என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.
    • இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    குனியமுத்தூர்:

    தமிழ் கலாசாரத்தை தலைநிமிர செய்யும் வகையில் கோவை மாவட்டம் போத்தனூர் அருகே செட்டிபாளையம் பகுதியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. அங்கு புதிதாக திருமணமான புதுமண தம்பதி மாட்டு வண்டியில் புகுந்த வீட்டுக்கு சென்று அசத்தி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன்- பாக்கி யலட்சுமி தம்பதியின் மகன் ஆனந்தகுமார். இவருக்கும் மெட்டுவாவி பகுதியை சேர்ந்த மகாலிங்கம்-சரோஜினி தம்பதியின் மகள் பவதாரணிக்கும் செட்டிபாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும்வகையில் புகுந்த வீட்டுக்கு மாட்டு வண்டியில் செல்வதென முடிவு செய்தனர். தொட ர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டி வரவழைக்கப்பட்டது. அதில் மணமக்கள் ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து மணமகன் ஆனந்தகுமார் மாட்டு வண்டியை ஓட்டினார். பக்கத்தில் அமர்ந்து இருந்த மணமகள் பவதாரணி மகிழ்ச்சியில் கைகளை அசைத்தபடி வந்தார்.

    செட்டிபாளையம் சாலையில் மாட்டுவண்டி யில் திருமண ஊர்வலம் சென்ற மணமக்களை நேரில் பார்த்து பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

    இதற்கிடையே சமூகவலைதளத்தில் மணமக்கள் மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம் சென்ற காட்சியை ஒருசிலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். அது இணையதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து மணமகன் ஆனந்தகுமார் கூறியதாவது:-

    நான் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முடித்து உள்ளேன். பவதாரணி எம்.எஸ்.சி ஐ.டி முடித்து உள்ளார். எங்களின் குடும்பம் பரம்பரையாக விவசாயத்தை தொழிலாக கொண்டது. எனவே விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.

    நாங்கள் எளிமைக்காக மட்டுமின்றி உரிமைக்காகவும் மாட்டுவண்டியை தேர்வு செய்து உள்ளோம். என்னதான் நாம் இன்றைக்கு மாடர்ன் உலகில் வாழ்ந்து வந்தாலும், விவசாயம் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது.

    மேலும் எந்த நாட்டில் விவசாயம் தோல்வி அடைகிறதோ, அங்கு அனைத்து துறைகளும் படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்படும். இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வண்டியில மாமன் பொண்ணு, ஓட்டுறவன் செல்லக்கண்ணு என ஒரு சினிமா பாடல் உண்டு. புது தம்பதி மாட்டு வண்டியில் செல்லும் காட்சி அந்த பாடலை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.

    • மன அழுத்தம் காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை கோவில்மேடு அருகே உள்ள இடையர்பாளையம் பொன்னையா வீதியை சேர்ந்தவர் பால சுப்பிரமணியம். இவரது மனைவி லட்சுமி (வயது 73). இவர்களது மகன் கணேஷ்குமார் (45). திருமணம் ஆகவில்லை.

    கணேஷ் குமார் 45 வயதாகியும் திருமணத்துக்கு பெண் கிடைக்காததாலும், சரியான வேலை கிடைக்காததாலும் இவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். மேலும் தூக்கம் வராமல் தவித்த கணேஷ்குமார் கடந்த சில நாட்களாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.

    அவரது தாய் லட்சுமிக்கும் வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை கணேஷ்குமார் கவனித்து வந்தார். இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த தாய், மகன் இருவரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த சாணிப்பவுடரை கரைத்து 2 பேரும் குடித்தனர். சிறிது நேரத்தில் 2 பேரும் வீட்டிற்குள் மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    அப்போது கணேஷ்குமாரின் சகோதரி வித்யா என்பவர் அவரது தாயை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்றார். வீட்டிற்குள் 2 பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக ஆம்புலன்சு ஊழியர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த லட்சுமியை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கணேஷ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கணேஷ்குமாரும் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மன அழுத்தம் காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த திருமணம் ஆகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • பொதுமக்கள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் இருந்த வாலிபரை பிடித்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் மற்றும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.

    இந்தநிலையில் கணவன் -மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த திருமணம் ஆகாத 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி வாலிபர் இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு இளம்பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்தார். பின்னர் 2 பேரும் வீட்டில் ஜாலியாக இருந்தனர். வாலிபர் வீட்டில் இருப்பதை பார்த்த சிலர் வேண்டும் என்றே திருடன்... திருடன்... என சத்தம் போட்டனர். இதனையடுத்து இளம்பெண்ணின் வீட்டு முன்பு ஊர் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பொதுமக்கள் இளம்பெண்ணின் வீட்டிற்குள் இருந்த வாலிபரை பிடித்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை காதலிப்பதாகவும் அவர் அழைத்ததின் பேரில் வந்ததாகவும் வாலிபர் கூறினார். இளம்பெண்ணும் தான் அழைத்ததின் பேரில் தான் வாலிபர் வந்ததாகவும், எனவே நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கூறினார்.

    இதனையடுத்து போலீசார் வாலிபரை விடுவித்தனர்.

    வெளியே சென்ற வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில் வடக்கிப்பாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விஷம் குடித்தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வாலிபர் திருமணம் செய்ய மறுத்து விட்டதால் மனவேதனை அடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய இந்த நிலைக்கு வாலிபர் தான் காரணம் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

    போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்கம் பக்கத்தினர் சிறுவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
    • ஜவுளிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிறுவர்கள் 8 பேரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    மேலும் அந்த இளம்பெண்ணுடன் ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 சிறுவர்களும் இளம்பெண்ணுடன் அடிக்கடி பேசி வந்தனர். இதன் காரணமாக சிறுவர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று 17 வயது சிறுவன், 16 வயது சிறுவனை தொடர்பு கொண்டு இளம்பெண்ணுடன் பழகுவது குறித்து பேச வேண்டும் என அழைத்தார். இதனையடுத்து 16 வயது சிறுவன் தனது நண்பர்கள் 4 பேருடன் ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதிக்கு சென்றார்.

    அங்கு 17 வயது சிறுவன் தனது நண்பர்கள் 4 பேருடன் அங்கு நின்று கொண்டு இருந்தார். அப்போது சிறுவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்ற ஜவுளிக்கடை வைத்து நடத்தி வரும் சர்ச் வீதியை சேர்ந்த பாலசுந்தர மூர்த்தி (வயது 22) என்பவர் தடுக்க சென்றார்.

    அப்போது சிறுவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பாலசுந்தர மூர்த்தியின் கையில் குத்தினர். இதில் அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாலசுந்தர மூர்த்தியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜவுளிக்கடை உரிமையாளரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய சிறுவர்கள் 8 பேரை தேடி வருகின்றனர். 

    • காலை 8 மணி முதல் 9 மணி வரை இயக்கினால் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கோரிக்கை
    • பரபரப்பான நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அறிவுறுத்தல்

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் அடுத்த சிட்கோ மற்றும் கணேசபுரம், சீனிவாசநகர், அண்ணாபுரம், கார்மல் கார்டன், மேட்டூர் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதி உள்ளன.

    இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே வேலைக்காக கோவை டவுன் பகுதிக்கு சென்றுவர வேண்டிய நிலையில் உள்ளனர்.

    சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊரடங்கு காலகட்டத்திற்கு முன்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் அந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படவில்லை.

    எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடியிருப்புவாசிகள் மனு கொடுத்தனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதிக்கு தினமும் 2 பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. ஆனால் பரபரப்பான நேரங்களில் காலை- மாலை வேளைகளில் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. மேலும் காலை 11 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.

    இதனை காலை 8 மணி முதல் 9 மணி வரை இயக்கினால் பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் வசதியாக இருக்கும்.

    பரபரப்பான நேரத்தில் பஸ்கள் இயங்காததால் நாங்கள் வெகுதூரம் நடந்து பொள்ளாச்சி மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    மேலும் குறுக்குவழியாக கணேசபுரம் ெரயில்வே தரைப்பாலம் பகுதிக்கு வந்தால் அங்கு மின்விளக்கு வசதிகள் இல்லை. ஆங்காங்கே இருட்டு நிறைந்து காணப்படுவதால் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    ஏற்கனவே அந்த பகுதியில் தனியாக நடந்து வரும் பெண்களிடம் செயின் பறிப்பும், கத்திக்குத்து சம்பவங்களும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே எங்கள் பகுதிக்கு வரும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். பரபரப்பான நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வேலைக்கு செல்லும் பெண்கள் மனஉளைச்சல் இன்றி வெளியே சென்று வர முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • புகாரளிக்க புதிய செல்போன் எண் அறிவிப்பு
    • சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து புகாரளிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகர மதுவிலக்கு போலீசார் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபானம், போலி மது ஆகியவை விற்பனை செய்வது தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக மதுவிலக்கு பிரிவு போலீசாரின் செல்போன் எண்ணுக்கு (9514220020) தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இதன்அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும்.

    எனவே கோவை மாநகரில் சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்க முன்வரவேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • மொபட் -மோட்டார்சைக்கிள் மோதலில் மேலும் 3 பேர் படுகாயம்
    • தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கோவை,

    துடியலூர் அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(28). இவர்கள் இருவரும் ஜோதிடர்கள்.

    பக்கத்து ஊர்களுக்கு சென்று ஜோதிடம் பார்த்து வருவது வழக்கம். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் ஆனைகட்டிக்கு ஜோதிடம் பார்க்க சென்றனர்.

    அங்கு ஜோதிடம் பார்த்துவிட்டு மொபட்டில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொபட்டை மணிகண்டன் ஓட்டிச் சென்றார். சின்னத்தம்பி பின்னால் அமர்ந்து இருந்தார்.

    அவர்கள் ஆனைகட்டி ரோடு மாங்கரை அருகே வந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது.

    இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்னத்தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மணிகண்டன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த உக்கடத்தை சேர்ந்த கோகுல்ராஜ்(23). நிசாந்த் ஆகிய 3 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • விலை சரிவு விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக வேதனை
    • உள்ளூர் முட்டைகோஸ்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

    இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கையில் முட்டைகோசை ஏந்தியபடி வந்து மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்து மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் குறிப்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் தீத்திப்பாளையம், குப்பனூர், மாதம்பட்டி, கரடிமடை, பூலுவப்பட்டி, தென்கரை, சென்னனூர், மத்திபாளையம், நாதே கவுண்டன்புதூர், இருட்டுப்பள்ளம் செம்மேடு, இக்கரை போளுவாம்பட்டி, தேவராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், தெ ன்னமநல்லூர், தொண்டாமுத்தூர், தாளியூர், நரசிபுரம் போன்ற பகுதிகளில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் முட்டைக்கோஸ் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையிலும், பல்வேறு பருவநிலை மாற்றங்களாலும், காய்கறி பயிர்கள் உரிய நேரத்திற்கு பயிரிட முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு விவசாயிகள் ஆளாகி வருகிறார்கள்.

    இந்நிலையில் முட்டைகோஸ் பயிரிடும் விவசாயிகள் நிலைமை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. குறிப்பாக முட்டை கோஸ் 1 ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் நாற்றுகள் வரை நாற்று பண்ணையில் இருந்து ஒரு நாற்று 90 பைசா வீதத்தில் வாங்கி நடுகிறார்கள். ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை விளைச்சல் இருக்கும்.

    தற்போது கிலோ ரூ.3 முதல் ரூ.6 வரை விற்கப்படுகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்து வரும் நிலையில், இந்த விலை சரிவு விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே, தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக முட்டைகோஸ் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். தோட்டக்கலைதுறை மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    விலை சரிவு காலங்களில் பிற மாவட்டங்களுக்கு முட்டைகோஸ் ஏற்றுமதி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். உள்ளூர் முட்டைகோஸ்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும், விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த முட்டைகோஸ்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி சென்றனர். 

    • கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரதேவர் காவிக்கொடி அசைத்து அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்
    • ஏ.டி.எஸ்.பிக்கள் முத்துக்குமார், சுரேஷ்குமார் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு

    கவுண்டம்பாளையம்,

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விஜயதசமி அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் கோவை துடியலூரில் நடந்தது.

    கோவை மாவட்ட தேவர் பேரவை தலைவர் சுந்தரதேவர் காவிக்கொடியை அசைத்து அணிவகுப்பு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். துடியலூர் பஸ்நிலையத்தில் இருந்து தொடங்கிய சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணி வகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக விஸ்வநாதபுரம் பொருட்காட்சி மைதானத்தை அடைந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு குறு, சிறு தொழில் சங்க துணை தலைவர் சுருளிவேல் தலைமை தாங்கினார். வாராகி மணிகண்ட சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். உமாதேவி மருத்துவமனை தலைவர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்த மிழக இணை அமைப்பாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்தை கடை பிடித்து கட்டுப்பாட்டுடன் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளித்து அவர்களை இந்த நாட்டின் சேவையில் ஈடுபட ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிக்கிறது. இந்த சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது.

    நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி, விபத்துக்கள், கொரோனா போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும்போது உடனடியாக களத்துக்கு சென்று மக்களை மீட்டு அவர்களின் துயர் துடைக்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சாதி, மத, மொழி, இன பாகு பாடின்றி தொண்டாற்றி வருகின்றனர்.

    இன்று இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்து நிற்கிறது. ஆர்.எஸ்.எஸ். நல்ல மனிதர்களை உருவாக்கி உள்ளது. அந்த மனிதர்கள் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். வரும் காலத்தில் உலகத்தின் குருவாக இந்தியாவை மாற்றும் வேலையை செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 700 பேர் கலந்து கொண்டனர்.

    பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பகுதியிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. கோட்டூர் பஸ்நிலை யத்தில் தொடங்கிய ஊர்வலம் குமரன் கட்டம் பேரூராட்சி அலுவலக வீதி வழியாக சென்று தனியார் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கோட்டூர், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தையொட்டி ஏ.டி.எஸ்.பிக்கள் முத்துக்குமார், சுரேஷ்குமார் தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கார்த்திகை மாதப்பிறப்பை தொடர்ந்து இறைச்சியின் விலைகளும் பெருமளவில் குறைந்தது
    • அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

    கோவை,

    கோவை உக்கடம் லாரிப்பேட்டையில் ஒட்டுமொத்த மீன் விற்பனை சந்தை இயங்கி வருகிறது. மேலும் உக்கடம்-பேரூர் பிரதான சாலையில் சில்லரை மீன்சந்தைகள் உள்ளன.

    கோவையில் உள்ள மீன்சந்தைகளுக்கு ராமேசுவரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர் மற்றும் கேரளாவில் உள்ள கொச்சி, சாவக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் 15 டன்கள் வரை மீன்வகைகள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன.

    இங்கு அவை தரம்பிரிக்க ப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏலம் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உக்கடம் லாரிப்பேட்டை, உக்கடம் பேரூர் பிரதான சாலையில் உள்ள மீன் விற்பனை சந்தைகளில் 24 மணி நேரமும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

    மேலும் சனி, ஞாயிறு ஆகிய வாரவிடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள் திரண்டு வந்திருந்து தங்களுக்கு பிடித்த மீன்வகைகளை வாங்கி செல்வர்.

    இந்தநிலையில் அய்யப்பசுவாமிக்கு உகந்த கார்த்திகை மாதம் பிறந்தது. தொடர்ந்து பக்தர்கள் துளசிமாலை அணிந்து 48 நாட்கள் விரதம் அனுசரித்து வருகின்றனர். மேற்கண்ட நாட்களில் பக்தர்கள் அசைவம் சாப்பிடுவது இல்லை. மேலும் குடும்பத்தினரும் பூஜை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதால் சைவ உணவுகளையே விரும்பி உட்கொண்டு வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் பெரும்பாலானோர் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் அனுசரித்து வருவதால் இங்கு உள்ள இறைச்சி கடைகளில் வாடிக்கையாளர் கூட்டம் பெரியஅளவில் இல்லை. இதனால் அங்குள்ள பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    மேலும் விற்பனை கடைகளில் உள்ள மீன் வகைகளின் விலையும் கணி சமானஅளவு குறைந்து உள்ளது. கோவை உக்கடம் மீன் சந்தைகளில் விற்கப்படும் ஒரு கிலோ மீன் வகைகளின் விலை விவரம் (அடைப்புக்கு றிக்குள் பழைய விலை):

    வஞ்சிரம்-700 (900), வாவல்-500 (600), கருப்பு வாவல்-300 (400), பாறை மீன்-200, ஊழி-100, மத்தி-100, நெத்திலி-150, சங்கரா-180, செம்மீன்-300 என்ற விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் கார்த்திகை மாதப்பிறப்பை தொடர்ந்து இறைச்சியின் விலைகளும் பெருமளவில் குறைந்து உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோழிக்கறி ஒரு கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது தற்போது ஒரு கிலோ ரூ.180-க்கு விற்கப்பட்டு வருகிறது.

    மேலும் ஆட்டு இறைச்சியின் விலை ஒரு கிலோ ரூ.800 என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கார்த்திகை மாதம் பிறந்ததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மீன், இறைச்சி விற்பனை கடைகளில் பெருமளவில் விலை கணிசமாக குறைந்து உள்ளது, அசைவ பிரியர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கைகோலம்பாளையம் அருகே வழிமறித்து பணம் பறிப்பு
    • கோவில்பாளையம் போலீசார் விசாரணை

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இளையபாரதி (வயது 23). தனியார் நிறுவன ஊழியர்.

    சம்பவத்தன்று இவர் கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கைகோலம்பாளையம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 வாலிபர்கள் இளையபாரதியை தடுந்து நிறுத்தினர்.

    பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளையபாரதியை மிரட்டி அவரிடம் இருந்து ரூ.21,900 ரொக்க பணம், 2 பவுன் செயின், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கு இருந்த தப்பிச் சென்றனர். இது குறித்து இளையபாரதி கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் மற்றும் செல்போனை பறித்தது சரவணம்பட்டி, காளப்பட்டி, குனியமுத்தூரை சேர்ந்த 17, 16, 18 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பசாமி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமான 36 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனின் மனைவிக்கு தெரிய வரவே அவர் கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணிகண்டன் மனைவி அவரை பிரிந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இதனையடுத்து மணி கண்டன் கள்ளக்காதலி வீட்டில் திருமணம் செய்யா மல் அவருடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கள்ளக்காத லர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் மணிகண்டனுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று மணிக ண்டன் கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று கள்ளக்காதலி மற்றும் அவரது மகள் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசினார்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த இளம்பெண் விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் மணிகண்டனை தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விஷம் குடித்து உயிருக்கு போராடிய இளம்பெண்ணை அவரது உறவினர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×