என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
    • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

    * தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.

    * தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

    * கடந்த 24 மணிநேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவானது. அதிகபட்சமாக காயன்பட்டினம் திருச்செந்தூரில் 15 செமீ மழை பதிவானது.

    * அக்.1 - 16 வரை 16 நாட்களுக்கான இயல்பான மழை அளவு 7 செமீ ஆகும். ஆனால் இந்த் காலட்டத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளது. இதன்மூலம் இயல்பை விட 37% அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

    * குமரிக்கடல் அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    * வரும் 18 ஆம் தேதிவாக்கில் கேரளா -கர்நாடகா பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    * வரும் 24ஆம் தேதிவாக்கில் தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நாகணர்த்து வலுவடைய வாய்ப்புள்ளது.

    * மழை காலங்களில் பல புயல்கள் உருவாக வாய்ப்பு. எத்தனை புயல் உருவாகும் என்பது இப்போது சொல்ல முடியாது

    * அடுத்த 7 தினங்களில் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    * அடுத்த 5 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    * சென்னையை பொறுத்தவரை நகரின் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    • உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ்.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கூட்டுறவு சங்கங்களில் ஒதுக்கப்படக்கூடிய உபரித் தொகையை கணக்கில் கொண்டு அச்சகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் வழங்கப்படும்.

    உபரி தொகை இல்லாமல் உள்ள சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்கள் பணிபுரிந்து போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர இலாபம் ஈட்டும் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    நிகர இலாபம் ஈட்டாத தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களாக இருப்பின் அவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக தமிழ்நாடு அரசு வழங்க உத்தரவிட்டுள்ளது.

    • உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா?
    • கரூர் வழக்கு விசாரணை நடைபெறுவது எப்படி நம்பிக்கைக்கு உரியதாக இருக்க முடியும்?

    கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக் கூடாது என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது!

    கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

    தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா? ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

    தமிழ் அதிகாரிகளுக்கு நடந்த இந்த அவமதிப்பிற்கு, தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவிற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. சுயமரியாதை, மாநில சுயாட்சி என பெரும் பேச்சுக்கள் பேசியவர்கள் இப்பொழுது வாய் மூடி இருப்பது ஏன்?

    தமிழ்நாட்டில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமான துயர நிகழ்விற்காகத் தமிழர்களிடம் நடைபெறும் நீதி விசாரணையில் தமிழ் நன்கு தெரிந்த அதிகாரி இடம்பெறுவதுதானே சரியானதாக இருக்க முடியும்? தமிழர் நிலத்தின் வரலாறும், அரசியலும் தெரியாத, தமிழர் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத அதிகாரிகள் விசாரணை செய்வது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? அது விசாரணையில் தேவையற்ற தாமதத்தையும், தடங்கலையும் ஏற்படுத்தாதா?

    மணிப்பூர் கலவரத்திற்கான விசாரணையில் அம்மாநில மொழி தெரியாத ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்தால் அம்மாநில மக்கள் ஏற்பார்களா? அல்லது கும்பமேளா நெரிசல் மரணம் குறித்து விசாரணை செய்ய இந்தி தெரியாத அதிகாரியை நியமித்தால் அம்மாநில மக்கள்தான் ஏற்பார்களா? அதிலும், குஜராத் கலவரத்தில் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் கொடூரக் குற்றவாளிகளை விடுவித்து வழங்கிய தவறான தீர்ப்பினை உச்சமன்றமே ரத்து செய்த நிலையில், அந்த நீதிபதியின்கீழ் கரூர் வழக்கு விசாரணை நடைபெறுவது எப்படி நம்பிக்கைக்கு உரியதாக இருக்க முடியும்?

    ஒவ்வொரு ஆண்டும் 10 விழுக்காடு அளவிற்குக் குடிமைப்பணி அதிகாரிகள் இந்த நாட்டின் சேவைப் பணிக்காகத் தமிழர் நிலம் அளித்து வருகின்றது. இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தமிழ் அதிகாரிகள் சிறப்புற பணியாற்றி மொழி, இன, மதம், கடந்து மக்கள் தொண்டாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் சிறப்பான செயற்பாடுகளால் நேர்மையானவர்கள், பணியாற்றல்மிக்க நிர்வாகிகள் என்றே பெயரெடுத்தவர்கள். தமிழ் அதிகாரிகளின் உண்மையும், உழைப்பும் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தவருக்கும் சற்றும் குறைந்தது இல்லை.

    இந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் முதல் இன்றைய எல்லைப் பாதுகாப்பு வரை எப்படித் தமிழர்களின் பங்கு மற்ற மாநிலத்தவருக்குக் குறைந்தது இல்லையோ, எப்படி வரி செலுத்தி, வாக்கு செலுத்தி இந்த நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பேணுவதில் தமிழர்களின் பங்கு மற்ற இனத்தினரை விடவும் முதன்மையாக உள்ளதோ, அதைப்போலவே தமிழ் அதிகாரிகளும் மற்ற மாநில அதிகாரிகளை விடவும் சிறப்பானவர்கள் என்பதே கடந்தகால வரலாறாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் வேண்டாம் என்று கோருபவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் வாக்கு செலுத்த வேண்டாம், வரி செலுத்த வேண்டாம் என்றும் கோருவார்களா?

    தமிழர்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் இந்த நாடு உரிய மதிப்பைத் தராவிட்டால், இந்த நாட்டின் சட்டத் திட்டங்களின் மீது தமிழர்களுக்கு எப்படி மதிப்பு வரும்? நாட்டுப்பற்றுமிக்க, நடுநிலைமை தவறாத தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளை, ஒரு வழக்கு விசாரணையின் உண்மைத்தன்மை பாதிக்கும் என்று கூறி விலக்கி வைப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் நேர்ந்துள்ள தேசிய இன அவமதிப்பாக, மானமிழப்பாகத்தான் பார்க்க முடியும்.

    ஏற்கனவே, ஒரிசா மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த குடிமைப்பணி அதிகாரி கார்த்திகேயபாண்டியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அவதூறு பரப்பி அவமதித்தது அம்மாநில பாஜக. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான கட்சி என்று கூறிக்கொண்டு இனப்பாகுபாடு காட்டி அவமதித்த பாஜகவின் பொய் குற்றச்சாட்டிற்குச் சற்றும் குறைவில்லாதது தற்போதைய இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுமாகும். தமிழர்களின் மனதைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ள இவ்வுத்தரவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

    இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு நியாயமானதாகத் தோன்றுமானால், கரூர் உயிரிழப்பு விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக மனுதாக்கல் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்களின் மனச்சான்றுக்கே விட்டுவிடுகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவர்களின் கல்வியையும், சமூகநீதியையும் பாதிக்கக் கூடிய தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையை பா.ம.க. கண்டிக்கிறது.
    • சமூகநீதிக்கு எதிரான இந்த சட்டத் திருத்த முன்வரைவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டத்தில் திருத்தம் செய்ய தி.மு.க. அரசு முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் கல்வியையும், சமூகநீதியையும் பாதிக்கக் கூடிய தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையை பா.ம.க. கண்டிக்கிறது.

    அரசு வேலைவாய்ப்புகளில் குத்தகை முறை நியமனங்கள், தற்காலிக நியமனங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்ததன் மூலம் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை தி.மு.க. அரசு ஒழித்து வருகிறது. இப்போது தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்கத் துணிந்திருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த சட்டத் திருத்த முன்வரைவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
    • தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும்.

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்த தென்மேற்கு பருவமழை இன்று விலகியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

    அதேபோல் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

    இதையொட்டி தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 24-ந்தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளை நெருங்கி, மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

    • இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு குறித்து பிரதமர் பேச வேண்டும் என வலியுறுத்தல்.
    • தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு குறித்து பிரதமர் பேச வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டு பணிக்குழுவை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக இலங்கை பிரதமரிடம் வலியுறுத்துமாறும், கச்சத்தீவை மீட்பது, பாகிஸ்தான் விரிகுடா பகுதியிலுள்ள நம் மீனவர்களின் மீன்பிடி உரிமையை மீட்டெப்பது பற்றி பேச வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    • தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடும் மழைப்பொழிவை கொடுத்த தென்மேற்கு பருவமழை இன்று விலகியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

    அதேபோல் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா பகுதிகளிலும் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

    இதையொட்டி தமிழகத்தில் இன்று முதல் வருகிற 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வய்ப்புள்ளது.

    தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 18-ந்தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களிலும், 19-ந்தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 20-ந்தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு மகளிருக்கும் தற்போது வரை ரூ.26ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
    • மகளிர் உரிமைத் தொகை கோரி புதிதாக இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் மகளிர் உரிமைத் தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    * மகளிர் உரிமைத்தொகையாக இதுவரை 30ஆயிரம் கோடி ரூபாய் வழங்கி உள்ளோம்.

    * ஒவ்வொரு மாதமும் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    * ஒவ்வொரு மகளிருக்கும் தற்போது வரை ரூ.26ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    * இன்னும் அதிக அளவிர் மகளிர் பயனடைய வேண்டும் என்று கருதி நிபந்தனைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

    * மகளிர் உரிமைத் தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்தியதால் புதியதாக பல மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி பெற்றனர்.

    * மகளிர் உரிமைத் தொகை கோரி புதிதாக இதுவரை 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    * மகளிர் உரிமைத்தொகை கோரி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் மாதம் 30-ந்தேதிக்கு பரிசீலனை செய்யப்பட்டு டிசம்பர் 15 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார். 

    • அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையாக பதிவு செய்யப்படுகிறது.
    • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.

    இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.

    இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.

    இந்தநிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 58.9 சென்டி மீட்டர் மழை பெய்த நிலையில் இந்தாண்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை இயல்பைவிட இந்தாண்டு அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்துள்ளது.

    • அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

    * தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக கூறுவது தவறு. அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கிய கடனுக்கு 5 ஆண்டாக வட்டி கட்டி வருகிறோம்.

    * அ.தி.மு.க. விட்டுச்சென்ற கடனுக்கு 5 ஆண்டாக வட்டி மட்டும் ரூ.1.40 லட்சம் கோடி கட்டியுள்ளோம்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் 128 சதவீத அளவிற்கு கடன் அதிகரித்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டில் 93 சதவீதம் தான் கடன் அதிகரித்துள்ளது.

    * கடன் பற்றி பேச அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு தார்மீக உரிமை இல்லை.

    * சேராத இடம் தேடி போய் சேர்ந்திருக்கிறது அ.தி.மு.க. என்றார்.

    • தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நடவடிக்கையின் பலனாக புவிசார் குறியீடு பதிவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது.
    • இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக் கருவியாக தஞ்சாவூர் வீணை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையின்கீழ் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இயங்கி வருகிறது. இந்த மன்றத்தின் ஒரு அங்கமான காப்புரிமை தகவல் மையம், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து காப்புரிமைகள், பதிப்புரிமைகள் வர்த்தக குறியீடுகள், தொழில்துறை வடிவமைப்புகள், புவிசார் குறியீடுகள் போன்ற அறிவுசார் சொத்துரிமைக்கு மாநில அளவிலான உதவிகளை வழங்குகிறது.

    அந்த வகையில் ஒரு பொருளின் தரம், தனித்துவம் மற்றும் நன்மதிப்பை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்படக்கூடிய புவிசார் குறியீடு பெற தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த புவிசார் குறியீடு விவசாயம், இயற்கை, கைவினை, உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், தயாரிப்புகளுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்குவதற்கும், அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதை தடுக்கவும் புவிசார் குறியீடு முக்கியமாக கருதப்படுகிறது.

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற நடவடிக்கையின் பலனாக புவிசார் குறியீடு பதிவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கிறது.

    இதில் தஞ்சாவூர் வீணை, திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலை பூண்டு, உடன்குடி பனங்கருப்பட்டி ஆகிய 4 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதிலும் இந்தியாவிலேயே புவிசார் குறியீடு பெற்ற முதல் இசைக் கருவியாக தஞ்சாவூர் வீணை உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுமட்டுமல்லாமல், கடந்த 7 மாதங்களில் அதாவது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 10 பொருட்களை அடையாளம் கண்டு அதற்கு புவிசார் குறியீடு கேட்டு, புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் காப்புரிமை தகவல் மையம் விண்ணப்பம் செய்ய உதவியுள்ளது.

    இந்த பட்டியலில், ஜவ்வாது புளி, வந்தவாசி கோரைப்பாய், கொல்லிமலை காபி, கொல்லிமலை பலாப்பழம், பொள்ளாச்சி தென்னை நார், முகவை குழியடிச்சான் சிவப்பு அரிசி, மதுரை அப்பளம், கீழக்கரை தொதல் அல்வா, மதுரை ஜிகர்தண்டா, கன்னியாகுமரி நன்னாரி ஆகியவை அடங்கும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர் செயலர் ச.வின்சென்ட் தெரிவித்தார்.

    • பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    கிட்னி திருட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கிட்னி முறைகேடு குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை அறிந்த உடனேயே முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    * முதலமைச்சர் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.

    * அரசின் குழு பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளில் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததை உறுதி செய்தது.

    * சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது.

    * சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தி கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    * சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

    * அ.தி.மு.க. ஆட்சியிலும் கிட்னி முறைகேடு நடந்துள்ளது.

    * 2017-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    * சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    * விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

    * பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 புரோக்கர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    * தானம் எனும் பெயரில் உடல் உறுப்பை விற்கக்கூடாது என ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    * மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும்.

    * அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    * சென்னை, மதுரை, கோவை உட்பட 4 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகார குழு செயல்படுகிறது.

    * கிட்னி மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் 2 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    * கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×