என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய் ரசிகர்களை தற்குறி என்று விமர்சிக்க வேண்டாம்: திமுக எம்.எல்.ஏ. எழிலன் அட்வைஸ்
- பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை
- பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிபதில் இருந்து திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதே சமயம் த.வெ.க. கூட்டங்களில் விஜயை பார்க்க அவரது ரசிகர்கள் மரம் மற்றும் டிரான்ஸ்பார்மர்களில் மீது ஏறியதை கிண்டலடிக்கும் விதமாக விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடித்தனர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்களை தற்குறிகள் என்று கூறவேண்டாம் என திமுக எம்.எல்.ஏ. எழிலன் தெரிவித்துள்ளார்.
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.எல்.ஏ. எழிலன், "தற்குறி என்று பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்களை விமர்சிப்பது தவறானது. நாம் அவர்களுடன் உரையாடவில்லை என்பது நமது தவறு. பள்ளி, கல்லூரிகளில் சமூகநீதியைக் குறித்து அவர்கள் கேட்கவில்லை. நாம் அவர்களுடன் உரையாட தொடங்கினால், அவர்கள் தெளிவடைவார்கள்.
சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்களை 'தற்குறி' என அவமானப்படுத்துவது சங்கிகளின் சதி. சோசியல் மீடியாவில் அவர்களை தற்குறி என அழைப்பது தேவையில்லை. அது சங்கிகளின் திட்டம். பிற்படுத்தப்பட்ட, பட்டியலின இளைஞர்கள் திமுக பக்கம் வராமல் தடுக்க இதை செய்கிறார்கள்.நாம் அந்த சதியை உணர வேண்டும்.
தவெக தலைமை சுயநலமாக இருக்கலாம். ஆனால், அந்தக் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம்தான். அவர்களை விமர்சிக்காமல், அவர்களுடன் உரையாட தொடங்க வேண்டும். அவர்கள் சங்கிகள் அல்ல, நம்ம பசங்கதான். அவர்களை நாம் நெருக்கமாகப் பேச வேண்டும்" என்று தெரிவித்தார்.






