என் மலர்
சென்னை
- எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் மின்சார கம்பிகளில் தீப்பற்றியதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது.
- மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு வணிக வளாகமாகும்.
இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள லிஃப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. லிஃப்டில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் பதறியடித்து ஓடினர். தீவிபத்து காரணமாக கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் மாலுக்கு சென்றவர்கள் சிதறி ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர். மாலில் இருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
மால் முழுவதும் சூழ்ந்துள்ள புகை மூட்டத்தை இயந்திரங்கள் மூலம் வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாலில் உள்ள 4 வழிகள் மூலமாகவும் புகையை வெளியேற்றப்படும் பணி நிறைவடைய 4 மணி நேரம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
மாலில் உள்ள தியேட்டரில் சினிமா பார்க்கச் சென்றவர்கள் வெளியே காத்திருக்கின்றனர்.
- அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!
- மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது.
சென்னை:
மசோதாக்களை நிறைவேற்ற ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் வரை ஓயப்போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும்!
* சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்!
குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது. சொல்லப் போனால்,
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது.
* அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது!
* சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை.
* மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரையின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம்.
-என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் v. குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, "நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்கறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.
*காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம்,
*சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களின் கூற்றை உச்சநீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம்.
அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்களின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம்! என்று கூறியுள்ளார்.
- நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், பின்னர் இறங்குவதுமான சூழலே நீடிக்கிறது. அப்படியாக கடந்த 14-ந்தேதியில் இருந்து விலை குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் விலை அதிகரித்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,460-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,680 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 169 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000
19-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
18-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,200
17-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,320
16-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-11-2025- ஒரு கிராம் ரூ.173
19-11-2025- ஒரு கிராம் ரூ.176
18-11-2025- ஒரு கிராம் ரூ.170
17-11-2025- ஒரு கிராம் ரூ.173
16-11-2025- ஒரு கிராம் ரூ.175
- ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
- பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது.
சென்னை:
ஒரு காலத்தில் சொத்துக்கு பட்டா வாங்குவது என்பது குதிரை கொம்பாக இருந்தது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது அது எளிதாகிவிட்டது. அதாவது https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதாக பட்டா பெற்றுக்கொள்ளலாம். அதேபோல இப்போது பத்திரப்பதிவு செய்தவுடன் உட்பிரிவு இல்லாத சொத்துகளுக்கு உடனடி பட்டா மாறுதலும் செய்யப்படுகிறது.
தற்போது சொத்து பற்றிய உரிமை விவரங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழக அரசின் வருவாய்த்துறை புதிய ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
அதன்படி ஒரு சொத்தின் உரிமையாளர் யார், அவரது பெயர் என்ன? இதற்கு முன்பு இந்த சொத்து யார் பெயரில் இருந்தது? அதோடு வங்கியில் இந்த சொத்து அடமானத்தில் இருக்கிறதா? இந்த சொத்தின் மீது என்னென்ன பறிமாற்றங்கள் நடந்து இருக்கிறது என்பதை பத்திரப்பதிவு துறை வழங்கும் வில்லங்கச் சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
அதே நேரத்தில் ஒரு சொத்தின் தற்போதைய உரிமையாளரை வருவாய்த்துறை மூலம் பட்டா மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பட்டாவில், பத்திரப்பதிவுத்துறை வழங்கும் வில்லங்க சான்றிதழ் போல் அனைத்து விவரங்களையும், பரிமாற்றங்களையும் தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தமிழக அரசு, அதற்கு தீர்வு காணும் வகையில் தற்போது''பட்டா வரலாறு" என்ற புதிய சேவையை பொதுமக்களுக்காக கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம், அந்த நிலத்தின் முன்பிருந்த பட்டா வைத்திருந்தவர்களின் பெயர்கள், பெயர் எப்போது மாற்றப்பட்டது, எந்த ஆணையின் பேரில் மாற்றம் நடைபெற்றது, பட்டா எந்த காலக்கட்டத்தில் யாரிடம் இருந்தது போன்ற விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.
இந்த பட்டாவுக்கு வில்லங்க சான்றிதழ் பெறும் நடைமுறை அடுத்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் தொடங்குகிறது. முதல்கட்டமாக ஒரு தாலுகாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பட்டா வில்லங்க சான்றிதழ் பெற பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும். சோதனை முறை வெற்றி பெற்றுவிட்டால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவார். மேலும் தற்போதைய நிலையில் இந்த பட்டா வரலாறு 2014-ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு எடுக்க முடியும்.
- இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை எழும்பூர் அரசு கண் ஆஸ்பத்திரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கண்புரை 82 சதவீதம், விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதம், நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1 சதவீதம், கண் நீரழுத்த நோய் பாதிப்பு 1.3 சதவீதம் மற்றவை 10.1 சதவீதம் ஆகும். 14.3 சதவீத குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலம் பார்வையை சரி செய்ய வாய்ப்பு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 93 பள்ளி குழந்தைகளுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 2 லட்சத்து 214 குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளி குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும்.
- காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24-ந்தேதி (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வால், தமிழ்நாட்டில் இன்று முதல் 25-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளையும், நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
24-ந்தேதி (திங்கட்கிழமை) கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
- மூத்த உறுப்பினர் முத்துவேலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பேசினார்.
- இதைக் கண்டு சிவகுமார் ஆனந்த கண்ணீர் விட்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் 41-வது நாளாக நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் ஆலங்குளம் தொகுதி சார்பில் பங்கேற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசிய சிவகுமார், "எங்க அப்பா முத்துவேல் 1967-ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா?'" என கோரிக்கை விடுத்தார்.
உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அப்பாவுக்கு போன் பண்ணுங்க, நானே பேசி வரச் சொல்லுறேன்" என கூறி, அவரது தந்தையுடனும் போனில் பேசினார். இதைக் கண்டு சிவகுமார் ஆனந்த கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் நேற்று தொலைபேசியில் பேசிய ஆலங்குளம் மூத்த உறுப்பினர் முத்துவேலை நேரில் அழைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கவுரவித்தார்.
அப்போது முதலமைச்சரிடம் பேசிய முத்துவேல், "எனது மகன்களுக்கு திராவிடமணி, ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கிறேன்" என்று கூறி பெருமிதம் அடைந்தார்.
- பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல்.
- திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை.
தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படுவதாக திமுக அரசு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் நோக்கில் செயல்படும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
சமீபத்தில், "தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்" என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நிகழ்ச்சி நடத்தினார் பொம்மை முதல்வர்.
இந்நிலையில், சென்னையில் 60% பேருக்குக் கூட உணவு விநியோகம் செய்யப்படவில்லை எனவும், பல மணி நேரம் உணவுக்காக தூய்மைப் பணியாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும், தற்போது, கோவையில் செம்மொழிப் பூங்கா ஊழியர்களுக்கு குப்பை வண்டியில் உணவு கொண்டு வரப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தேர்தலுக்கு முன், தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அதைக் கேட்கும் தூய்மைப் பணியாளர்கள் ஜனநாயக உரிமையையும் பறித்துக்கொண்டு, அராஜகத்தால் அவர்களின் போராட்டங்களை ஒடுக்கி விட்டு, Damage Control ஆக ஒரு திட்டத்தைத் தருகிறேன் என்ற பெயரில் ஒரு போட்டோஷூட் நடத்திவிட்டு, அதையும் கைவிட்டுவிட்டார் இன்றைய பொம்மை முதலமைச்சர்.
ஆனால், குப்பை வண்டியில் சாப்பாடு போட்டு இழிவு படுத்துவது என்பது, இதற்கு இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தவே வேண்டாம் என்றே சுயமரியாதை உள்ள எவருக்கும் தோன்றச் செய்கிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது எளிய மக்களை ஏமாற்றுவதிலும், ஆட்சிக்கு வந்தபின் அதே மக்களை இழிவுபடுத்துவதிலும் திமுக-வை விட வல்லவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகிலே எவரும் இல்லை!
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முறையாக, அவர்களுக்கு உரிய மரியாதையுடன் செயல்படுத்திட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
- அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால், அவற்றை கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் வருத்தமளிக்கின்றன.
நெல் ஈரப்பத அளவு அதிகரிக்கப்படாவிட்டால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்க வேண்டி வரும். எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி.
- நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு.
கோவை - மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை முடக்கி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
* கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு,
* #SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, #Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு,
* மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி,
* நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு,
* தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு
* என அனைத்துக்கும் எதிராகத் #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “கவர்னர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
- காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது.
தி.மு.க. எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?" என்று கேட்டபோது, "கவர்னர் வேலை பார்ப்பது" என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.
இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கியூஆர் குறியீடுகள் ரெயில் நிலைய உணவகங்கள் மற்றும் கடைகளில் இடம்பெற்றிருக்கும்.
- ஸ்கேன் செய்தவுடன், அவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து அனுப்பலாம்.
சென்னை:
சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் இயங்கும் கடைகள், உணவகங்களில் குறை தீர்க்கும் திட்டத்தை தெற்கு ரெயில்வே கடந்த வாரம் தொடங்கியது. அதன்படி உணவு பொருட்கள் தரமில்லாவிட்டால் கியூஆர் குறியீடு மூலம் புகார் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. இதன்மூலம் தரமற்ற உணவை விற்ற ஒரு உணவக ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ரெயில் நிலையங்களில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தரமில்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உணவகங்கள் மீது புகார் செய்ய கியூஆர் குறியீடு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த கியூஆர் குறியீடுகள் ரெயில் நிலைய உணவகங்கள் மற்றும் கடைகளில் இடம்பெற்றிருக்கும். பயணிகள் உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்வதையும், கருத்துகளை பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்குவதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலித்தல், சேவையில் குறைபாடு, உணவின் மோசமான தரம், குறைவான அளவு, சுகாதாரமற்ற தண்ணீர் உள்ளிட்டவை தொடர்பான எந்தவொரு குறைகளையும் இதில் பதிவு செய்யலாம். சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் அமைந்து உள்ள ஒரு சில கடைகளில் உணவின் தரம் மோசமாக இருப்பதாகவும், அதிக விலை வசூலிப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. ரெயில்வே அதிகாரிகள் சரிபார்த்ததில் புகார்கள் உண்மையானவை என்பதை கண்டறிந்து கடைகளின் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்துள்ளனர். சென்னை கோட்டத்தில் உணவு மற்றும் பானங்களை விற்பனை செய்யும் 50 கடைகள் உள்ளன. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயணிகளுக்கு அந்த கடையின் இருப்பிடம் மற்றும் நிலைய குறியீடு பற்றிய விவரங்கள் வழங்கப்படுகின்றன. ஸ்கேன் செய்தவுடன், அவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்து அனுப்பலாம்.
புகார் பதிவு செய்யப்பட்டவுடன், புகார்கள் தொடர்பான எச்சரிக்கைகள் உடனடியாக அந்தந்த ஆய்வாளர்கள் மற்றும் ரெயில் நிலைய மேலாளர்களுக்கு அனுப்பப்படும். இதனால் அவர்கள் பிரச்சினைகளை உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
உணவு பொருட்களின் மீது அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பது மட்டுமல்லாமல், கடைகளில் போலி உணவு பொருட்கள் விற்பனையை தடுக்கவும் உதவும் என்பதால் இந்த முயற்சி மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






