என் மலர்
சென்னை
- அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- போக்குவரத்து போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்தனர்.
சென்னை:
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள நெடுஞ்சாலை இன்று காலை பரபரப்பாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
அப்போது சென்ட்ரல் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார். கமிஷனர் அலுவலகம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தை தாண்டி பெண் சென்றபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மின்னல் வேகத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக ஓடி சென்று பார்த்தனர். அதற்குள் சரக்கு வாகனம் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் விபத்தில் பலியான பெண் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் ஸ்ரீதேவி. 42 வயதான இவர் புதுப்பேட்டை ஷேஷாத்திரி தெருவை சேர்ந்தவர் ஆவார். புரசைவாக்கம் பகுதிக்கு சென்று விட்டு புதுப்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றபோது தான் இவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் நிற்காமல் சென்ற வாகனத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடித்தனர்.
அதன் பிறகே விபத்தை ஏற்படுத்தியது சரக்கு வாகனம் என்பது தெரிய வந்தது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது தொடர்பாக டிரைவரிடம் விசாரணை நடத்திய போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 11-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 13-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.
- சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.
திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ஜமால் முகமது கல்லூரிக்கு ஏற்கனவே 2006-ல் நிறுவன நாள் விழாவுக்கு வந்திருக்கிறேன்.
* 2011, 16-ல் யுசிஜி ஆற்றல்வள தனித்தகுதி பெற்ற கல்லூரியாக ஜமால் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டது.
* மாணவர்களால் தான் கல்லூரிக்கு பேரும் புகழும் கிடைக்கிறது.
* தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி, புதிய வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம்.
* நாட்டின் வளர்ச்சி என்பதற்கு அடிப்படை கல்வி, அதனால்தான் தி.மு.க. அரசு கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.
* சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு.
* கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* இஸ்லாமிய சகோதரர்களின் உரிமைகளை காக்கும் இயக்கமாக திராவிட மாடல் அரசு இருக்கும் என உறுதி தருகிறேன்.
* 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
- பாரிஜாதத்தின் குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த பாரிஜாதம் என்பவர் சில நாள்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. தற்கொலை செய்து கொண்ட பாரிஜாதம் பணி தொடர்பாக தம்மை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகளும், ஓர் ஆசிரியரும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரே மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார்.
ஆனாலும் கூட பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தான் அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்த சிக்கலில் அரசும், காவல்துறையும் இனியும் தாமதிக்காமல் பாரிஜாதத்தின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். பாரிஜாதத்தின் குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல், விளம்பரம் மட்டுமே செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
- சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வரும் 15-ந்தேதி தொடங்கி டிசம்பர் 14-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின் பெயரால் மக்களை அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 4 மாதங்களில் நான்கு கட்டங்களாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். வழக்கமாக மக்களுக்குத் தேவைப்படும் சாதிச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், கலைஞர் கைவினைத் திட்டம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி திட்டம், முதியோர் உதவித்தொகை, பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்டவற்றுக்காகத் தான் இந்த முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க முடியும். இவை வழக்கமாகக் கிடைக்கும் சேவைகள் தான்.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல், விளம்பரம் மட்டுமே செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே, உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதை விடுத்து சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாயனூர் கதவணையில் தண்ணீரை திறக்கும் நிலை உண்டானால் மட்டுமே உபரிநீர் கடலில் கலப்பது குறையும்.
- மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தின் செங்கிப்பட்டி-பூதலூர், புதிய கட்டளைமேட்டு வாய்க்கால் மூலம் 61 ஏரிகளும், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் 24 ஏரிகளும் நிரப்பப்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்தப் படுகிற அதே வேளையில்தான்செங்கிப்பட்டி மற்றும் பூதலூர் பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுபோய் கிடக்கிறது.
கல்லணைக்கு மிக அருகிலுள்ள ஏரி, குளங்களே இந்த நிலையில்தான் உள்ளது.
புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், உய்யகொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் 30 ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக பாசனவசதி கிடைத்து வருவதை நினைத்து மகிழ்வதா மேட்டூர் அணைக்கு வருகிற நீர், உபரி நீராக காவிரியிலும் முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடத்திலும் திறக்கப்பட்டு மொத்த நீரும் கடலில் போய் கலப்பதை எண்ணி வேதனைப்படுவதா என தெரியவில்லை.
செங்கிப்பட்டி-பூதலூர் பகுதிகளில் வறண்டுபோய் கிடக்கும் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து எப்போதுதான் என்று விவசாயிகளும், பொதுமக்களும் ஏங்கிக் கிடக்கிறார்கள்.உபரி நீரை மாயனூர் கதவணையில் திருப்பி புதிய கட்டளைமேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலமாக சுற்றுப்பகுதிகளில் இருக்கிற ஏரி நீர்நிலைகளை நிரப்பிட தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். வருகிற காலங்களில் மாயனூர் கதவணையில் தண்ணீரை திறக்கும் நிலை உண்டானால் மட்டுமே உபரிநீர் கடலில் கலப்பது குறையும்.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது. இப்படி நடக்காமல் தடுத்தால் மட்டுமே 85 ஏரிகளும், குளங்களும், நீர் நிலைகளும் காப்பாற்றப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உரிய தீர்வு காண விரைந்து முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,080-க்கும் நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,0060 ரூபாய்க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080
06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
04-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-07-2025- ஒரு கிராம் ரூ.120
07-07-2025- ஒரு கிராம் ரூ.120
06-07-2025- ஒரு கிராம் ரூ.120
05-07-2025- ஒரு கிராம் ரூ.120
04-07-2025- ஒரு கிராம் ரூ.120
- 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
- பொது வேலை நிறுத்தத்திற்கு 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
சென்னை:
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.
இந்த பொது வேலை நிறுத்தத்திற்கு 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர், நடத்துநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என்றும் மாநகர் போக்குவரத்துக் கழக ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுநர்கள் முழு அளவில் இன்று பணியில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 13 தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.
- பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை:
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்த பொது வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால் பேருந்து சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முக்கிய தொழிற்சங்கங்களின் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் சென்னையில் இன்று பேருந்து சேவை பாதிக்கப்படாது என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அரசு பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிற்சங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அதற்குரிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முழுமையாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (10.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர்: கேலக்ஸி ரோடு, பெரியார் தெரு, சிவபாதம் தெரு.
திருமுல்லைவாயல்: அம்பேத்கர் நகர் மெயின் ரோடு, ஆட்டந்தாங்கல், பாலமுருகன் நகர், பிள்ளையார் கோவில் தெரு, கண்ணன்கோவில், ஆட்டந்தாங்கல் பாலம், கே.கே.நகர், சிவந்தி ஆதித்தனார் நகர், பெருமாள் நகர், வி.பி.ஆர்.நகர், சக்திநகர்.
அடையாறு: பெசன்ட் நகர் 6 முதல் 15வது குறுக்குத் தெரு, 1வது, 2வது பிரதான சாலை, ஆர்பிஐ குடியிருப்புகள், கக்கன் காலனி, 4வது, 16வது, 29வது குறுக்குத் தெரு, 2வது, 3வது, 7வது அவென்யூ, டைகர் வர்தாச்சாரியார் சாலை நீட்டிப்பு.
சோழிங்கநல்லூர்: ராஜேஷ் நகர், அதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி மெயின் ரோடு, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாமரை தெரு, சோமு நகர், தேவி கருவிழி நகர், யுனைடெட் காலனி, பெல் நகர் 4வது, 5வது குறுக்குத் தெரு, புஷ்பா நகர்.
தாம்பரம்: மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், விஜிபி சரவணா நகர், ஸ்ரீதேவி நகர், அரவிந்த் நகர், கருமாரி அம்மன் நகர், அம்பிகா நகர், காயத்திரி கார்டன், பார்வதி நகர், சிவசக்தி நகர், சரவணா நகர் ஒரு பகுதி, சீனிவாச நகர், சுந்தர் அவென்யூ.
கோயம்பேடு மார்க்கெட்: ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.
- விழுப்புரத்தில் வருகிற 20ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் .
- பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
பாமக கட்சியில் டாக்டர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தேர்தலுக்கான வேட்பாளர் மனுவில் நான்தான் கையெழுத்திடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பனையூரில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டப்பட்ட செயற்குழு கூட்டம் செல்லாது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
8 தீர்மானங்கள் பின்வருமாறு:-
1. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அன்புமணி ராமதாசின் செயல்பாடுகளுக்கு துணை நிற்கவும், அவரது கரங்களை வலுப்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது
2. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் வரும் ஜூலை 20 ஆம் நாள் போராட்டம்
3. பாட்டாளி மக்கள் கட்சியின் 37ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்
4. அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி சார்பில் போராட்டங்கள்
5. அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றி பெறச் செய்ய கடுமையாக உழைப்போம்!
6. திருப்புவனம் காவல் நிலையக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்; அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!
7. பெண்களும், குழந்தைகளும் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழ்நாடு; சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!
8. தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்ட திமுக அரசை அகற்ற பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது.
- வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
- இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செல்வப்பொருந்தகையை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர், வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. திருப்பெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான கு.செல்வப்பெருந்தகை விழாவில் பங்கேற்க வந்துள்ளார்.
ஆனால், அங்கு பணியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அவரை சமூக ரீதியான உணர்வுடன் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். ஆகம விதிகள் என்ற பெயரில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையே அவமரியாதையாக நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதே நிகழ்வில் பங்கேற்ற வேறு சில கட்சிகளின் தலைவர்களுக்கு அனைத்து விதமான மரியாதைகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகைக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் முன் பதில் அளித்திட வேண்டும்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் உடனடியாக உரிய விசாரணைகள் நடத்தி இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.






