளிகளில் இந்த முட்டைகளை வைப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால் இவரது வீட்டின் அருகில் வைத்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்ததாக கூறினார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் அரசு பள்ளியின் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய சத்துணவு முட்டைகளை தனியார் கட்டிடத்தில் வைக்க அனுமதி இல்லை.
எனவே தாசில்தாரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமோ உரிய அனுமதி சீட்டு பெற்று முட்டைகள் வைத்திருந்த வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்ட வேண்டும். அல்லது பள்ளி கட்டிடத்தின் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து முட்டைகளை விநியோகிக்க வேண்டும் என அறிவுறுத்தி சென்றார். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
- பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஷவர் வசதி
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வரிசையாக சென்று தங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அதனை தொடர்ந்து பவானி ஆற்றுக்கு சென்று, அதனை ஆற்று நீரில் விட்டு நீராடினர். பின்னர் சிறிது அரிசியை தானமாக பெற்றுவீட்டுக்கு சென்று சமையல் செய்து முன்னோர்களுக்கு படைத்து விரதம் முடித்தனர். அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் என். எஸ் .வி.ஆறுமுகம் தலைமையில் செயலாளர் சுகுமாரன், பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள், அனைத்து சமுதாய சங்கங்களின் சேர்ந்த உறுப்பினர்கள் பொதுமக்கள் சிரமமின்றி திதி தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 27 புரோகிதர்கள் பொதுமக்களுக்கு திதி தர்ப்பணம் பூஜைகளை செய்து வழிபட ஏற்பாடு செய்தனர்.
பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு, ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அங்கு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பக்தர்கள் வசதிக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஷவர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து விட்டு, அதில் குளித்து சென்றனர்.
வீட்டுக்கு திரும்பி இறந்த தங்கள் முன்னோர்களுக்கு விருப்பமான உணவு பண்டங்கள், வடை, பாயாசத்துடன் படையல் இட்டு காக்கைக்கு வைத்துவிட்டு, தங்கள் குடும்பத்தினருடன் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
- வீடுகளில் உள்ள கழிவறையில் கழிவுநீர் திடீரென மேல்நோக்கி வருவதால்பொதுமக்கள் அவதி
- சிலர் புரோக்கராக செயல்பட்டு அப்பாவி மக்களிடம் பணம் வசூல் செய்வதாகவும் குற்றச்சாட்டு
பீளமேடு,
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தால், நகர் மேம்பாட்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட நகரம் தான் கோவை காந்திமாநகர். இங்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
இங்கு கோவை மாநகராட்சி சார்பாக பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளில் இரு ந்து வரும் கழிவு நீர்கள் காந்தி மாநகர் பகுதியில் கிழக்கு புறமாக அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தேக்கி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து சாக்கடை கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு சிறு ஓடைகளில் விடப்படுவது வாடிக்கை. இதனால் அந்தப் பகுதியில் எந்தவித கழிவுநீர் பிரச்சினைகளும் இல்லாமல் இருந்தது.
ஆனால் கடந்த 3 வருடங்களாக சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள மின் மோட்டார் செயல்படாத தால் அருகில் உள்ள பள்ளத்தில் கழிவு நீர் தேங்கி குளம் போல காணப்படுகிறது.
இதனால் கிழக்குபுறம் பல வீடுகளில் உ ள்ள கழிவறையில் கழிவுநீர் திடீரென மேல்நோக்கி வருகிறது. குடியிருப்பு வாசிகள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிக்கு ள்ளாகிறார்கள்.
குடியிருப்பு வாசிகள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு இல்லை. அதற்கு மாறாக அடைப்பு ஏற்பட்டதாக தகவல் கொடுத்தால், கழிவு நீர் வாகனம் வந்து சம்பந்தப்பட்ட வீடுகளில் உள்ள அடைப்புகளை சரி செய்து வருகின்றனர். இது தற்காலிக தீர்வாகவே அமைகிறது.
இதுகுறித்து காந்தி மாநகரில் வசிப்பவர்கள் கூறியதாவது:-
கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் தேக்கப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படுவதில்லை. சுத்திகரிப்பதற்கான மின் மோட்டார் இன்று வரை இயங்குவதுமில்லை. அதற்கு தனியாக மாநக ராட்சி ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை.
இங்கு தேக்கி வைக்கப்படும் கழிவு நீர் திடீரென குடியிருப்பு பகுதியில் புகுந்து அடைப்புகள் ஏற்படுகிறது. இதனால் பெரும் அவதியடைகிறோம்.
கழிவு நீரை அகற்றுவதற்கு சிலர் புரோக்கராக செயல்பட்டு அப்பாவி மக்களிடம் ஆயிரக்கணக்கில் வசூல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இத னால் பெருமளவில் குடியிருப்பு வாசிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர்.
இந்த பாதாள சாக்கடை கழிவு நீரை உடனுக்குடன் மறுசுழற்சி செய்து முறைப்படி அகற்றினால் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். அதற்கு இந்தப் பகுதி கவுன்சிலர், மாநகராட்சி மேயர், கோவை மாநகர ஆணையாளர் உட்பட அனைவரும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.
- கீழே விழுந்ததில் படுகாயத்துடன் பெண் படுகாயம்
- செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள கம்பர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்குமார்.
இவரது மனைவி ஜெயஸ்ரீ(வயது25). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் மலுமச்சம்பட்டிக்கு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ஜெயஸ்ரீ கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
அப்போது இளம்பெண் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஜெஸ்ரீயை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- இளம்பெண் செல்வகுமாருடன் ஜாலியாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள புளியன்கண்டியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது28). லாரி டிரைவர்.
இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்தனர்.
இதையடுத்து செல்வகுமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு தெக்கோட்டு வாய்க்காலை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இளம்பெண் செல்வகுமாருடன் ஜாலியாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து லாரி டிரைவர் கள்ளக்காதலியிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் ஜாலியாக இருக்கும் போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக செல்வகுமாரை மிரட்டி பணம் கேட்டார்.
இதனால் பயந்த அவர் ரூ.1.50 லட்சம் வரை பணத்தை இளம்பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் இளம்பெண் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
இதன் காரணமாக செல்வகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு செல்வகுமார் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் இளம்பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் நாங்கள் ஜாலியாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்.
பணம் கொடுக்கவில்லை என்றால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி என்னிடம் இருந்து ரூ.1.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி வந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.
பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவர் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறும்.
- கோவிலில் தினசரி காலை மற்றும் மதியநேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) காலை 11 காளி பூஜை நடக்கிறது.
இன்று விடுமுறை நாள் என்பதால் காலையிலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கிவிட்டனர். இன்று மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியும் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடைபெறும்.
கொடிஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடைபெற்று தசரா திருவிழா தொடங்குகிறது.
திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளிஅருள் வழங்குகிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
கோவிலில் தினசரி காலை மற்றும் மதியநேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும்.
திருவிழா தொடங்கியதையொட்டி விரதம் இருந்துவந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் வழங்கும் மஞ்சள் கயிற்றினால் ஆன காப்பு கயிற்றைவலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடமணிந்து, வீடுவீடாக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருவார்கள்.
24 -ந் தேதி 10-ம் திருநாள் அன்று தாங்கள் வசூல் செய்த காணிக்கைகளை பக்தர்கள் கோவிலில் கொண்டு சேர்ப்பார்கள், 24 -ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்லும் போது காளி மற்றும் பல்வேறு சுவாமி வேடங்கள் அணிந்த பக்தர்கள் அம்மனை பின் தொடர்ந்து செல்வார்கள், அங்கு மகிஷாசுரசம்காரம் முடிந்த பின்னர் அம்மன் கடற்கரை மற்றும் சிதம்பரேஸ்வரர் கோவில், முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பின்பு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் பவனி சென்று மாலையில் கோவிலுக்கு வந்ததும், முதலில் அம்மனுக்கு காப்பு அவிழ்த்து பின்பு பக்தர்களுக்கு காப்பு அவிழ்க்கப்படும். நள்ளிர்ரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.
மறுநாள் 12-ம் திருநாள் அன்று பகல் 12 மணிக்கு பால் அபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறும். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.
- போலீசார் 2 ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- பாரதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பழனிவேலை தேடி வருகின்றனர்.
கோவை.
கோவை தண்ணீர் பந்தல் ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் (49). இவர் கோவை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது நண்பர் ஒருவர் மூலமாக ரியல் எஸ்டேட் புரோக்கர்களான பழனி வேல், பாரதி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் என்னை போனில் தொடர்பு கொண்டனர்.
அப்போது, அவர்கள் ரேஸ் கோர்ஸ் பகுதியில் 3.04 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. அந்த இடத்தின் விலை ரூ.40 கோடி என தெரிவித்தனர். அதனை நீங்கள் வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டனர்.
நானும் சம்மதம் தெரி வித்து, இடத்தை பார்க்க வேண்டும் என கூறினேன். இதையடுத்து 2 பேரும் என்னை, இடத்தை பார்க்க அழைத்து சென்றனர்.
இடத்தை பார்த்ததும் எனக்கு பிடித்து போகவே முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்தேன். சில நாட்கள் கழித்து நான் கிரையம் செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றேன்.
அப்போது நான் வாங்கிய நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதையடுத்து நான் பழனிவேல், பாரதியிடம் எனது பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை இதுவரை திருப்பி வரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் போலீசார் பழனிவேல், பாரதி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கோவையில் இருந்த பாரதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பழனிவேலை தேடி வருகின்றனர்.
- 75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்பு 75 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இருப்பதாக பிரதமர் சொல்கிறார்.
- அமலாக்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை. புதியதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை.
கோவை,
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை தனியார் கல்லூரியில் இன்று நடந்த பேச்சு போட்டியை நீலகிரி தொகுதி எம்.பி.ஆ.ராசா தொடங்கி வைத்தார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
நான் படித்த காலத்தில் கலை கல்லூரியில் மட்டும்தான் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது. பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு நடத்துவதில்லை. அரசியலில் பொறியியல், மருத்துவ மாணவ ர்களுக்கு போதுமான வெளிச்சம் கிடைக்காமல் இருந்ததை இங்கு போக்கி இருக்கின்றோம்.
பள்ளி பருவத்தில் எனக்கு கலைஞரையும், அண்ணாவையும் தெரியாது. பரிசு கிடைக்கும் என்பதால் அண்ணா மறைவிற்கு கலைஞர் எழுதிய இரங்கல் கவிதையை படித்தேன். அது மாற்றத்தை ஏற்படுத்தியது.
75 ஆண்டு கால சுதந்திரத்திற்கு பின்பு 75 ஆயிரம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இருப்பதாக பிரதமர் சொல்கிறார். 1975-க்கு முன்னாடியே தமிழகத்தில் அத்தனை கிராமங்களுக்கும் மின் இணைப்பு கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. வெற்றி தோல்விகளை தாண்டி, இங்கு இருக்கும் மாணவர்கள் அரசியலில் ஜொலிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து ஆ.ராசா எம்.பி.யிடம் நிருபர்கள், கோவை திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள உங்களது நிலங்களை அமலாக்கதுறை முடக்கியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அமலா க்கத்துறை நடவடிக்கையில் புதியதாக எதுவும் இல்லை. புதியதாக எதுவும் கண்டுபிடிக்கவில்லை.
தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஏன் பதுங்கிக்குவாங்களா? என பதில் அளித்தபடியே புறப்பட்டு சென்றார்.
- வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க உருவாகி 52-வது ஆண்டு தொடக்க விழாவினை கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
- 17-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி ஆகிய நான், திரைப்பட இயக்குனர், நடிகர் ரவிமரியா, பழக்கடை மூர்த்தி ஆகியோர் பேசுகிறோம்.
கோவை,
கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க உருவாகி 52-வது ஆண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழகங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
மேலும் அ.தி.மு.க. தலைமை அறிவித்தபடி வருகிற 17-ந் தேதி தொண்டாமுத்தூர் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரான எஸ்.பி.வேலுமணி ஆகிய நான், திரைப்பட இயக்குனர், நடிகர் ரவிமரியா, பழக்கடை மூர்த்தி ஆகியோர் பேசுகிறோம்.
18-ந் தேதி சூலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் நான், திரைப்பட இயக்குனர், நடிகர் மனோஜ்குமார், ஜெயசீலனும், வால்பாறை யில் எம்.ஜி.ஆர் இளைஞ ரணி துணை செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அமுல்கந்தசாமி, பி.ஏ.சுப்பி ரமணியம் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்கள்.
26-ந் தேதி கிணத்துக் கடவு ெதாகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மாணவரணி துணைச்செயலாளர் எம்.டிபாபு, பலகுரல் வெள்ளி யங்கிரியும், 28-ந் தேதி பொள்ளாச்சியில் நடக்கும் கூட்டத்தில் வக்கீல் பிரிவு இணை செயலாளரும், செய்தி தொடர்பாளருமான பாபுமுருகவேல், எரியூட்டி சேகர் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






