என் மலர்
சென்னை
- நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
- வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்.
கோவை அரசு மருத்துவமனையில் வெகு நேரமாகியும் நோயுற்ற ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்காததால், அவரது மகன் அவரை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவை அரசுப் பொது மருத்துவமனையில் 2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
மலைப்பகுதிகளில் சாலை வசதியின்றி நோயாளிகளைத் தூளி கட்டித் தூக்கிச் செல்வதில் தொடங்கி, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்வது வரை மருத்துவத்திற்காக மக்களை அலைக்கழிப்பது தான் "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா" முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? ஆட்சி முடியும் தருவாயிலாவது, ஆரவார வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.
- திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னையில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.
சென்னையில் இன்று மதியம் இரண்டு மணி வரையிலுமே வெயில் உச்சத்தில் இருந்த நிலையில், அதன் பிறகு திடீரென மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, சேப்பாக்கம், காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, மந்தவெளி, பட்டினப்பாக்கம், பாரிமுனையில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மேக மூட்டமாக காணப்படுகிறது.
சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும்.
- பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.
தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும். இது சாதாரண தடையோ அரசியல் சச்சரவோ அல்ல — மக்களின் நம்பிக்கையை நசுக்கி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியாகும்.
இந்த அராஜகத்தில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங் நேரடியாக பங்கேற்றிருப்பதும், யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாசிச பாஜக கும்பல் ஆட்சி இந்தச் சதியின் பின்னணியில் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
மக்களின் ஆதரவு கொண்ட மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எழுச்சியை தடுக்க முடியாமல், பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.
இந்தப் பாசிசக் செயல்களில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மொத்தமாகச் ஈடுபட்டு, இந்திய ஜனநாயகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தையே தடுக்கும் நிலை உருவாக்குவது, நாட்டின் ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயல் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் மறக்க மாட்டார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் இந்தச் செயலை வன்மையாக் கண்டிப்பது மட்டுமல்ல, மக்களிடம் நேரடியாகக் கூறுகிறேன், இது எச்சரிக்கை மணி அல்ல, இது போராட்ட மணி.
ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக புரட்சியின் மேடையாக மாறும். மக்களின் எழுச்சியால் பாஜகவின் அடக்குமுறை சிதறி நொறுங்கி, ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும்.
மோடி, ஆர்எஸ்எஸ், யோகி ஆதித்தநாத் — நீங்கள் ஜனநாயகத்தை அடக்க முயற்சி செய்தாலும், மக்களின் தீர்ப்பு உங்களை வீழ்த்தும். இந்திய ஜனநாயகம் எரியும் நெருப்பாக எழுந்து, உங்களின் பாசிசக் கொடூரங்களை முற்றாக அழித்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திவிரமாக தயாராகி வருகிறார்.
நாம் தமிழர் கட்சியின் பலமே இளைஞர்கள்தான் என்பதால் தேர்தலில் அவர்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட உள்ளது.
இதற்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கட்சியில் சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று 130 பேரை தேர்தலில் களமிறக்க சீமான் திட்டமிட்டுள்ளார்.
தங்களது பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி இளைஞர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு அதில் இருந்து இளம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த 130 பேரில் 65 பேர் இளம் பெண்களாக இருப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற தேர்தலில் 117 பெண் வேட்பாளர்களும் களம் காண உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 134 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாம் தமிழர் கட்சியினர் செய்து வரு கிறார்கள். அந்த மாநாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு விவரங்களையும் சீமான் வெளியிட உள்ளார்.
மாநாட்டு மேடையில் இருந்தே தனது தேர்தல் பிரசாரத்தையும் சீமான் தொடங்குகிறார். இதன் பின்னர் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட உள்ள சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சி அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து சீமான் தனது அடுத்த கட்ட பாய்ச்சலை சட்டமன்ற தேர்தலில் காட்டி கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
- வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா.
- வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில் "அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது இது முதல்முறை. உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவுக்கு எனக்கு சந்தோஷம்" என்றார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"ராஜாவைத் தாலாட்டும் தென்றல்" - நம் பாராட்டு விழா!
இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா!
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 சேவைகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கும், 2 சேவைகள் திருப்பதியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.
- தற்போது எல்.எச்.பி. பெட்டிகளுடன் கூடிய நவீன பாதுகாப்பு அம்சங்களுடன், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை - திருப்பதி இடையே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் 1976-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த ரெயில் சென்னை - திருப்பதி இடையேயான 145 கி.மீ. தூரத்தை 3.30 மணி நேரத்தில் சென்றடைகிறது.
இந்த ரெயில் தினமும் 4 சேவைகள் இயக்கப்படுகிறது. 2 சேவைகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கும், 2 சேவைகள் திருப்பதியில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் ஏற்கனவே இழுவை ரெயில் என்ஜின் இணைக்கப்பட்டு இருந்தது. இப்போது ராஜ்தானி மற்றும் வந்தே பாரத் ரெயிலில் இருக்கும் இந்த அம்சங்கள் கடந்த 1990-ம் ஆண்டு காலகட்டத்திலேயே சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்தது. ரெயில் பயண நேரத்தை 30 நிமிடங்கள் குறைப்பதற்காக இந்த வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. அதன்பிறகு கடந்த 2016-2017-ம் ஆண்டு இழுவை ரெயில் என்ஜின் அகற்றப்பட்டு வழக்கமான ஐ.சி.எப். பெட்டிகளாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எல்.எச்.பி. பெட்டிகளுடன் கூடிய நவீன பாதுகாப்பு அம்சங்களுடன், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ரெயில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நவீன வசதிகளை கொண்ட சப்தகிரி ரெயிலில் 10 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு குளிர்சாதன பெட்டி, 4 பொதுப்பெட்டிகள், மாறுத்திறனாளிகள் செல்லும் வகையிலான ஒரு பெட்டி ஆகியவையும் அடங்கும்.
சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பெட்டிகளை கொண்ட நவீன சப்தகிரி ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
- தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.
- கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, ஜெர்மனி நாட்டின், கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன், (ஓய்வு), இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோரிடம் வழங்கினார்.
பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரத்திற்கும் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1.9.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை தொடர்ந்து, தொய்வின்றி, இயங்கிட தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் உடனடியாக கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 7.7.2021 அன்று உத்தரவிடப்பட்டு, வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது.
- தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், தி.மு.க. அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. தி.மு.க.வின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.
தி.மு.க.வினருக்கு சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு. தி.மு.க.வின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
- இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களாலும் முன்மொழியபட்டவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் மேதகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வு பெற்று உள்ளது இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள் ஆகும்.
தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.
- சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். இதற்கு ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறுகையில்,
அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தென் தமிழ்நாட்டில் தேவையற்ற வசனங்களை பேசிவிட்டு, பசும்பொன் தேவர் திருமகனார் பெயரில் எடப்பாடி பழனிசாமி செய்யும் சமூக விரோத நடவடிக்கைகளை மக்கள் உறுதியாக ஏற்ப மாட்டார்கள்.
எல்லா சமுதாக மக்களும் தேவரை மதிக்கின்ற பூமியில், சகோதரராக வாழ்கின்ற பூமியில் பசும்பொன் ஐயாவுக்கு இழுக்கு ஏற்படும்விதமாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
- திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வருகிற 13-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து அவர் தனது பிரசார பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதில் 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு வரும் விஜய் முதலில் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் உரையாற்றுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் திருச்சியில் புதிய பாதையில் தனது பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.
முதலில் டி.வி.எஸ் டோல்கேட் தொடங்கி தலைமை தபால் நிலையம், பாரதியார் சாலை, மரக்கடை வழியாக சத்திரம் செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது.
சத்திரம் பேருந்து நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால் தற்போது பிரசார பயண பாதையை மாற்றி உள்ள விஜய், டி.வி.எஸ் டோல்கேட்டில் பிரசாரத்தை தொடங்கி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே பேச உள்ளார். சத்திரம் பேருந்து நிலையம் செல்லாமல் காந்தி மார்க்கெட் வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து விஜய் அரியலூர் செல்கிறார்.
திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற உள்ள விஜய் பிரசாரத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க. ஏற்றுக்கொண்டது. ஸ்டார் தியேட்டர், தமிழ்ச்சங்கம் மற்றும் காந்தி மார்க்கெட் ஆகிய 3 இடங்களில் தற்காலிக பார்க்கிங் அமைக்க த.வெ.க. ஒப்புக்கொண்டது.
- வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
- மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது.
சென்னை:
சென்னையில் இன்று 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அடையாறு காந்தி நகர் 3-வது தெருவில் வசித்து வரும் இந்திரா என்ற டாக்டர் வீட்டில் இன்று காலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
இதே போன்று வேளச்சேரியில் தொழில் அதிபர் அமித் பிஸ்நாத் என்பவரது வீட்டிலும், மேற்கு மாம்பலத்தில் சுப்பிரமணி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற புகாரின் பேரில் சோதனையை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் எது தொடர்பாக சோதனை நடைபெற்று உள்ளது என்பது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.
சோதனை முடிவில்தான் அது பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






