என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் முயற்சியால் சர்வீஸ் சாலையை இரு வழிபாதையாக அகலப்படுத்த நடவடிக்கை
    X

    கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் முயற்சியால் சர்வீஸ் சாலையை இரு வழிபாதையாக அகலப்படுத்த நடவடிக்கை

    • கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • சாலை திட்டம் முடிவடையும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வது எளிதாகிவிடும்.

    கிணத்துக்கடவு,

    கோவை கிணத்துக்கடவு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது கிணத்துக்கடவு நகரை கடப்பதற்கு அரசம்பாளையம் பிரிவில் இருந்து 2.5 கி.மீ தூரத்திற்கு கோதவாடி வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    கிணத்துக்கடவு நகரை சுற்றியுள்ள அண்ணா நகர், பகவதிபாளையம், கிரீன் கார்டன், செம்மொழி நகர் அண்ணாநகர் உட்பட பல பகுதிகள் சுமார் 2 கிமீ தூரம் வரை சென்று திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

    மேலும் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை மற்றும் தனியார் பள்ளி இருக்கும் இடத்தில் ரோடு மிக குறுகலாக உள்ளது. ரோட்டை அகலப்படுத்தும் பணி குறித்து நடவடிக்கைகள் எடுக்க கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் தலைமையில் கவுன்சிலர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் அளித்தனர்.

    இந்தப் பகுதியில் ரோடு குறுகலாக உள்ளதாலும் பள்ளிகள் மற்றும் சந்தைகள் இருப்பதாலும் போக்குவரத்து அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் ஒரு வழிபாதையாக இந்த ரோட்டை பயன்படுத்துவதால் பல நேரங்களில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி நிற்பதும் அதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் குடிநீர் திட்டத்திற்கான குழாய்கள் மற்றும் கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பதால் அடிக்கடி ரோட்டில் ஏற்படும் குழிகளால் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் முழுவதும் சர்வீஸ் சாலையில் தேங்கி நிற்பதும் வாடிக்கையாக உள்ளது.

    இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சாலை விரிவாக்கம் செய்யக்கூடிய இடத்தினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாருக்கு நேரில் சென்று காண்பித்தார்.

    ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் செந்தில்குமார், வருவாய் துறை, பேரூராட்சி நிர்வாகத்தினர் உட்பட அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் முடிவில் தினசரி காய்கறி சந்தை அருகே உள்ள சர்வீஸ் சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் மூலம் சர்வீஸ் சாலை இருவழி பாதையாக மாற்றுவதற்கு டெண்டர் விடப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கிணத்துகடவு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வீஸ் சாலை அகலப்படுத்தும் பணி பேரூராட்சித் தலைவர் கதிர்வேல் தீவிர முயற்சியால் நிறைவேற்றப்பட உள்ளது.

    இந்த சாலை திட்டம் முடிவடையும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வது எளிதாகிவிடும். மேலும் தனியார் பள்ளி மற்றும் காய்கறி சந்தை அருகே போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படும். எனவே விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி தலைவர் கதிர்வேல் கேட்டுக் கொண்டார்.

    Next Story
    ×