என் மலர்
சென்னை
- ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார்.
- மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து, நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நாளை (இன்று) பதில் அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கான மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் வழங்கப்படும். மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
- 4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
* அறமே ஆட்சியின் அடித்தளமாக கொண்ட திராவிட மாடல் அரசு எல்லோர்க்கும் எல்லாம் என்ற கொள்கையில் செயல்படுகிறது.
* கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரே ஆண்டில் உத்தரபிரதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
* மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அதிகம் இடம்பெறும்.
* தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கானதாக உள்ளது.
* தமிழ்நாடு அரசு பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கும் உரிய கவனம் கொடுப்பதாக உள்ளது.
* மத்திய அரசு நமது உயிரினும் மேலான தமிழ் மொரியை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நோக்குகிறது.
* நாட்டிலேயே அதிகளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* 4 ஆண்டுகளில் 10, 649 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
* 4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.
* மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மாநில அரசே நிதி ஒதுக்கி பணி மேற்கொண்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் மத்தி அரசு நிதி வழங்கியது.
* கடந்த 3 ஆண்டுகளில் ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது.
* உலகில் உள்ள பல நாடுகள் செமிகண்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
* செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக அமைய வேண்டும் என்பதற்காக கோவை மண்டலம் மேலும் செழுமை அடையும் என நம்புகிறேன் என்றார்.
- திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- அரூர் செட்டிப்பட்டி ஊராட்சியில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபை கடந்த 14-ந்தேதி பட்ஜெட் உரையுடன் தொடங்கியது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இன்றும் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அவை தொடங்கியதும், கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் விவரம்:-
ரேசன் கடை புகார் பெட்டி மூலம் எத்தனை புகார்கள் வந்துள்ளன, மக்களுக்கு தெரியுமாறு புகார் பெட்டி வைக்க வேண்டும் என உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், தி.மு.க. ஆட்சியில் ரேசன் கடைகளில் புகார் பதிவேடுகள் மூலம் 97,535, புகார் பெட்டி மூலம் 875 புகார்கள் வந்துள்ளன. புகார் பதிவேடு பெட்டிகளை மக்களுக்கு தெரியும் வகையில் வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்றார். மேலும், ரேசன் கடைகளில் கைரேகை வைப்பத்தில் சிக்கல் இருந்தால், புகாரை உடனுக்குடன் சரிசெய்கிறோம். மேலும் ரேசன் கடைகளில் Brod Band சேவைகளை தடையின்றி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவு கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 34,902 ரேசன் கடைகளில் 6,218 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. நடப்பாண்டில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அசோக்குமார் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
திருப்பூர் காளிபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என எம்.எல்.ஏ. விஜயகுமார் கேள்வி எழுப்பினார். திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனிடையே, மதுரை திருமங்கலத்தில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டித் தரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரூர் செட்டிப்பட்டி ஊராட்சியில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
- சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சியின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. மேயர் பிரியா 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் முதன்முறையாக 8,404.70 கோடி ரூபாய்க்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருவாய் செலவினம் ரூ.5,214.09 கோடி, மூலதன செலவினம் ரூ.3,190.6 கோடி என மொத்தம் ரூ.8,404.70 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மேயர் பிரியா தலைமையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.
மாநகராட்சி கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகள் காலியாக உள்ளன. 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. சென்னை மாநகராட்சி பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்க கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டவில்லை.
பட்ஜெட் மீதான விவாதத்தில் மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் சுமார் 90 பேர் மட்டுமே மட்டுமே கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: தமிழகத்தில் நடைபெறும் கொலை சம்பவங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கண்டித்தது குறித்து?
பதில்: அவர் மட்டும்தான் கண்டிக்க வேண்டுமா, நாங்கள் கண்டிக்க கூடாதா? நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கொலை சம்பவத்தை கண்டிக்கும் உரிமை உண்டு. யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால் அச்சத்துடனே வெளிவரக்கூடிய ஒரு சூழல் உருவாகி உள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கொலையில் சம்பந்தப்பட்டவர் யார்? கொடநாட்டில் கொலை நடந்தது, அதை செய்தது யார்? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அதை சொல்ல முடியவில்லை. கொலை சம்பவங்கள் செல்போன் இருப்பதால் தற்போது வெளியில் வருகிறது. இல்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள் வெளியே வர வாய்ப்பு இல்லை.
தமிழகம் கொலைக்களமாக மாறி வருகிறது என்பது ஒரு வேதனை அளிக்க கூடிய செயல். கொலைக்கு முன்பு பேசியதை காவல்துறை ஒட்டு கேட்கலாமே, அப்படி செய்திருந்தால் சம்பவம் நடப்பதற்கு முன்பே தடுத்திருக்கலாம், ஏன் அதை செய்யவில்லை?
கேள்வி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்?
பதில்: தன்னிடம் தவறாக நடந்து கொண்டான் என்று புகார் அளித்த பெண்ணின் வாக்குமூலத்தை வெளியிட்ட காவல்துறை, ஞானசேகரன் வாக்குமூலத்தை ஏன் வெளியிடவில்லை? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
கேள்வி: டாஸ்மாக்கில் ரூ.ஆயிரம் கோடி ஊழல் குறித்த கருத்து என்ன?
பதில்: நடவடிக்கை எடுப்பவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது.நாங்கள் தான் போராட வேண்டும். மும்மொழிக் கொள்கை, தொகுதி வரையறை குறித்து பேசுகிறார்கள். அருந்ததியர், இஸ்லாமியர், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறீர்கள். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடிய வில்லை. ஆனால் இங்கே இருப்பவர்கள் மத்திய அரசை குற்றம் சாட்டி வரு கின்றனர்.
கேள்வி: விஜய், தி.மு.க. வின் பி டீம் என்கிறார்களே?
பதில்: விஜய்க்கு எங்களை போன்று வெளி யில் வர நேரமில்லை. நேரம் வரும்போது வெளியே வருவார்.முதலில் என்னை தி.மு.க.வின் பி டீம் என்றார்கள். அண்ணாமலை கருத்துக்கு நான்பதில் சொல்ல வேண்டியதில்லை.
கேள்வி: மீனவர் பிரச்சி னையில் நடவடிக்கை எடுக் கப்படுகிறதா?
பதில்: 800 பேருக்கு மேல்சுட்டுக் கொல்லப்பட்டி ருக்கிறார்கள். குஜராத்தில் மீனவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில், தமிழக மீனவருக்கு ஏன் பாதுகாப்பு இல்லை. மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார்கள். பிரச்சினை இல்லை என்றால் ஏன் போராட்டம் வருகிறது. பொழுதுபோக்குக்காக யாரும் போராட்டம் நடத்த வில்லை.
கேள்வி: தனக்கு வழங்கப் பட்ட பதக்கத்தை திருப்பிக் கொடுத்த கோபி நயினார், தலித் ஜனநாயக பிரச்சினை குறித்து பேசினால் எதிர்ப்பு வருகிறது என்கிறாரே?
பதில்: பெரியார் குறித்து, திராவிடம் குறித்த இங்கு பேசினால் எடுபடாது. நான் மட்டுமல்ல, யார் பேசினா லும் எடுபடாது. ஆளுகிற அரசின் லஞ்சம், ஊழலுக்கு ஆதரவாக பேசினால் ஆதரவு கிடைக்கும்.
எதிர் கருத்து ஏற்றுக்கொள்ளப் படாது. இங்கே ஜனநாயகம் இல்லை, கொடுங்கோன்மை தான் நடக்கிறது. சாராய ஆலை அதிபர்கள் முதல்வ ராக இருந்தால் சாராய விற்பனையில் ஆயிரம் கோடி ஊழல் நடக்கத்தான் செய்யும். சாராயம் விற்பதே குற்றம், ஆனால் அதிலும் ஊழல் என்பது அதைவிட குற்றம்.
அமலாக்கத்துறை நடவ டிக்கை எடுக்கக்கூடாது என்று தமிழக அரசு மனு அளித்தது வேதனை அளிக்கிறது. முதலில் ஒரு லட்சம் கோடி என்றார்கள், பிறகு ஆயிரம் கோடி என்றார்கள், இன்னும் கொஞ்ச நாள் கழித்து ரூ.100 கோடி, அதன் பிறகு எது வுமே இல்லை என்பார்கள்.
ஆயிரம்கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தடை கேட்கிறது என்றால் வேதனையான விஷயம். 2016-ல் டாஸ்மாக்கை மூடு வோம் என்றவர்கள், 2021-ல் அதைப் பற்றி ஏன் பேச வில்லை. தமிழகத்தில் டாஸ்மாக்கால் அதிக விதவைகள் ்உருவாகுகி றார்கள் என பேசினார்கள் தற்போது அதைவிட அதிக மாக இளம்விதவைகள் உரு வாகியுள்ளார்கள்.
கேள்வி: தமிழக சட்ட மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாக வேல்முருகன் கூறியது குறித்து?
பதில்: இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழுக்கும், தமிழ் மொழி பேசுபவர்க ளுக்கும் எதிராக உள்ளது. தமிழக மக்களின் நலன் குறித்து சட்டமன்றத்தில் பேச முடியவில்லை என்றால் எதற்காக இந்த அரசு. மக்கள் தேவையில்லை, ஓட்டுக்காகத்தான் மக்களை வைத்திருக்கிறார்கள். எது அதிக பிரசிங்கித்தனம், எது அக்கறை என்பது 2026 தேர்தலில் தெரியும். நாங்கள் கேட்கும் சின்னம் கிடைத்தவு டன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.66,480-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.8,270-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.66,160-க்கும் விற்பனையானது.
நேற்று மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480
19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,320
18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000
17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680
16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-03-2025- ஒரு கிராம் ரூ.114
19-03-2025- ஒரு கிராம் ரூ.114
18-03-2025- ஒரு கிராம் ரூ.113
17-03-2025- ஒரு கிராம் ரூ.113
16-03-2025- ஒரு கிராம் ரூ.112
- இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
- மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எங்களுடன் இணையும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை நான் மனதார வரவேற்கிறேன்.
மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழ்நாட்டின் 58 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நியாயமான எல்லை நிர்ணயம் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்த ஒரு மைல்கல் தருணமாகும். இந்த மிகப்பெரிய ஒருமித்த கருத்து, தமிழ்நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
இந்த வரலாற்று ஒற்றுமையை கட்டியெழுப்ப, நமது எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களின் தலைவர்களுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி, நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்தினர். தமிழ்நாட்டின் முன்முயற்சியாகத் தொடங்கியது இப்போது ஒரு தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
இது நமது கூட்டுப் பயணத்தில் ஒரு வரையறுக்கும் தருணம். இது ஒரு சந்திப்பை விட அதிகம் - இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கமாகும். இது இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்!
மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு அமலுக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
- தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சென்னை:
தமிழக அரசு போக்குவரத்துத் துறையின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களில் உள்ள போக்குவரத்துக்கு கழகங்கள் என 8 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக சாலை போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 25 மண்டலங்களில் 3 ஆயிரத்து 274 டிரைவர் - கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 364 பணியிடங்களும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள விழுப்புரம் மண்டலத்தில் 88 பணியிடங்கள், வேலூர் மண்டலத்தில் 50, காஞ்சீபுரம் மண்டலத்தில் 106, கடலூர் மண்டலத்தில் 41, திருவண்ணாமலை மண்டலத்தில் 37 இடங்கள் என மொத்தம் 322 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதே போன்று, கும்பகோணம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் செயல்படும் கும்பகோணம் மண்டலத்தில் 101 பணியிடங்கள், நாகப்பட்டினம் மண்டலத்தில் 136, திருச்சி மண்டலத்தில் 176, காரைக்குடி மண்டலத்தில் 185, புதுக்கோட்டை மண்டலத்தில் 110, கரூர் மண்டலத்தில் 48 என மொத்தம் 756 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
மேலும், சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள சேலம் மண்டலத்தில் 382 இடங்கள், தர்மபுரி மண்டலத்தில் 104 என மொத்தம் 486 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. கோவை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள கோவை மண்டலத்தில் 100, ஈரோடு மண்டலத்தில் 119, ஊட்டி மண்டலத்தில் 67, திருப்பூர் மண்டலத்தில் 58 என மொத்தம் 344 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதே போன்று, மதுரை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள மதுரை மண்டலத்தில் 190 பணியிடங்கள், திண்டுக்கல் மண்டலத்தில் 60, விருதுநகர் மண்டலத்தில் 72 என மொத்தம் 322 பணியிடங்களும், நெல்லை கோட்ட போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள நெல்லை மண்டலத்தில் 139, நாகர்கோவில் மண்டலத்தில் 129, தூத்துக்குடி மண்டலத்தில் 94 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
8 கோட்ட போக்குவரத்துக் கழகத்திலும் சேர்த்து நிரப்பப்பட இருக்கும் 3 ஆயிரத்து 274 டிரைவர்- கண்டக்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக 21-ந்தேதி (இன்று) மதியம் 1 மணி முதல் ஏப்ரல் 21-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட மேலும் விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, நேர்மூகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். மேலும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேர்வு குறித்த விவரங்கள் அவ்வப்போது விண்ணப்பப் பதிவு இணையதளத்தில் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
- சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டை விட அதிகளவில் கொளுத்துகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தை தணிக்க மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொதுவாகவே கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், இந்த ஆண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
- நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
- கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.
- மின்கம்பிகளை சீரமைக்கும் பணி பல மணி நேரம் நடைபெற்றது.
சென்னை:
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் நேற்று மாலை டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மாலை 4.30 மணிக்கு நடைபெற இருந்த சோதனை ஓட்டம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மாலை 6 மணி வரையில் நடைபெறாமல் இருந்தது. வெகுநேரமாக காத்திருந்தும், அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை நடத்த முன்வரவில்லை. இதற்கிடையே அந்த வழித்தடத்தில் சோதனை வாகனம் ஒன்று இயக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ரெயில் வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன. தீப்பொறிகளும் வெடித்து சிதறின. ரெயில் பாதை அருகில் இருந்த மின்வினியோக பெட்டிகளும் வெடித்து சிதறின.
இதையடுத்து, மின்வினியோகம் முழுவதும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர், தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பராமரிப்பு வாகனம் மூலம் சென்று அறுந்து விழுந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.மின்கம்பிகளை சீரமைக்கும் பணி பல மணி நேரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பூந்தமல்லி- போரூர் இடையேயான மெட்ரோ ரெயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரெயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.
- சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
- நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 மற்றும் 2018, விதி-16-ன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் வருகிற 29-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் 4-ஏ-இல் உள்ள பிரிவுக் கூறு 15 ஏ(11)-இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






