search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் முட்டைகோஸ் ஏந்தியபடி மனு கொடுக்க வந்த விவசாயிகள்
    X

    கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு கையில் முட்டைகோஸ் ஏந்தியபடி மனு கொடுக்க வந்த விவசாயிகள்

    • விலை சரிவு விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக வேதனை
    • உள்ளூர் முட்டைகோஸ்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

    இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கையில் முட்டைகோசை ஏந்தியபடி வந்து மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்து மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் குறிப்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் தீத்திப்பாளையம், குப்பனூர், மாதம்பட்டி, கரடிமடை, பூலுவப்பட்டி, தென்கரை, சென்னனூர், மத்திபாளையம், நாதே கவுண்டன்புதூர், இருட்டுப்பள்ளம் செம்மேடு, இக்கரை போளுவாம்பட்டி, தேவராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், தெ ன்னமநல்லூர், தொண்டாமுத்தூர், தாளியூர், நரசிபுரம் போன்ற பகுதிகளில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் முட்டைக்கோஸ் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையிலும், பல்வேறு பருவநிலை மாற்றங்களாலும், காய்கறி பயிர்கள் உரிய நேரத்திற்கு பயிரிட முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு விவசாயிகள் ஆளாகி வருகிறார்கள்.

    இந்நிலையில் முட்டைகோஸ் பயிரிடும் விவசாயிகள் நிலைமை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. குறிப்பாக முட்டை கோஸ் 1 ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் நாற்றுகள் வரை நாற்று பண்ணையில் இருந்து ஒரு நாற்று 90 பைசா வீதத்தில் வாங்கி நடுகிறார்கள். ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை விளைச்சல் இருக்கும்.

    தற்போது கிலோ ரூ.3 முதல் ரூ.6 வரை விற்கப்படுகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்து வரும் நிலையில், இந்த விலை சரிவு விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே, தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக முட்டைகோஸ் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். தோட்டக்கலைதுறை மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    விலை சரிவு காலங்களில் பிற மாவட்டங்களுக்கு முட்டைகோஸ் ஏற்றுமதி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். உள்ளூர் முட்டைகோஸ்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும், விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த முட்டைகோஸ்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி சென்றனர்.

    Next Story
    ×