என் மலர்tooltip icon

    சென்னை

    • புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஈர்ப்பதற்கும் கடலின் வெப்பநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
    • இதேபோன்ற நிகழ்வு 2019-ம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அரபிக்கடலில் அடுத்தடுத்த வானிலை நிகழ்வுகள் உருவாகின.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கும்.

    ஆனால் நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே 'மோன்தா' புயல் உருவாகி, ஆந்திரா நோக்கி சென்றது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது. தற்போது பருவமழை சற்று இடைவெளி விட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதியில் இருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி, 15-ந் தேதிக்கு பிறகு மழை தீவிரம் எடுக்கவுள்ளது.

    இந்தநிலையில் வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் தெரிவித்திருக்கிறார். அதாவது, புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் (தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம்) உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஈர்ப்பதற்கும் கடலின் வெப்பநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது வங்கக்கடலில் தற்போது சாதகமாக உள்ளது.

    கிழக்கிந்திய பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், அதேநேரத்தில் சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நீடிப்பதும் போன்ற சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு இந்திய பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிகழ்வு (நெகட்டிவ் ஐ.ஓ.டி.) என சொல்லப்படுகிறது. இது அடுத்துவரும் 2 வாரங்களில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

    ஏற்கனவே இதேபோன்ற நிகழ்வு 2019-ம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அரபிக்கடலில் அடுத்தடுத்த வானிலை நிகழ்வுகள் உருவாகின. அதில் ஒன்று 'சூப்பர்' புயலாகவும், ஒன்று அதி தீவிர புயலாகவும், ஒன்று மிக தீவிர புயலாகவும் வலுவடைந்தது. இதுதவிர மற்றவை தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலங்களாக உருவானது குறிப்பிடத்தக்கது.

    அந்தவகையில் தற்போதைய கடல் வெப்பநிலை அதிகரிப்பு எதிரொலியாக வங்கக்கடலில் அடுத்தடுத்த தொடர் நிகழ்வுகளும், வலுவான புயலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது நல்ல மழையை கொடுக்கும் நிகழ்வுகளாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

    • தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விவரங்கள் கடந்த 22-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
    • சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்தநிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

    சென்னை:

    குரூப்-4 பணிகளுக்கான தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனையடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வு முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் விவரங்கள் கடந்த 22-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

    ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கணினிவழிதிரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் விவரங்கள் (வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர்- பழங்குடி இளைஞர்கள் ஆகிய பதவிகள் தவிர) www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை ஒருமுறை பதிவு (ஓ.டி.ஆர்.) பிரிவு வாயிலாக நவம்பர் 7-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். சான்றிதழ்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள் அடுத்தநிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2027 ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம்.
    • மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எதிர்நோக்கவிருக்கும் செயல்பாட்டு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது குறித்து, இந்திய அரசின் அறிவிப்பானது 16.06.2025 தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் (அறிவிப்பு எண். S.O. 2681) வெளியிடப்பட்டு, அது 16.07.2025 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் மீண்டும் வெளியிடப்பட்டது.

    மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 பிரிவு 17எ-ன் படி, 16.10.2025 தேதியிட்ட இந்திய அரசிதழ் அறிவிப்பு எண். S.O. 4698(E) இல் அறிவிக்கப்பட்டுள்ளபடி, இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கனக்கடுப்பு ஆணையர் அலுவலகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் 2027-ஆம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்-சோதனையை நடத்த இருக்கிறது.

    இந்த முன்-சோதனையானது, 2027 ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம் மற்றும் ஆயத்தப் பணியாகும். 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்மொழியப்பட்ட கருத்துக்கள், நடைமுறைகள், கேள்வித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகளை மதிப்பிடுவதற்காக இந்த முன்-சோதனை நடைபெறவுள்ளது.

    2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும். இந்த முன்-சோதனையின் முடிவுகள், 2027 ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எதிர்நோக்கவிருக்கும் செயல்பாட்டு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.

    முதல் முறையாக, முன்-சோதனையின் போது, மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும் வரையப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு (CMMS) வலைத்தளம் மூலம் இந்த முழு செயல்பாடுகளும் நிர்வகிக்கப்படும். இது நிகழ்நேர மேற்பார்வை மற்றும் முன்னேற்ற கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்ட வலைத் தளமாகும்.

    2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை 10.11.2025 முதல் 30.11.2025 வரை நடைபெறவுள்ளது, இதனுடன் 01.11.2025 முதல் 07.11.2025 வரை சுய-கணக்கெடுப்பு (Self-enumeration) செய்வதற்கான முன்- சோதனையும் நடைபெறவுள்ளது.

    முன்-சோதனைக்காக தமிழ்நாடு மாநில அரசுடன் கலந்தாலோசித்து மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:

    • கிராமப்புற பகுதி - அஞ்செட்டி தாலுக்கா, கிருஷ்ணகிரி மாவட்டம்

    • கிராமப்புற பகுதி - ஆர்.கே. பெட் தாலூக்காவின் ஒரு பகுதி, திருவள்ளூர் மாவட்டம்

    • நகர்ப்புற பகுதி - மாங்காடு நகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம்

    தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம், முன்-சோதனை சுமூகமாக நடைபெறுவதற்கு, தொழில்முறை வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் மேற்பார்வை உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்.

    மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளிலுள்ள அலுவலர்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் செயல்படுவார்கள். களப்பணிகளுக்கு முன் கணக்கெடுப்பாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்

    தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முன்-சோதனையின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். களப்பணியாளர்களுடன் துல்லியமான விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் அது, கணக்கெடுப்பின் போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் செயலிகள் மற்றும் செயல்முறைகளைச் செம்மைப்படுத்த உதவும்.

    இந்த முன்-சோதனையானது, 2027-ஆம் ஆண்டு வெற்றிகரமான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வழி வகுக்கும். நாடு முழுவதும் நடைபெறவுள்ள 2027 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அதிக துல்லியம், செயல்திறன் மற்றும் தயார்நிலையை உறுதி செய்ய இந்தப் முன்-சோதனை பயிற்சி உதவும்.

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான்,அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் எடுத்து வைக்க வேண்டும்.
    • இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் விஜய் கூறியிருப்பதாவது:-

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு.

    வணக்கம்.

    நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு. உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.

    சூழ்ச்சியாளர்கள். சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்', அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை. அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர்.

    கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும். இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

    ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 05.11.2025 புதன்கிழமை நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

    வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட தீர்க்கமாகத் திட்டமிடுவோம்.

    நல்லதே நடக்கும்.

    வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு கடிதத்தில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

    • தங்கம் விலை இன்று காலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கு விற்பனையானது.
    • சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை கடந்த 17-ந் தேதி விலை உச்சத்துக்கு சென்றது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தாறுமாறாக விலை உயர்ந்து வந்தது.

    இப்படி இருந்த சூழலில் கடந்த 18-ந் தேதியில் இருந்து விலை குறைந்து கொண்டே வருகிறது. விலை ஏற்றம் ராக்கெட் வேகத்தில் இருந்த நிலையில், தற்போது விலை இறக்கம் சீட்டுக்கட்டு போல சரியத் தொடங்கியுள்ளது.

    அந்த வகையில் நேற்று காலை கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்திருந்தது. பின்னர் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் சரிந்திருந்தது.

    இதனையடுத்து தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,210-க்கும், சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,680-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் பிற்பகலில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சவரனுக்கு 920 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,600-க்கும் விற்பனையாகிறது.

    இதன்மூலம் கிராமுக்கு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை , இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 88,600

    27-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,600

    26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-10-2025- ஒரு கிராம் ரூ.165

    27-10-2025- ஒரு கிராம் ரூ.170

    26-10-2025- ஒரு கிராம் ரூ.170

    25-10-2025- ஒரு கிராம் ரூ.170

    24-10-2025- ஒரு கிராம் ரூ.170

    • விலைக்கு நிலங்களை வாங்கியும் மற்றும் குத்தகைக்கு நிலங்களை எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.
    • எளிய முறையில் குறைந்த முதலீட்டில் அதிக பொருளாதார லாபம் அடைவதற்கான விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தற்போது விவசாய பணிகளில் பெரும்பாலான பொறியியல் படித்த இளைஞர்கள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் வெளிநாடுகளில் பணி செய்து விட்டு தாயகம் திரும்பிய இளைஞர்களும் ஆர்வம் காட்டி அவர்களது பூர்வீக நிலங்களைக் கொண்டும், விலைக்கு நிலங்களை வாங்கியும் மற்றும் குத்தகைக்கு நிலங்களை எடுத்தும் விவசாயம் செய்து வருகின்றனர்.

    விவசாயத்தில் ஆர்வமாக விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு அந்தந்த பகுதி வேளாண்மை, தோட்டகலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை மூலம் புதிய, லாபகரமான முன்னோடி விவசாயம் செய்யும் பகுதிகளுக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு அழைத்துச் சென்று எளிய முறையில் குறைந்த முதலீட்டில் அதிக பொருளாதார லாபம் அடைவதற்கான விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

    இதற்காக இளைஞர் களால் வேளாண்மை மேம்பாட்டு திட்டம் போன்ற ஒரு திட்டத்தை தமிழக வேளாண்மைத் துறை கூட்டுக் குழுவாக செயல்பட்டு உடனடியாக நிறைவேற்றி விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்களின் ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    31-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில

    பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
    • கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது?

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து அறநிலைத்துறை இணையதளத்தில் வெளியிட கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் உள்ளது. அந்த இணையதளத்தில் நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் உள்ளது.

    இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். ஏற்கனவே ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது? இது தொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும்? என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

    • மழைக்கால காய்ச்சல் முகாம்கள் கடந்த 17-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன.
    • பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலும் தற்போது அதிகரித்துள்ளது.

    மழையினால் நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை முன் எச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

    மழைக்கால காய்ச்சல் முகாம்கள் கடந்த 17-ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரையில் 627 நிலையான மருத்துவ முகாம்களும் 217 நடமாடும் மருத்துவ முகாம்களும் என மொத்தம் 844 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36 ஆயிரத்து 353 பேர் பயன் அடைந்துள்ளனர்.

    இன்று திருவொற்றியூர், மணலி, தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் 116 சிறப்பு முகாம்கள் நடந்தன. தற்போது வாந்தி, வயிற்றுப் போக்கு, தொண்டை வலி, சளி, இருமல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதால் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் நடக்கின்றன. பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    இன்று நடக்கும் முகாம்களுடன் சேர்த்து 40 ஆயிரம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு முகாமில் ஒரு மருத்துவர், நர்சு மற்றும் உதவியாளர் வீதம் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    • ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழகிட வேண்டும்.
    • அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்கிட வேண்டுகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக சிக்கன நாளையொட்டி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    ஒருவர் சேமிக்கும் தொகையானது முதுமையில் நம்பிக்கையையும், பாதுகாப்பினையும் அளிக்கிறது. சிறுகச் சிறுகச் சேமிப்பதன் மூலம் குடும்பத்திற்குத் தேவைப்படக்கூடிய அவசரச்செலவுகள் குறிப்பாக, உயர்கல்விக்கான செலவு, திருமணச் செலவு, மருத்துவச் செலவு, வீடு கட்டுதல் போன்ற இனங்களில் ஏற்படும் செலவு போன்ற அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ள முடிகிறது.

    எனவே, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்து சிக்கனமாக வாழப் பழகிட வேண்டும். வாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்திட அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை தொடங்கிட வேண்டுகிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.
    • அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.

    மின்சார பேருந்து இயக்கம் தனியாருக்கு அளிக்கப்பட்டதால் போக்குவரத்து கழகத்திற்கு நஷ்டம் என்ற அ.தி.மு.க.வினரின் புகாருக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் காரணங்களுக்காக அ.தி.மு.க.வினர் தேவையற்ற புகாரை கூறி வருகின்றனர்.

    * மின்சார பேருந்தை பராமரிக்கும் பணியாளர்கள் அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை.

    * மின்சார பேருந்தின் விலை அதிகம் என்பதால் அதனை தனியார் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

    * பராமரிப்பு பணியாளர்கள் இல்லாததால் தயாரிப்பு நிறுவனமே பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

    * அதிக விலை கொண்ட பேருந்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மிகப்பெரிய செலவு ஏற்படும்.

    * புரிதல் இல்லாமல் அ.தி.மு.க.வினர் புகார் கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சநீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செல்லும் என்று கடந்த 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
    • மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுஜன் சமாஜம் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தமிழகத்தை உலுக்கிய மிக முக்கிய கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அடுத்தடுத்து திமுக அரசு முட்டுக்கட்டைகளை போடுவது கண்டிக்கத்தக்கது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே, அவரது கொலை வழக்கில் தமிழக காவல்துறை நடத்தி வரும் விசாரணை ஐயத்திற்கு இடமானதாகவே இருக்கிறது. அவரது கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதை விட, உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதில் தான் காவல்துறை தீவிரம் காட்டியது. உண்மைகள் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் அந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    அதைத் தொடர்ந்து தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி ஆணையிட்டது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழக அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்துக்கு சென்று சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செல்லும் என்று கடந்த 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

    தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்யவும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் அரசு விரும்பினால், சிபிஐ விசாரணையை ஏற்றுக் கொண்டு, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத திமுக அரசு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை நிறுத்தி வைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல்வாதிகள் சிலருக்கும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பலிகடாக்களாக மாற்றி விசாரணை வளையம் விரிவடையாமல் தடுக்கும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிபிஐ விசாரணையை தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருப்பது வரை திமுக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே உள்ளன.

    தமிழ்நாட்டில் அண்மைக்காலத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகள் தொடர்பான வழக்குகள் அடுத்தடுத்து சிபிஐ விசாரணைக்கும், சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு, நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு வழக்கு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

    மக்களின் நம்பகத் தன்மையை இழந்து விட்ட தமிழக காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே, இந்த வழக்கில் புதைந்து கிடக்கும் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதையும், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனுவை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×