என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ்நாடு மழை"
- வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது.
- கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.
சென்னை:
வடகிழக்கு பருவமழையில் சற்று இடைவெளி ஏற்பட்டு, தமிழ்நாட்டில் மழை குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் வெப்பசலனத்தால் ஆங்காங்கே மழை பெய்தாலும், பருவமழை அளவுக்கு இல்லை. இந்த இடைவெளிக்கு பிறகு, வடகிழக்கு பருவகாற்று தமிழ்நாட்டில் முழுவதுமாக நேற்று முன்தினம் முதல் வீசத் தொடங்கியிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்தடுத்த 3 நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் 16-ந் தேதி முதல் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதன்படி, வருகிற 15-ந் தேதி இலங்கையையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஒன்று உருவாகிறது. இதன் காரணமாக 16-ந் தேதி முதல் மழை பெய்யத் தொடங்கும்.
17, 18-ந் தேதிகளில் ஒட்டுமொத்த கடலோர மாவட்டங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பதிவாகக்கூடும் எனவும், 18, 19-ந் தேதிகளில் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்த தாழ்வுநிலை, தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து லட்சத்தீவு நோக்கி செல்கிறது. இருப்பினும் கிழக்கு திசை காற்றை ஈர்ப்பதால், 20-ந் தேதியும் தமிழ்நாட்டில் மழைக்கான சூழல் ஏற்படும்.
இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி முதல் 25-ந்தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையை கொடுக்கும் என்றும், இதன் மூலம் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்து காணப்படும் என்றும், பெரிய அளவில் வெள்ளப்பாதிப்பு இருக்காது என்றாலும், நீர்நிலைகள் நிரம்பும், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.
அதனையடுத்து 3-வது நிகழ்வாக தெற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி, அடுத்தடுத்த நிலைகளை கடந்து, புயலாக வலுப்பெறுவதற்கான சாதகமான சூழல் இருக்கிறது. இது முந்தைய 2 நிகழ்வுகள் நிறைவுபெற்றதும், இந்த புயல் எப்படி இருக்கும்? எங்கு கரையை கடக்கும்? என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும்.
- 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அடுத்த மூன்று தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதி மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.






